search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly scholarship"

    சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகளை தானம் செய்த தாய்க்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் ஷில்பா வீட்டிற்கே சென்று வழங்கினார். #TirunelveliCollector
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வி.கே.புரம்‌ டானா காளிபார்விளையை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 35). எம்.காம். பட்டதாரியான இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். திருமணம் ஆகவில்லை. இதனால் பழனிக்குமார் தனது தாயார் சாரதாவுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி, மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பழனிக்குமாரை நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிக்குமார் மூளைச்சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து பழனிக்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது தாயார் சாரதா சம்மதம் தெரிவித்தார்.

    இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிக்கு இதயத்தையும், நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும், மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு மற்றொரு சிறுநீரகமும், திருச்சி தனியார் ஆஸ்பத்திரி நோயாளிக்கு கல்லீரலும் தானமாக வழங்கப்பட்டது.

    சாரதாவின் கணவர் கணபதி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் பழனிக்குமார் மட்டுமே உழைத்து தாயை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் பழனிக்குமாரும் இறந்ததால் தனக்கு தமிழக அரசு முதியோர் பென்சன் வழங்கவேண்டும் என்று சாரதா நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீசிடம் மனு கொடுத்தார்.

    அவரது மனுவை பரிசீலித்த கலெக்டர் உடனடியாக சாரதாவுக்கு முதியோர் பென்சனை வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து இன்று காலை சாரதாவின் வீட்டுக்கு நேரில் சென்ற கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சாரதாவை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு அரசின் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை சாரதாவிடம் கலெக்டர் நேரடியாக வழங்கினார்.  #TirunelveliCollector 
    ×