search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drowned in sea"

    கூடங்குளம் அருகே கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் ரிஷோர் (வயது 10). அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சந்திராயப்பன் (10). இந்த 2 சிறுவர்களும் நண்பர்கள் ஒன்றாக 5-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் அடிக்கடி ஒன்றாக சென்று விளையாடுவர்கள்.

    நேற்று பகல் 11.30 மணி அளவில் ரிஷோரும், சந்திராயப்பனும் பெருமணல் கடல் பகுதிக்கு குளிக்க சென்றனர். அவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மகன்கள் என்பதாலும் இரண்டு பேருக்கும் நீச்சல் தெரியும் என்பதாலும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிறுவர்கள் கடற்கரையில் விளையாடுவதை தடுக்கவில்லை.

    2 சிறுவர்களும் கடற்கரை ஓரத்தில் அலை அடிக்கும் பகுதியில் குளித்து விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீர் என்று ஒரு ராட்சத அலை அடித்தது. இதில் கரையோரம் குளித்துக்கொண்டு இருந்த 2 சிறுவர்களையும் அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவர்கள் கத்தி அபாயகுரல் எழுப்பினார்கள். அப்போது அருகில் யாரும் இல்லாததால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. அலை சுருட்டி இழுத்துச்சென்றதால் 2 சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி பலியானார்கள்.

    அப்போது சத்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தனர். ஆனால் அதற்குள் 2 சிறுவர்களும் பலியானதால், அவர்கள் 2 சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.

    இதுகுறித்து கூடங்குளம் கடலோர காவல்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெங்களூரு காதல் ஜோடி கடலில் மூழ்கியது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. #Bangalorelovers
    வானூர்:

    புதுவை அருகே தமிழக பகுதியான பெரியமுதலியார்சாவடி, சின்னமுதலியார்சாவடி, ஆரோவில் பகுதியில் ஏராளமான கடற்கரை விடுதிகள் உள்ளன. இங்கு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்து தங்கியிருந்து, புதுவையின் பல்வேறு சுற்றுலா இடங்களை பார்வையிட்டு செல்கின்றனர்.

    நேற்று முன்தினம் மதியம் சின்னமுதலியார்சாவடி கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபரும், இளம் பெண்ணும் வந்தனர். அவர்கள் தங்கள் உடைமைகளை கடற்கரையில் வைத்துவிட்டு கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை அவர்களை இழுத்துச்சென்றது.

    இதை பார்த்து அங்கிருந்த மீனவர்கள் மற்றும் மற்ற சுற்றுலா பயணிகள் கடலில் மூழ்கிய அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்டக்குப்பம் போலீசார் விரைந்து வந்து படகில் சென்று அவர்களை தேடினார்கள். ஆனால் அவர்கள் இருவரையும் மீட்க முடியவில்லை. அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

    அவர்கள் கொண்டு வந்த பை கடற்கரையில் இருந்தது. அதனை போலீசார் சோதித்து பார்த்தபோது அடையாள அட்டைகள், செல்போன்கள் இருந்தன. அந்த வாலிபர் டெல்லியை சேர்ந்த அன்சுன் அவாஸ்கி (வயது 21) என்பதும், அந்த பெண் எனாத்சி வாலியா (21) என்பதும் அடையாள அட்டை மூலம் தெரியவந்தது. எனாத்சி வாலியா ஓய்வுபெற்ற விமான அதிகாரியின் மகள் ஆனார்.

    இவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகின்றனர். இவரும் காதலர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    தீபாவளி பண்டிகை விடுமுறையை கொண்டாட இருவரும் கடந்த 4-ந் தேதி புதுவைக்கு வந்தனர். புதுவையின் பல்வேறு சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு கோட்டக்குப்பத்தில் உள்ள ஒரு விடுதியில் அவர்கள் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் புதுவையில் வாடகைக்கு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சின்ன முதலியார்சாவடி கடற்கரைக்கு வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    அவர்களின் கை பையில் இருந்த செல்போனை சோதனை செய்தபோது, கடைசியாக இருவரும் கடற்கரையில் இருந்து செல்பி எடுத்துள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்களை டெல்லியில் உள்ள உறவினர்களுக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடலில் மூழ்கிய அன்சுன் அவஸ்கி, எனாத்சி வாலியா ஆகியோரை தேடும் பணியில் போலீசார் மற்றும் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். #Bangalorelovers

    காசிமேட்டில் கடலில் மூழ்கி மீனவர் குழந்தைராஜ் பலியானார். அவரது உடல் அதே பகுதியில் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கியது. #Fishermandeath
    ராயபுரம்:

    காசிமேடு, காசிபுரத்தை சேர்ந்தவர் குழந்தைராஜ் (வயது 50). மீனவர். இன்று அதிகாலை அவர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள பழைய மீன் ஏலம் விடும் பகுதிக்கு சென்றார்.

    அப்போது அவர் நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்தார். இதில் கடலில் மூழ்கி குழந்தைராஜ் பலியானார். அவரது உடல் அதே பகுதியில் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கியது. #Fishermendeath

    திருவனந்தபுரம் அருகே கடல் அலையில் சிக்கி நெல்லையைச் சேர்ந்த சிறுமி பரிதாபமாக இறந்தார். 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    திருவனந்தபுரம்:

    நெல்லை அருகே பத்தமடை பள்ளிவாசல் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் அமீது. இவருடைய மனைவி செய்புநிஷா. இவர்களுடைய மகள் பாத்திமா (வயது 9). இவர்கள் உள்பட 11 பேர் ஒரு வேன் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு சென்றனர்.

    விமான நிலையத்தில் ஒருவரை வழியனுப்பி வைத்து விட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு திருவனந்தபுரம் அருகே சங்குமுகம் கடலுக்கு புறப்பட்டனர். சங்குமுகம் கடலில் 11 பேரும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அப்போது கடலில் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிறுமி பாத்திமா உள்பட 6 பேர் சிக்கி கொண்டனர். இதனால் 6 பேரும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர். உடனே அங்கிருந்தவர்கள் கடலில் இறங்கி 5 பேரை பத்திரமாக மீட்டனர். ஆனால் சிறுமி பாத்திமாவை மீட்க முடியவில்லை. கடல் அலை உள்ளே இழுத்து சென்று விட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த வலியத்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் காலை 6 மணியளவில் வெட்டுக்காடு பகுதியில் ஒரு சிறுமியின் உடல் கரை ஒதுங்கி இருப்பதாக வலியத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கடல் அலையில் சிக்கி மாயமான சிறுமி பாத்திமா தான், கடற்கரையில் பிணமாக கிடந்தது என தெரியவந்தது. தொடர்ந்து பாத்திமாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பின்னர் பிரேத பரிசோதனைக்கு பின் பாத்திமாவின் உடல் நேற்று காலை 11 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பாத்திமாவின் உடலை கட்டிப்பிடித்து அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    ×