search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "former Chief Secretary"

    குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை செயலாளர், டிஜிபி டிகே ராஜேந்திரன், சசிகலாவுக்கு நோட்டீசு அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #GutkhaScam #Sasikala #RamaMohanaRao
    மதுரை:

    மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:-

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்தது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரி அதிகாரிகள் சென்னையில் உள்ள ஒரு குடோனில் சோதனை செய்தனர்.

    அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்து ஒரு டைரியும் கைப்பற்றப்பட்டது.

    அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய லஞ்சம் பெற்றவர்களின் பட்டியல் இருந்ததாக தகவல்கள் வந்தது.

    அந்த பட்டியலில் தமிழக அமைச்சர், சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டி.கே. ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து விசாரித்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தண்டிக்க உத்தரவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குட்கா ஊழல் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு கடந்த 28.7.2017 அன்று உத்தரவிட்டது.

    இதேபோல சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் குட்கா ஊழல் பற்றிய விசாரணையை சி.பி.ஐ. தற்போது மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் குட்கா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். அவரது பணிக்காலம் முடிந்தபிறகு 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு 30.6.2017 அன்று அரசாணை பிறப்பித்து உள்ளது.

    அவருக்கு பதவி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தின் காரணமாக, குட்கா ஊழல் பிரச்சினையில் அவர் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படவில்லை என்று அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகனராவ் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    தற்போது போயஸ் கார்டனில் சசிகலாவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் குட்கா ஊழல் குறித்து வருமான வரித்துறையினரின் அறிக்கை கைப்பற்றப்பட்டு உள்ளது.

    அதில் தற்போதைய டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பெயர் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அவரின் பதவியை சட்டவிரோதமாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக, முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் டி.கே.ராஜேந்திரனின் டி.ஜி.பி. பதவி நீட்டிப்பை ரத்து செய்யவேண்டும். இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.



    வழக்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசின் தலைமை செயலகம், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ், டி.ஜி.பி., வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அலுவலக அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் இந்த வழக்கில் சசிகலாவை எதிர் மனுதாரராக சேர்த்து அவருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #GutkhaScam #Sasikala #RamaMohanaRao
     
    ×