என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Garudalwar and Veeraragava Perumal"
- ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், வேதாந்த தேசிகன் அவதார உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- அகோபில மடம் 610 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டது.
1. தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி
வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.
2. பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி
வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
3. மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி
வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி.
4. இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே
களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி
துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி
விளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
5. அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி
பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி
வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி
வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
புரட்டாசி சாற்று முறை உற்சவம்
ஸ்ரீபெரும்புதூர், வடபுஷ்கரணி தெருவில், சீனிவாச பெருமாள் மற்றும் வேதாந்த தேசிகன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், வேதாந்த தேசிகன் அவதார உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த உற்சவத்தின் சாற்று முறை தினத்தன்று, திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் வருவது வழக்கம். இதற்காக இரவு 10 மணிக்கு வீரராகவப் பெருமாள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்படுவார். அவரை வரவேற்க, ஸ்ரீபெரும்புதூர் எல்லைக்கு உட்பட்ட, செங்காடு அருகே, வேதாந்த தேசிகன் காத்திருந்து, மேள தாளங்களுடன் வாண வேடிக்கையுடன் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதன்பிறகு மறுநாள் கோவிலில் நடைபெறும் சாற்று முறை உற்சவத்தில் வீரராகவப் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து, இரவு, வேதாந்த தேசிகரும், வீரராகவப் பெருமாளும் இணைந்து, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளிப்பர். மூன்றாவது நாள் அதிகாலை வீரராகவ பெருமாள் விடைபெற்று, திருவள்ளூர் திரும்புவார். இவ்விழாவில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை வழிபடுவார்கள்.
அழகிய சிங்கர்
வைணவ மடங்களில் பிரதானமாகத் திகழும் அகோபில மடம் 610 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டது. செந்தமிழும் வட மொழியும் கலந்து திருமாலைப் பணியும் தொன்மையான மரபு சார்ந்த வைணவ மடங்களில் முதன்மையானது அகோபில மடம்.
அகோபிலம் ஆந்திராவில் ஒரு மலைப் பிரதேசம். அங்கு எழுந்தருளியுள்ள நரசிம்மர் 600 ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி.1398) காஞ்சியில் இருந்த கிடம்பி ஸ்ரீநிவாசாச்சாரியார் கனவில் வந்து அவரை அகோபிலம் வருமாறு அழைத்தார். அகோபில மலையில் அவரது கையில் மாலோல நரசிம்ஹர் விக்ரஹமாக வந்து சேர்ந்தார்.
அத்துடன் ஒரு வயோதிகர் உருவில் வந்து அவரை கிராமம் கிராமமாகச் சென்று மக்களை ஆற்றுப்படுத்த ஆணையிட்டார்.
அதன்படியே அகோபில மடம் உருவானது. அவர் ஆதிவண் சடகோபன் என்ற ஒரு திருநாமத்தை ஏற்று வைணவ சம்பிரதாயம் தழைக்க ராமானுசர் வழியில் விசிட்டாத்வைத மரபைப் பரப்பினார்.
இந்த மடம் வடகலை சம்பிரதாயத்தை சார்ந்தது. ஆதிவண் சடகோப ஜீயர் தென்கலை சம்பிரதாயத்தின் ஆதி குருவான மணவாள மாமுனிகளுக்கு சந்நியாசம் அளித்தார் என்றும் வரலாறு கூறுகிறது. அவரது நாட்களில் வடகலை-தென்கலை வேறுபாடுகள் இல்லை.
ஆந்திராவைச் சேர்ந்த அன்னமாச்சாரியார் திருவேங்கடவன் மேல் பல பாடல்கள் எழுதியுள்ளார். இவர் ஆதிவண் சடகோப ஜீயரின் சீடர் ஆவார்.
ஆதிவண் சடகோப ஜீயர் வழியில் வந்தவர்கள் அழகிய சிங்கர்கள் என்றும் சடகோப ஜீயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். (அழகிய சிங்கம் என்பது நரசிம்மப் பெருமானைக் குறிக்கும்).
