search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers Opposition"

    தஞ்சை-மதுரை நான்கு வழிச்சாலைக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விவசாய நிலங்களில் கற்கள் நடப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். #Farmers #Opposition
    திருவரங்குளம்:

    தமிழகத்தில் தஞ்சை- மதுரை, சென்னை-சேலம், கரூர்-கோவை உள்ளிட்ட 9 பசுமை வழிச்சாலை திட் டங்களுக்கு ரூ.43 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற் காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் அந்தந்த பகுதிகளில் நடந்து வருகிறது.

    சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாயிகள் வழக்கு தொடர்ந்ததால் பணியை தொடர ஐகோர்ட்டு தடை விதித்தது.

    இந்தநிலையில் தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    தஞ்சை-மதுரை இடையேயான 200 கிலோ மீட்டர் தொலைவுள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணிக்காக 6 குழுக்களில் 50 பேர் இடம் பெற்றுள்ளனர். கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை, பெருங்களூர், புதுக்கோட்டை, திருவரங்குளம் பகுதியில் உள்ள நிலங்களில் அளவீடு செய்து கற்களை ஊன்றி அதில் மஞ்சள் வர்ணத்தை பூசி வருகின்றனர். இதையறிந்ததும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலங்களின் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

    திருவரங்குளம், பெரிய நாயகிபுரம், தோப்புக் கொல்லை கிராமங்களில் உள்ள விவசாயிகள் பம்பு செட் பாசனம் மூலம் வெண்டை, கத்திரி போன்ற காய்கறிகளை சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் இவர்களுடைய நிலங்களில் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எதிர்த்து ஏற்கனவே ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர் பாஸ்கர் கூறுகையில், தற்போது புழக்கத்தில் உள்ள சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கு போதுமான இடவசதி உள்ளது. அதை தவிர்த்து விட்டு வேண்டுமென்றே விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே பல ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்யாததால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். தற்போது அவர்கள் நிலத்தையும் இழந்துவிட்டால் வாழமுடியாத நிலை ஏற்படும். எனவே விவசாயிகளுக்கு நியாயமான நீதி கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #Farmers #Opposition


    சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் விவசாயிகள் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #ChennaiSalemGreenExpressWay #FarmersProtest
    சேலம்:

    சேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40 ஆயிரம் வீடுகள், 8 மலைகளும் உடைக்கப்பட உள்ளது.

    சாலை அமைப்பதற்கான நில அளவீடு பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன் கண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள்.



    சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் சேலம் மாவட்டத்தில் 29 கிராமங்களில் 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

    இன்று சேலத்தை அடுத்த காரிப்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி பகுதிகளில் நில அளவீடு பணி நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    போராட்டத்திற்கு தூண்டியவர்கள் கைது செய்யப்பட்டதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மட்டும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் தொடர்ந்து நில அளவீடு பணிகள் துரிதமாக நடக்கிறது.

    தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா பகுதியில் 8 வழிச்சாலைக்காக கடந்த ஒரு வாரமாக நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கொக்கராப்பட்டியில் இருந்து நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது.

    எருமியாம்பட்டியைச் சேர்ந்த காந்தி மனைவி கனிமொழிக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு, ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான 11.4 ஏக்கர் மாந்தோப்பு, தென்னந்தோப்பு, பாசன கிணறு ஆகியவையும் கையகப்படுத்த உள்ளது.

    இதனை அறிந்த கனிமொழி, ஜெகதீஸ்வரி ஆகியோர் நிலம் அளவீடு செய்தவர்களிடம் வந்து நிலத்தை கையகப்படுத்த வேண்டாம், என கண்ணீர் மல்க கூறினார்கள்.

    பாப்பம்பாடி பகுதியில் நிலத்தை அளவீடு செய்தபோது அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன் (வயது 42) என்பவரின் வீட்டின் நடுவே சாலை அமைய இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.



