search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "homes hurricane winds"

    பழனி அருகே பலத்த சூறாவளி காற்றால் இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமானது.

    பழனி:

    பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. கோடை காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. மாலை நேரங்களில் மழை பெய்ததால் வெப்பம் ஓரளவு தணிந்தது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால் தற்போது சூறாவளி காற்று வீசி வருவதால் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் உள்ள பட்டாளம்மன் கோவில் தெரு, மாதாரி தெரு ஆகிய பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    நேற்று இரவு திடீரென சூறாவளி காற்று வீசியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் மின் கம்பங்கள் கீழே சாய்ந்தன. இதனால் நெய்க்காரப்பட்டி, ஆர்.கலையம்புத்தூர் ஆகிய பகுதிகள் இருளில் மூழ்கின. இரவு முழுவதும் சூறாவளி காற்றால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்தனர்.

    பலத்த சூறாவளி காற்றால் இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை, ஓடுகள், குடிசைகள் பறந்தன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்தனர். விடிய விடிய தூக்கத்தை தொலைத்து சாலையிலேயே நின்றிருந்தனர்.

    பல இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இரவு நேரம் என்பதால் வெளியே செல்லவும் முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். மேலும் சூறாவளிக்காற்றில் வேப்பமரம் முற்றிலுமாக சாய்ந்து அருகில் இருந்த சரக்கு வாகனத்தில் விழுந்ததில் வாகனம் முற்றிலும் சேதமடைந்தது.

    எனவே அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் முகாமிட்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×