search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EB Price Hike"

    • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தே.மு.தி.க.வினரின் பெயரை கெடுப்பதற்கு சதி நடக்கிறது.
    • தமிழகம் முழுவதும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    மின் கட்டண உயர்வு, ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதது ஆகியவற்றை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மின் கட்டண உயர்வும், மின் வெட்டும் வழக்கமாகி விடுகிறது. ரேசன் கடைகளில் மக்களுக்கு பொருட்கள் சரியான முறையில் கிடைப்பது இல்லை. மாதம் தோறும் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்குவதாக கூறிவிட்டு ஒரு சிலருக்கு மட்டுமே கொடுத்துள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தே.மு.தி.க.வினரின் பெயரை கெடுப்பதற்கு சதி நடக்கிறது. மக்கள் பிரச்சனைகளுக்காக தே.மு.தி.க. இதுபோன்ற போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவோம்.

    இவ்வாறு பிரேமலதா பேசினார்.

    சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்தன், சூரியா, பிரபாகரன், மாறன், செந்தில் குமார், பழனி, வேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தாம்பரம் சண்முகம் சாலையில் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் செழியன், மகாதேவன் மற்றும் தே.மு.தி.க.வினர் கலந்து கொண்டனர்.

    கோவையில், துணை செயலாளர் பார்த்தசாரதி, தர்மபுரியில் அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தி நின்று தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் தி.மு.க., அரசு 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று திருப்பூர் குமரன் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சிவசாமி, அம்மா பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன், விஜயகுமார் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சி செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, என்.எஸ்.என்.நடராஜன், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன், துணைச்செயலாளர் புதுப்பட்டி பாலு, இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் அட்லஸ் லோக நாதன், வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிசாமி,எம்ஜிஆர்., மன்ற செயலாளர் சிட்டி பழனிசாமி, எம்ஜிஆர்., இளைஞர் அணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன், மாணவரணி செயலாளர் சதீஷ், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், முன்னாள் கவுன்சிலர் ஆண்டிபாளையம் ஆனந்த், பகுதி செயலாளர்கள் பட்டுலிங்கம், குமார், கண்ணன், கருணாகரன், ஹரிஹரசுதன், பி.கே.முத்து, நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் தனபால், ஆண்டவர் பழனிச்சாமி, கவுன்சிலர் தங்கராஜ், மற்றும் சூர்யா செந்தில், நல்லூர் சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தி நின்று தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    • கடந்தகால மின்கட்டண உயர்வுக்கு இந்திய ஒன்றிய அரசை கைகாட்டிய திமுக அரசு, தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு யாரை கைகாட்டப்போகிறது?
    • பாராளுமன்றத்தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வென்ற பிறகு தந்திரமாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு வாக்களித்த மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு பேரிடியாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது.

    ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலையில் தாங்க முடியாத சுமையை திமுக அரசு ஏற்றுவது வாக்களித்து அதிகாரத்தை வழங்கிய மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோன்மையாகும்.

    திமுக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள உயர்த்தப்பட்ட மின்கட்டண அறிவிப்பின்படி, பொதுமக்கள் 400 மின்அலகு வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு மின்அலகு ஒன்றுக்கு ரூ.4.60 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், தற்போது ரூ.4.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 401 மின்அலகு முதல் 1000 மின்அலகு வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றிற்கு 50 காசுகள் வரை சீராக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றுக்கு 40 காசுகளும், கிராமப்புற குடிசை வீடுகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றுக்கு 45 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதுமட்டுமன்றி வேளாண் மற்றும் அரசு விதைப்பண்ணைகள், விசைத்தறி, கிராம ஊராட்சி மன்றங்கள், சிறு குறு தொழில்நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதல் பாதுகாப்புபடை வீரர்களின் குடியிருப்புகள் என அனைத்திற்கும் ஏறத்தாழ 5 விழுக்காடு அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது திமுக அரசு.