இம்மடத்தின் ஆளுமையில் சில திருமால் கோவில்கள் உள்ளன. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில், ஆதனூர் புள்ளபூதங்குடி கோவில்கள், அஹோபில நரசிம்ஹர் கோவில் முதலியன சில. அவை தவிர மடத்தின் மூலம் பல வேத ஆகம பிரபந்த பாட சாலைகளும் நடத்தப்படுகின்றன. இதில் சேர்ந்து படிக்கக் கட்டணம் தேவை இல்லை.
கடந்த அறுநூறு ஆண்டுகளாக தொடர்ந்த குரு பரம்பரை வழியில் பல ஆயிரக்கணக்கான சீடர்கள் கொண்ட ஒரு வைணவ மடமாக அகோபில மடம் செயல்பட்டு வருகிறது. இதன் 44-வது ஜீயர் திருவரங்கம் ராஜகோபுரம் ஆசியாவிலேயே உயர்ந்ததாகக் கட்டினார்.
அவரால் பல வருடம் தேர்வு செய்யப்பட்ட வில்லிவலம் கிருஷணமாச்சாரியார் 45- வது ஜீயராக 1991 ம் ஆண்டு பொறுப்பேற்று நாராயண யதீந்திர மஹா தேசிகன் என்ற சந்நியாசப் பெயர் பெற்றார். அதற்கு முன் இவர் தமிழ்ப் பண்டிதராகவும் பாடசாலை ஆசிரியராகவும் பணியாற்றி வைணவம் சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.
மடத்தின் பொறுப்பேற்றபின் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அஹோபிலம், புள்ளபூதங்குடி, திருவள்ளூர் கோவில்களைச் செப்பனிட்டார். தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தினார்.
"தெய்வம் அல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள் குன்றம்" என்றும், "சென்று காண்டற்கு அரிய கோவில்" என்று ஆழ்வார்கள் அகோபில மலையில் காட்டின் நடுவே உள்ள மாலோல நரசிம்மர் கோவிலைப் பற்றிப் பாடி இருந்தனர்.
எல்லாரும் சென்று பெருமாளைச் சேவிக்க வேண்டும், இறைஅருள் பெறவேண்டும் என்று கருதி அகோபிலத்தில் பக்தர்கள் எளிதில் சென்று சேவிக்கவும் தங்கி அருள் பெறவும் பெரும் பொருட்செலவில் பல வசதிகளைச் செய்தார் 45 ம் பட்டம் அழகியசிங்கர்.
எளிதில் அணுகக்கூடியவராகவும், வெளிப்படையாகப்பேசக்கூடியவராகவும், கடினமான வடமொழி காவியங்களையும் பக்தி இலக்கியங்களையும் பாமரர் அறியும் வண்ணம் எளிய தமிழில் உபன்யாசம் செய்யும் ஆற்றல் கொண்டதால் பக்தர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இந்த அழகியசிங்கர் தனது 87 வது வயதில் அதிகாலை பரமபதம் அடைந்தார். ஸ்ரீரங்கத்தில் தனது ஆச்சாரியாரின் பிருந்தாவனத்தருகில் தானும் பிருந்தாவனம் கொண்டார்.
இவரைத் தொடர்ந்து 46-வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கராக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மகாதேசிகன் 7.5.2009 அன்று பொறுப்பேற்றோர். இவர் தலைமையில் திருவள்ளூர் தலம் முழுமையாக திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
கோவில் அமைப்பு
நாராயணன் விரும்பிப் படுத்த பர்ணசாலையே கர்ப்பக்கிரகமாய் .உருவெடுக்க பல்லவர் - சோழர்கள் காலத்தில் அங்கே ஆகம விதிப்படி ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது. கோயிலின் நுழைவாயிலின் மேல் ஐந்தடுக்கில் கோபுரம் அமைந்தது. அங்கே குடி கொண்ட பெருமாள் ஆழ்வார்கள் காலத்திலிருந்த 'வீரராகவப் பெருமாள்' என்று அழைக்கப்படலானார். தன்னை தரிசிக்கும் பக்தர்களின் பிணிகளைப் போக்கும் சக்தி படைத்தவராக விளங்கவதால் 'பிணிதீர்த்த பெருமாள்' என்றும் 'வைத்திய வீரராகவப் பெருமாள்' என்றும் வழங்கலாயின.
