search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elderly attacker"

    தனக்கு எதிராக குறி சொன்னதால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பொது இடத்தில் வைத்து முதியவரை செருப்பால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பரமக்குடி:

    காவல்துறை பொது மக்களின் நண்பன் என்ற வாசகங்கள் போலீஸ் நிலையங்களிலும், பொது இடங்களிலும் எழுதப்பட்டிருப்பதை அடிக்கடி நாம் பார்த்திருக்கலாம்.

    ஆனால் தற்போது ஒரு சில போலீசார் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் மேற்கண்ட வாசகம் சரிதானா? என்று எண்ணத்தோன்றுகிறது.

    குறிப்பாக வாகன ஓட்டிகளிடமும், அப்பாவி மக்களிடமும் போலீசார் காட்டும் கெடுபிடிகள் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கின்றன. இதை தட்டிக் கேட்டால் பொய் வழக்கு போட்டு அவர்களை கைது செய்துவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

    இதே போல் ஏராளமான சட்ட மீறல்களிலும் ஒரு சில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சில போலீசாரின் இதுபோன்ற செயல்களால் ஓட்டுமொத்த காவல்துறைக்கு களங்கம் ஏற்படுகிறது.

    இதனிடையே தனக்கு எதிராக குறி சொன்னதால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பொது இடத்தில் முதியவரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக இருப்பவர் முனியசாமி. ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் அடிக்கடி கோவில்களுக்கு சென்று வருவது வழக்கம்.

    மேலும் ஜோசியத்திலும் இவருக்கு அதீத நம்பிக்கை உண்டு. பரமக்குடியில் கடை வாசலில் அமர்ந்து 50 வயது மதிக்கத்தக்க முதியவர் குறி சொல்லிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு சென்ற சப்- இன்ஸ்பெக்டர் முனியசாமி தான் விரைவில் ஓய்வு பெற உள்ளதாகவும், எனவே எதிர்காலம் எப்படி இருக்கும் என்று குறி கேட்டுள்ளார்.

    அவரது கையை பார்த்து குறி சொன்ன அந்த முதியவர், உங்களுக்கு அரசின் பணப்பலன்கள் கிடைக்க கொஞ்சம் சிக்கலாகத்தான் இருக்கும் என்றும் மேலும் சில எதிர்மறையான கருத்துக்களையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி பொது இடத்திலேயே குறி சொன்ன அந்த முதியவரை மனிதாபிமான மின்றி செருப்பால் சரமாரியாக தாக்கினார்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி மட்டும் தான் அடைந்தனர். சப்- இன்ஸ்பெக்டர் என்பதால் அவரை தடுக்க வில்லை.

    ஆத்திரம் தீர முதியவரை தாக்கிய பின் முனியசாமி அங்கிருந்து கிளம்பினார்.

    இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் பதிவேற்றினர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் முதியவரை அற்ப காரணத்துக்காக செருப்பால் தாக்கிய சம்பவம் பொதுமக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உரியவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.  #tamilnews

    ×