    ஏற்கனவே, எரிபொருள் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, சுங்க கட்டண உயர்வு என அடுத்தடுத்த விலை உயர்வால் ஏழை மக்கள் வாங்கும் திறனை முற்றிலும் இழந்து அல்லலுறும் நிலையில் தற்போது மின்கட்டணத்தையும் மீண்டும் உயர்த்தி இருக்கும் திமுக அரசின் சிறிதும் மனச்சான்றற்ற செயல் அப்பட்டமான கொடுங்கோன்மையாகும்.

    கிராமப்புற குடிசை வீடுகளுக்கும், வேளாண்மைக்கும், விதை பண்ணைக்கும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதுதான் திராவிட மாடலா? அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணத்தை திமுக அரசு அதிகரித்திருப்பது சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தும். மேலும் வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தையும் உயர்த்தியிருப்பதன் மூலம் சிறு-குறு தொழில் முனைவோர், சிறு வியாபாரிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் இக்கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுவர். பாஜக அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வால் மீண்டுவரமுடியாமல் முடங்கிய சிறுகுறு தொழில் நிறுவனங்கள் தற்போதுதான் மெல்ல மெல்ல மூச்சுவிடும் நிலையில் தற்போதைய திமுக அரசின் மின்கட்டண உயர்வு அவர்கள் தொழில் செய்ய முடியாதபடி மீண்டும் முடக்கும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்தகால மின்கட்டண உயர்வுக்கு இந்திய ஒன்றிய அரசை கைகாட்டிய திமுக அரசு, தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு யாரை கைகாட்டப்போகிறது? நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் மக்கள் நலனைப் பற்றிச் சிறிதும் அக்கறையின்றி, குருதி உறிஞ்சும் அட்டைப்போல மக்களைக் கசக்கிப் பிழிந்து, வழிப்பறிபோல வரியைப் பறிக்க நினைப்பது சிறிதும் அறமற்ற கொடுங்கோன்மையாகும். பாராளுமன்றத்தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வென்ற பிறகு தந்திரமாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு வாக்களித்த மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

    ஆகவே, மக்களை வாட்டிவதைக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, மின்கட்டணத்தை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கிடும் முறையைக் கைவிட்டு, ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்தும் முறையை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

    • திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் ஏமாற்றம் 2022 தைப் பொங்கல் பரிசு.
    • 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் மின் கட்டண உயர்வு.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக மக்களை அனைத்து வகைகளிலும் வாட்டி வதைப்பதற்கென்றே ஒரு ஆட்சி தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சியாக நடந்து வருகின்றது. வரிக்குதிரை மேல் உள்ள வரிகளைக் கூட எண்ணிவிடலாம், எண்ண முடியாத அளவுக்கு வரிகளையும், கட்டண உயர்வுகளையும் மக்களின் மீது சுமத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் வேதனையில் துடிக்கின்றனர்.

    திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழக மக்கள் கடுமையான மின்வெட்டாலோ, மின் கட்டண உயர்வாலோ பாதிக்கப்படுவது வாடிக்கை. 2011-ல் அம்மா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, மின் பற்றாக்குறையாக இருந்த தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றிக் காட்டியதை அனைவரும் நன்கறிவார்கள்.

    தமிழக மக்களின் சுமையைக் குறைக்க 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தை வழங்கியது அம்மாவின் அரசு. இதன் பலனைக்கூட ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனுபவிக்கக்கூடாது என்ற தீய எண்ணத்துடன் ஆண்டுதோறும் இந்த விடியா

    திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி வருவது எவராலும் ஏற்க முடியாது.

    * திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் ஏமாற்றம் 2022 தைப் பொங்கல் பரிசு.

    * பிப்ரவரி 2022-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்குப் பிறகு விடியா திமுக அரசு தமிழக மக்களுக்கு அளித்த பரிசு சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு என்று பல வரி உயர்வுகள்.

    * குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டோர் வரை, அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் விடியா திமுக அரசு அளித்த பரிசு, பலமுறை பால் பொருட்களின் விலை உயர்வு.

    * 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் மின் கட்டண உயர்வு.

    * தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் இரண்டாம் முறையாக மின் கட்டண உயர்வு. இதன் காரணமாக விசைத்தறி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீட்டு இணைப்பில் பொதுவான பயன்பாட்டாளர்கள் (வணிக கட்டணம் நிர்ணயம்) பாதிப்பு.

    * பாராளுமன்றத் தேர்தலில் 39-க்கு 39 இடங்களைப் பெற்ற இருமாப்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடன், நேற்று முதல் தமிழக மக்களின் நெற்றியில் பட்டை நாமத்தைப் போட்டு மூன்றாம் முறையாக 5 சதவீத மின் கட்டண உயர்வை பரிசளித்திருக்கிறார் விடியா திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர்.

    விண்ணை முட்டும் விலைவாசி உயர்வாலும், 2024, ஏப்ரல் மாதம் முதல் நியாய விலைக் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு போன்றவைகளை வழங்காமலும் மக்களை துன்பத்திற்குள்ளாக்கிய இந்த ஏமாற்று மாடல் அரசு, மூன்றாம் முறையாக மின்கட்டண உயர்வு என்ற ஒரு பேரிடியை தமிழக மக்களின் தலையில் இறக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    * அம்மா ஆட்சியில் மின்கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் 'மின்சாரத்தை தொட்டால்தான் ஷேக் அடிக்கும், மின்சார கட்டணத்தைக் கேட்டாலே ஷேக் அடிக்குது' என்று வசனம் பேசியவாறு வானத்துக்கும், பூமிக்கும் துள்ளி குதித்ததை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை.

    * 'சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்' என்று நாடக வசனம் பேசிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை உயர்த்தி, சொல்லாததையும் செய்துவிட்டார்!

    * ஆட்சிக்கு வந்தவுடன் மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடுவோம் என்று சொன்னதை இந்த கையாலாகாத அரசு நிறைவேற்றியதா? என்று அல்லலுறும் மக்கள் கேட்கிறார்கள்.

    * உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்! மக்களை வாட்டி வதைப்பதே விடியா திமுக அரசின் வாடிக்கை.

    மக்களுக்குத் தேவையில்லாமல் வரி மற்றும் கட்டணச் சுமையை ஏற்றும்போதெல்லாம் அதனை ஒப்பீடு செய்ய, தங்களுக்கு வசதியாக இதர மாநிலங்களையும் விடியா தி.மு.க. அரசு துணைக்கு அழைத்துக்கொள்கிறது. தமிழகத்தில் ஆட்சி செய்யத்தான் மக்கள் வாக்களித்தார்களே தவிர, மற்ற மாநிலங்களை ஒப்பீடு செய்து வரிச் சுமையை தமிழக மக்கள் தலையில் கட்டுவதற்கல்ல. மத்திய அரசு ஆணையின்படி மின்சார வாரியத்தின் இழப்பை, எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியில் செய்ததுபோல் மாநில அரசே ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

    எனவே, விலைவாசி உயர்வு, வரி உயர்வு போன்றவைகளால் மக்களின் கோபம் எரிமலையாக வெடிப்பதற்கு முன்பு, பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டண உயர்வையும், விசைத்தறி மற்றும் சிறு, குறு தொழில்கள், தொழில் நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

    நம்மை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்ற மமதையில் பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைக்கனத்தோடு செயல்படுவாரேயானால், கொதிப்படைந்துள்ள தமிழக மக்கள், விடியா திமுக ஆட்சிக்கு தக்க பாடத்தைப் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்.
    • சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்.

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது பொது மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், மின் கட்டண உயர்வுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள விடியா திமுக அரசுக்கு என் கடும் கண்டனம் !

    பாராளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் விடியா திமுக முதல்வர்.

    மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த விடியா அரசுக்கு?

    "சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்" என்று மேடைதோறும் வாய் கிழியப் பேசிய திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே- மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்!

    உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்!

    மக்களை வாட்டி வதைப்பதே விடியா திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது, மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி, மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    ×