search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "financial institution kidnapping"

    வேலூரில் பட்டப்பகலில் நிதி நிறுவன அதிபரை கடத்திய மர்மகும்பலை சி.சி.டி.வி. கேமரா பதிவு மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 24). கலெக்டர் அலுவலகம் அருகே சர்வீஸ் சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று அலுவலகத்துக்கு சென்று தனது வழக்கமான பணிகளை கவனத்து கொண்டிருந்தார். மதியம் 2 மணியளவில் இரண்டு பைக்குளில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்தனர்.

    அவர்களில் 2 பேர் வெளியில் நின்றனர். மற்றவர்கள் உள்ளே அமர்ந்திருந்த நந்தகுமாரை கழுத்தை பிடித்து வெளியே இழுத்து வந்தனர். அவர் வர மறுத்து வாக்குவாத்தில் ஈடுபட்டார். இருப்பினும் விடாமல் நந்தகுமாரை இழுத்துச் சென்ற கும்பல், அவரை பைக்கில் தூக்கி அமரவைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் கடத்தி சென்றனர்.

    இதில் நந்தகுமார் அமர்ந்திருந்த பைக்கில் அவருடன் 2 பேரும், இவர்களை பின் தொடர்ந்தவாறு மற்றொரு பைக்கில் உடன் வந்த 3 பேரும் சென்றனர்.

    நந்தகுமார் கடத்தி செல்லப்பட்ட சிறிது நேரத்தில் அவரது மனைவிக்கு கடத்தல்காரர்கள் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அப்போது அவரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.

    உடனடியாக இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அலுவலகத்தில் இருந்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் 2 பைக்குகளில் வருவதும் நிதி நிறுவன அதிபரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது பைக்கில் ஏற்றி கடத்திச்செல்வதும் பதிவாகி உள்ளது.

    இதைவைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு நிதிநிறுவன அதிபரையும், கடத்தல் கும்பலையும் தேடி வந்தனர்.

    கடத்தல் கும்பலின் செல்போன் எண்களை வைத்து சைபர் கிரைம் குழுவினர் கண்காணிக்க தொடங்கினர். அதில் பள்ளிகொண்டா, குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதியில் கடத்தல் கும்பல் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. அங்குள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆனாலும் கடத்தல் கும்பல் சிக்கவில்லை. இதனையடுத்து கும்பலை பொறி வைத்து பிடிக்க போலீசார் முடிவுசெய்தனர்.

    நந்தகுமார் மனைவியை கடத்தல் கும்பலிடம் போனில் பேச செய்தனர். அவர் பேசிய போது கும்பல் ரூ. 3 லட்சம் கொடுத்தால் நந்தகுமாரை விடுவிப்பதாக தெரிவித்தனர். பணத்தை வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் உள்ள ஓட்டல் அருகே கொண்டுவருமாறு கூறினர்.

    அங்கு தனிப்படை போலீசார் தயார் நிலையில் இருந்தனர். சிறிது நேரம் கழித்து போனில் தொடர்பு கொண்ட கும்பல் பணத்தை வள்ளலாருக்கு கொண்டுவருமாறு தெரிவித்தனர். பின்னர் ரத்தினகிரி சந்திப்புக்கு வருமாறு தெரிவித்தனர்.

    கடத்தல் கும்பல் போலீசாரிடம் சிக்காமல் அலைக்கழித்தனர்.

    இதனையடுத்து ஆற்காடு, மேல்விஷாரம் நகர பகுதிக்குள் போலீசார் சென்றனர். மேலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, வேப்பூர் சந்திப்பு அருகே காரில் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே கடத்தல் கும்பல் நந்தகுமாருடன் நின்று கொண்டிருந்தனர்.

    இருட்டில் நின்றதால் அவர்கள் யார் என்பது தெரியவில்லை. இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி அவரது டிரைவர் இருவரும் காரை நிறுத்திவிட்டு அவர்கள் அருகே நடந்து சென்றனர்.

    போலீசார் வருவதை கண்ட கும்பல் நந்தகுமாரை விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

    அவரை மீட்ட போலீசார் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். பின்னர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் கும்பல் குறித்து விசாரித்தனர்.

    நந்தகுமார் அணிந்திருந்த தங்க செயின், பாக்கெட்டில் இருந்த பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் யார் என்பது சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    ×