search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ichipatti villagers"

    • இச்சிப்பட்டி கிராமசபை கூட்டம் ,மக்கள் குறை தீர்க்கும் முகாம் உள்ளிட்ட அரசு மக்கள் தொடர்பு முகாம்களில் மனு அளித்தனர்.
    • புறம்போக்கு இடத்தை நத்தமாக வகைமாற்றம் செய்து பயனாளிகளுக்கு வழங்க உகந்த இடமா என ஆய்வு செய்ய வந்தனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் பல ஆண்டுகளாக வீடில்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் பொதுமக்கள் இச்சிப்பட்டி கிராமசபை கூட்டம் ,மக்கள் குறை தீர்க்கும் முகாம் உள்ளிட்ட அரசு மக்கள் தொடர்பு முகாம்களில் மனு அளித்தனர்.

    இந்தநிலையில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ரீஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தாசில்தார் நந்தகோபால், இச்சிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக், இச்சிப்பட்டி வருவாய்த்துறை அதிகாரி சந்திரகலா உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொத்துமுட்டிபாளையம் பகுதியில் உள்ள 5 ஏக்கர் 66 சென்ட் வண்டிப்பாதை புறம்போக்கு இடத்தை நத்தமாக வகைமாற்றம் செய்து பயனாளிகளுக்கு வழங்க உகந்த இடமா என ஆய்வு செய்ய வந்தனர்.

    அப்போது 5 ஏக்கர் 66 சென்ட் இடத்தில் கொத்துமுட்டிபாளையம் பொதுமக்கள் தாவரவியல் பூங்கா என்ற பெயரில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை சப் கலெக்டர் பார்வையிட்டார். அவரிடம் கொத்துமுட்டிபாளையம் பகுதி பொதுமக்கள் , கடந்த 7 ஆண்டுகளாக நாங்கள் இந்த இடத்தில் தாவரவியல் பூங்கா என்ற பெயரில் சுமார் 6000 மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறோம் .மேலும் தாவரவியல் பூங்காவில் உள்ள மரங்களை அழித்துவிட்டு வீட்டுமனை பட்டா வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.

    சப் கலெக்டர் வரும் தகவலை அறிந்த வீட்டுமனை கேட்டு மனு அளித்த கோம்பக்காடு,தேவராயன்பாளையம் புதூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொத்துமுட்டிபாளையம் கிராமத்தில் காத்திருந்து சப்கலெக்டரை சந்தித்தனர். அப்போது இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சப்கலெக்டரிடம் கொத்துமுட்டிப்பாளையம் பகுதியில் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் எனவும்,கொத்துமுட்டி பாளையம் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை வீட்டிற்கு 4 மரங்கள் என பராமரிக்கிறோம். எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.2 தரப்பினரிடமும் "பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சப்-கலெக்டர் கூறி சென்றார்.  

    ×