பெருமாள் 'எங்கே படுப்பது?' என்று கேட்கும் விதமாக 'எவ்வுள்?' என்று வினவியதால் 'திருஎவ்வுளூர்' என்று பெயர் பெற்று, அந்த ஊர் இன்று 'திருவள்ளூர்' என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ஆலயத்தில் நுழைந்தவுடன் விஸ்தாரமான ஒரு முற்றம், மையத்தில் பலி பீடம், கொடிமரம்.
அதை கடந்து உட்சென்றால் கோயில் கொண்ட பெருமாளின் கூடம். இரு பதினாறு கால் மண்டபங்களுக்கிடையில் அழகாய் அமைந்த கருடன் சன்னதி. கணமும் கண்ணிமைக்காமல் பெருமாளை தரிசித்தபடி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் கருடாழ்வார். கருடாழ்வாருக்கு நேரெதிரே கிழக்கு திசை நோக்கி வீரராகவப் பெருமாளின் கர்ப்பக்கிரகம்.
அரவணையில் கிடந்த கோலத்தில் பெருமாள் தென்திசையில் தலையும், வடதிசையில் திருவடியும் வைத்து, இடக்கரம் அவர் நாபியில் உதித்த நான்முனுக்கு பிரவண மந்திரத்தை உபதேசிக்க, வலக்கரம் சாலி ஹோத்ரரின் தலை மீது வலக்கரம் வைத்து சயனித்த திருககலத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாள் சன்னதியில் உட்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் லக்ஷ்மி நரசிம்மரின் சன்னதி. வடமேற்கு மூலையில் உள்ள சன்னதியில் மார்பில் விஜயவல்லி துலங்க, பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார் சக்கரத்தாழ்வார்.
வெளிப்பிரகாரத்தில் ஆழ்வார்களுக்கான இரண்டு மணி மண்டபங்கள். அதையடுத்து வசுமதித் தாயார் என்றும் கனகவல்லித் தாயார் என்றும் போற்றப்படும் தாயார் சன்னதி.
கனகவல்லித் தாயார் அமைதியும், கருணையும் துலங்கும் முகத்துடன் காட்சி தருகிறாள். ஸ்ரீ வேதாந்த தேசிகர் இந்தத் தாயாரின் பேரில் 30 ஸ்லோகங்கள் கொண்ட 'ஸ்ரீ ஸ்துதி' பாடியிருக்கிறார். தாயார் சன்னதிக்கு நேர் பின்புறம் தென்மேற்கு திசையில் அமைந்திருக்கும் சன்னதியில் ஸ்ரீராமர், சீதாப்பிராட்டி, இளையபெருமாள், ஆஞ்சநேயர் ஆகியோருடன் காட்சியளிக்கிறார். அடுத்தது ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதி. பாமா, ருக்மணி சகிதம் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறான் புருஷோத்தமன்.
பிரகாரத்தின் வடக்கு திசையில் ஒரு சிறு மண்டபம். அதில் சுவாமியின் கல் பாதங்கள். 'உடல் உபாதைகள் நீங்க வேண்டும்' என்ற பிரார்த்தனை யுடன் வருபவர்கள் இந்த கல் பாதத்தில் மிளகு கலந்த உப்பு சமர்ப்பிக்கிறார்கள். அவர்களின் பிணி நீக்கி அருள்கிறார் வைத்திய வீரராகவப் பெருமாள்.
ஆலய தரிசனம் முடித்து வெளிவந்தால் ஆலயத்தின் வலதுபுறம் ஹிருத்தாபநாசினி குளம். இக்குளத்தில் வெல்லத்தைக் கரைத்து பாலை ஊற்றினால் பண்ணிய பாவங்கள் அனைத்தும் அகலும் என்பது நம்பிக்கை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்