search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driving license cancel"

    அரியலூர் மாவட்டத்தில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக அனைத்து சிமெண்டு ஆலை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், 108 ஆம்புலன்ஸ் அலுவலர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பேசியதாவது:-

    பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இரு சக்கர வாகனத்தில் அதிக வேகத்தில் சென்று பிரசாரம் செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகளில் இயங்கும் லாரிகள் ஒவ்வொன்றின் வேகத்தை கண்டறிய கருவி பொருத்தபட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைக்க வேகத்தடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்க வேண்டும். தொழிற்சாலைகளில் லாரிகளை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம் தான் பணி கொடுக்க வேண்டும்.

    விபத்துகளை குறைக்க வட்டார போக்குவரத்து அலுவலர் அடிக்கடி வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்லும் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி, அவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். சாலை விபத்தில் அடிபட்ட நபர்கள் மற்றும் இறந்தவர்களின் உடலை 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக எடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். விபத்துகளை தடுக்க சிமெண்டு ஆலை, நெடுஞ்சாலை துறையினர், போலீசார் ஒத்துழைப்பு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    வேலூர் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து 1 கோடியே 43 லட்சத்து 53 ஆயிரத்து 192 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது. 12 ஆயிரத்து 676 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள 8 போலீஸ் உட்கோட்டங்களின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துப் போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் முதல், ஜூலை மாதம் வரை 7 மாதங்களில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 2,119 பேர் மீதும், ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய 35 ஆயிரத்து 665 பேர் மீதும், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டிய 725 பேர் மீதும், ‘ஷீட் பெல்ட்’ அணியாமல் கார் ஓட்டிய 8 ஆயிரத்து 324 பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டிய 14 ஆயிரத்து 310 பேர் மீதும், அதிகபாரம் ஏற்றிய 1,109 வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதேபோல் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள், சீருடை அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள், அதிக உயரத்தில் பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள், மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்தவர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்கள் உள்பட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 834 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதன் மூலம் வாகன ஓட்டிகளிடம் இருந்து 1 கோடியே 43 லட்சத்து 53 ஆயிரத்து 192 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

    மேலும் கடந்த 7 மாதங்களில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய மற்றும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றது, சாலையில் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச் சென்றது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 16 ஆயிரத்து 760 பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

    அதன்பேரில் 12 ஆயிரத்து 676 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    அரூர் பகுதியில் விதிமுறையை மீறி இயக்கிய 83 வாகனங்களுக்கு ரூ.2¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 283 பேரின் ஓட்டுனர் உரிமத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் ரத்து செய்தனர்.
    அரூர்:

    தர்மபுரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் மலர்விழி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் அலுவலர்கள் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை மொத்தம் 328 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.

    அப்போது சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றி வந்தது, அதிக பாரம் ஏற்றி சென்றது, அதிக ஆட்களை ஏற்றி வந்த ஆம்னி பஸ்கள், அதிக ஒலி எழுப்பிய வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மீறி இயக்கிய 83 வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 500 அபராதம் விதித்து அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    மேலும் அதிக பாரம், ஆட்களை ஏற்றி வந்த வாகன டிரைவர்கள், மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக மொத்தம் 283 பேருக்கு 3 மாத காலத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது விதிமுறையை மீறிய வாகன ஓட்டிகளை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் எச்சரிக்கை செய்து அனுப்பினர். 
    ×