    புதிதாக கட்டிய வீடும் பாதிக்கப்பட இருப்பதால் அவர் வேதனை அடைந்தார். நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து குமரேசன், அவருடைய மனைவி வேடியம்மாள் (34), மகன் சுஜித் (20) ஆகிய 3 பேரும் தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதைப்பார்த்ததும் அருகில் நின்ற ஏட்டு சிவகுமார் மற்றும் பலர் விரைந்து சென்று மண்எண்ணெய் கேனை பறித்தனர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆனாலும் நிலம் அளவீடு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

    தருமபுரி மாவட்டத்தில் 56 கிலோ மீட்டர் தூரத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 1846 விவசாயிகளிடம் 439 ஹெக்டேர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.

    இதற்கான நிலங்களை அளவீடு செய்து, முட்டுக்கல் நடும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. எருமியாம்பட்டி பகுதியில் இருந்து தருமபுரி-சேலம் எல்லையான மஞ்சவாடி கணவாய் வரை நிலங்களை அளவிடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இன்று 9-வது நாளாக பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இருளப்பட்டி கிராமத்தில் அதிகாரிகள் நில அளவீடு செய்ய வந்தனர். அப்போது அதே கிராமத்தில் உள்ள 3 குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தங்களது உடலில் மண்எண்ணெய் மற்றும் பெட்ரோலை கலந்து ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பதாக மிரட்டினார்கள்.

    அவர்கள் கையில் உள்ள தண்ணீர் கேனில் பெட்ரோல் மற்றும் மண்எண்ணெய்யும் இருந்தது. எங்கள் நிலங்களை அளவீடு செய்தால் தீக்குளிப்போம் என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர்.

    அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதனால் அந்த கிராமத்தில் நில அளவிடும் பணியை கைவிட்டுவிட்டு ஏ.பள்ளிப்பட்டி கிராமத்துக்கு சென்று நில அளவிடும் பணியை தொடர்ந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், கலசபாக்கம், சேத்துப்பட்டு, போளூர், செய்யாறு, வந்தவாசி ஆகிய தாலுகாவில், 122 கிமீ தூரத்துக்கு சாலை அமைகிறது. இதற்காக 74 கிராமங்களில் 7237 குடும்பத்தினரின் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

    இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையில் வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மணிலா ஆலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    அங்கு வந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்பட 21 பேரை போலீசார் கூட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று கூறி கைது செய்தனர்.

    இதனால் கூட்டம் நடந்த இடத்தை மாற்றி வேங்கிக்காலில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்க துணைச் செயலாளர் விஜூகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் பசுமை வழிச்சாலை திட்டத்தால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலங்களையும், வீடுகளையும் இழந்து, வீதிக்கு தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே, தங்களுடைய எதிர்ப்பை மத்திய-மாநில அரசுகளுக்கு தெரிவிக்கும் வகையில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வீடுகள், நிலங்களில் வரும் 26-ந் தேதி கருப்பு கொடியேற்றப்படும்.

    ஜூலை 6-ந் தேதி 5 மாவட்ட தலைநகரங்களிலும் பசுமை வழிச்சாலை அமைக்கும் அரசாணையை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கைதான 21 விவசாயிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அவர்களிடம் எஸ்.பி. பொன்னி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து 21 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

    இதுவரை சேலம், தர்மபுரியில் மட்டுமே போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திலும் போராட்டம் பரவியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும், விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதை முன் கூட்டியே தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக, முன்னெச்சரிக்கையாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

    திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி விஜூ கிருஷ்ணன் கலந்து கொண்டார். இவர் கடந்த மார்ச் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற பேரணியை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர்.

    எனவே, இவரது நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா போல தமிழகத்திலும் விவசாயிகளை ஒன்றிணைத்து விடக் கூடாது என்பதை தடுக்க அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் 5 மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். #ChennaiSalemGreenExpressWay #FarmersProtest

    ×