search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephant Village"

    • 1933-ம் ஆண்டு சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி செல்லும் ரெயில்வே வழித்தடத்துக்கு மேலே யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டிருந்தது.
    • பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் இருந்து எழும்பூர், புரசைவாக்கம் பகுதிக்கு செல்பவர்கள் இந்த பாலத்தின் வழியாக சிரமமின்றி விரைவாக சென்று விடலாம்.

    சென்னை:

    சென்னை யானைக் கவுனியில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ரெயில்வே மேம்பால பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து புதிய பாலம் திறக்கப்பட உள்ளது. 1933-ம் ஆண்டு சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி செல்லும் ரெயில்வே வழித்தடத்துக்கு மேலே யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டிருந்தது. வலது புறத்தில் பேசின் பிரிட்ஜ் டிப்போவையும் இடது புறத்தில் சால்ட் சரக்கு கூடத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த இந்த மேம்பாலத்தை புதுப்பித்து புதிதாக கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. பழமையான பாலத்தால் ரெயில்கள் பாலத்துக்கு கீழே செல்வதில் பல்வேறு இடையூறுகள் இருந்து வந்தன. தற்போது புதிய பாலப்பணிகள் 90 சத வீதத்துக்கும் மேல் முடிவடைந்து விட்டதால் ரெயில்கள் பாலத்துக்கு கீழே கடந்து செல்லும் போது, இனி சிரமம் இன்றி வேகமாக கடந்து செல்ல முடியும்.

    இந்த பாலப்பணிகளுக்காக யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் 2017-ம் ஆண்டு மூடப்பட்டு 4 சக்கரவாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு முதல் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் தடை போடப்பட்டது. 2020-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் பாலத்தை புதுப்பித்து முழுமையாக கட்டும் பணிகள் தொடங்கின. இந்த புதிய பாலத்தில் பிரமாண்டமான 7 தூண்கள் பொருத்தப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. பாலத்தின் மேலே நடந்து செல்பவர்களுக்கான பாதையும் உருவாக்கப்பட்டன. ரூ.30.78 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலப்பணிகள் 95 சதவீதம் அளவுக்கு முடிந்திருப்பதாக ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து இன்னும் சில நாட்களிலோ அல்லது இந்த மாத இறுதியிலோ பாலத்தின் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாலம் திறக்கப்பட்டுவிட்டால் பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் இருந்து எழும்பூர், புரசைவாக்கம் பகுதிக்கு செல்பவர்கள் இந்த பாலத்தின் வழியாக சிரமமின்றி விரைவாக சென்று விடலாம். வால்டாக்ஸ் சாலையில் நெரிசல் குறையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    ×