search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HIV blood issue"

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக மேச்சேரி பெண்ணின் கணவர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.

    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

    அப்போது ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்ட ரத்தம் அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்டது.

    2015-ம் ஆண்டு மீண்டும் கர்ப்பமடைந்த அந்த பெண் மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்காக சென்றார். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து, அந்த பெண்ணுக்கு எச்.ஐ.வி. பாதிப்பினை கட்டுப்படுத்தும் வகையில் ஓமலூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அந்த பெண்ணின் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர், மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதிக்கப்படாத ரத்தம் செலுத்தப்பட்டதால் தான் தனது மனைவிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று கோரிக்கை விடுத்தார்.

    ஏற்கனவே விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு பெண்ணுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளவரின் ரத்தம் ஏற்றப்பட்டு, அந்த ரத்தத்தை தானமாக வழங்கியவர் தற்கொலை செய்தார்.

    இந்த நிலையில் மேச்சேரியிலும் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவரின் ரத்தம் ஒரு பெண்ணுக்கு ஏற்றப்பட்ட சம்பவம் நேற்று தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மாவட்ட சுகாதார பணிகள் துறை உயர் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணிையை சந்தித்து மனு கொடுக்கிறார். அந்த மனுவில், தனது மனைவிக்கு எச்.ஐ.வி. பாதித்த ரத்தத்தை மேச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதிக்காமல் ஏற்றியதே காரணம் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    ×