search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hamoon Cyclone"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
    • தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களிலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வங்கக்கடலில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மிக குறைந்த காற்றழுத்தம் உருவானது. அது வலுப்பெற்று காற்றழுத்தமாக மாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    மறுநாள் (சனிக்கிழமை) காற்றின் வேகம் மணிக்கு 49 கிலோ மீட்டராக இருந்ததால் அது குறைந்த காற்றழுத்தம் காற்றழுத்த மண்டலமாக மாறியது. ஞாயிற்றுக்கிழமை காற்றின் வேகம் 61 கிலோ மீட்டராக உயர்ந்ததால் தீவிர காற்றழுத்த மண்டலமாக உருவானது.

    இந்த நிலையில் அந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அந்த புயலுக்கு ஹாமூன் என்று பெயரிடப்பட்டது. வானிலை ஆய்வு மையம் கணித்த படி ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த காற்றழுத்த மண்டலம் புயலாக உருவெடுத்தது.

    மணிக்கு 88 கிலோ மீட்டர் வேகத்தில் அதன் நகர்வு இருந்தது. வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி அந்த புயல் சின்னம் நகர்ந்தது. நேற்று அதன் திசை வங்கதேசம் நோக்கி இருந்தது.

    இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அந்த புயல் சின்னம் தீவிர புயலாக மாறியது. இதனால் வங்கக்கடல் பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசுகிறது. கடல் அலைகள் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

    இதையடுத்து வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களிலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    ஹாமூன் புயல் இன்று மேலும் வலுப்பெறும். அது மேலும் வடமேற்கு திசை நோக்கி நகரும். நாளை (புதன்கிழமை) மதியம் அந்த புயல் வங்கதேசத்தில் கரையை கடக்கும். இந்த புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்காளத்தில் மிக பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்துக்கு இந்த புயலால் மிகப்பெரிய அளவுக்கு மழை வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும் சில கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது.
    • புதிதாக மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் கடந்த 19-ந்தேதி காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அன்று நள்ளிரவிலேயே தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. பின்னர் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு 'தேஜ்' என பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் 'தேஜ்' அதிதீவிர புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு அரபிக்கடலில், சகோத்ரா (ஏமன்) நகருக்கு 330 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், சலாலா (ஓமன்) நகருக்கு 690 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மற்றும் அல் கைடா (ஏமன்) நகருக்கு 720 கி.மீ. தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது. இன்று மதியம் புயல் இன்னும் அதிக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    அதேபோல் வங்கக்கடல் பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு மேற்கே நிலவி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது அந்தமான் தீவுகள் போர்ட் பிளேயருக்கு வட-வடமேற்கில் சுமார் 110 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவிற்கு தென்-தென்கிழக்கே ஆயிரத்து 460 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

    இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. அப்போது, மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இது நாளை காலை மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது.

    இந்த புயலுக்கு ஹாமூன் என்று பெயரிடப்பட்டு உள்ளது. பின்னர் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிற 25-ந்தேதி அதிகாலையில் டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் இடையே வங்காளதேச கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும், கடல் காற்றும் பலமாக வீசி வருதிறது. இதை தொடர்ந்து ஏற்கெனவே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களைக் கரைக்குத் திரும்புமாறும், புதிதாக மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடலோர காவல் படையின் ரோந்து கப்பலான ராணி அபாக்கா மூலம் வங்கக் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் ஒலிபெருக்கி மூலம் புயல் குறித்து எச்சரிக்கை செய்து உடனடியாக கரைக்கு திரும்புமாறு காவல் படையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் புயல் எச்சரிக்கையை அறிவுறுத்தும் வகையில் எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் உள்பட கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களிலும்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் நாளையும் நாளை மறுநாளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிழக்கு பிராந்திய கடலோரக் காவல் படை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், உயிரிழப்பைத் தடுப்பதற்கும் தமிழகம், ஆந்திர பிரதேச மாநிலங்களின் கடல்பகுதியில் ரோந்து சென்று வருகிறார்கள். மேலும் ஹெலிகாப்டர்களுடன் கூடிய கடலோர காவல் படை கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    அரபிக்கடல், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல்களை தொடர்ந்து இன்று முதல் 23-ந் தேதி வரை தென்மேற்கு, தென்கிழக்கு பகுதிகளுக்கும், 26-ந் தேதி வரை மத்திய மேற்கு பகுதிக்கும், 24-ந்தேதி முதல், 26-ந்தேதி வரை வடக்கு பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    • அடுத்த 2 நாட்களில் தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.
    • நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வங்கக்கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வரும் 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைகண்ணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரபிக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது இன்று புயலாக வலுப்பெற்றது. நாளை (22-ந் தேதி) மாலை தீவிர புயலாக நிலவக்கூடும். பின்னர், வரும் 24-ந்தேதி தெற்கு ஓமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும்.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது நாளை மறுநாள் (23-ந் தேதி) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

    குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்னிந்தியப் பகுதிகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீசும். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

    தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அரபிக்கடலில் உருவாகிய புயலுக்கு தேஜ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியா வழங்கிய பெயராகும். இந்தி, உருது மொழியில் தேஜ் என்றால் வேகம் என்று அர்த்தமாகும்.

    அதுபோல வங்கக்கடலில் உருவாக இருக்கும் புயலுக்கு ஹாமூன் என்று பெயரிடப்பட இருக்கிறது. இந்த பெயரை ஈரான் நாடு வழங்கி உள்ளது.

    ஹாமூன் புயலால் தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்க வாய்ப்பு இல்லை. அது வங்கதேசம் நோக்கி நகரும் என்பதால் சென்னைக்கு அதிக மழை கிடைக்காது என்று வானிலை இலாகா கணித்துள்ளது.

    ×