search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Independence day 2018"

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். #IndependenceDayIndia #EdappadiPalaniswamy
    சென்னை:

    இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றினார். விழாவில் மத்திய மந்திரிகள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேவகவுடா, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே அத்வானி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதேபோல் தமிழகத்திலும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கோட்டைகொத்தளம் உள்பட தலைமைச் செயலகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளித்தது. காலை 9 மணியளவில் கோட்டை கொத்தளத்திற்கு வருகை புரிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின்னர் 9.15 மணியளவில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.


    விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு கோட்டையில் 2-வது முறையாக தேசியக்கொடி ஏற்றியது குறிப்பிடத்தக்கது. #IndependenceDayIndia #EdappadiPalaniswamy #FortStGeorge
    ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டம் செப்டம்பர் 25-ல் தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். #IndependenceDayIndia #PMModi
    புதுடெல்லி:

    நாட்டின் 72-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள், சாதனைத் திட்டங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்து பேசினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    இந்தியா என்ற "தூங்கிக் கொண்டிருந்த யானை" தற்போது எழுந்துவிட்டது. உலக நாடுகளின் கவனம் இப்போது நம் பக்கம் திரும்பியுள்ளது. கோடி கோடியாக முதலீடு செய்யும் மையமாக இந்தியா மாறியுள்ளது. ஜிஎஸ்டி அமல் என்பது ஒரு வரலாற்று வெற்றி. விவசாயத்துறையில் இளைஞர்களை சாதிக்க வைப்பது குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட விவசாயிகளுக்கு நன்றி.

    மீன் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 2-வது நாடாக திகழ்கிறது. வெறும் வாக்குறுதியாக மட்டுமே இருந்த ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் செப்டம்பர் 25-ம் தேதி தொடங்கப்படும். இந்த திட்டம் 50 கோடி இந்தியர்களுக்கு உதவியாக இருக்கும்.

    இந்திய பாஸ்போர்ட்டின் வலிமை இப்போது  அதிகரித்துள்ளது. புதிய விமான நிலையங்கள், சாலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. 2022-ல் சொந்த செயற்கை கோள் மூலம் இந்தியர்களை விண்ணுக்கு அனுப்ப முயன்று வருகிறோம். மனிதனை விண்ணுக்கு அனுப்பிய 4-வது நாடாக இந்தியா மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மத்திய அரசின் லட்சிய திட்டமான இந்த ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டமானது, ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #IndependenceDayIndia #AyushmanBharat #AyushmanBharatScheme #PMModi #Modi
    72-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றினார். #IndependenceDayIndia
    புதுடெல்லி :

    72-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க மூவர்ண தேசியக்கொடியேற்றிய பிரதமர் நரேந்திர மோடி, முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

    தேசிய கொடியை ஏற்றிவைத்த பின்னர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார் மோடி, அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது :- 

    நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள், இந்தியா புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் வலிமையான பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு துறைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. அனைவருக்குமான இந்தியாவை உருவாக்க வேண்டியது நமது கடமை.

    பாஜக ஆட்சியில் எய்ம்ஸ், ஐஐடிக்களை ஏற்படுத்தியுள்ளோம், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை இந்த அரசு உறுதி செய்துள்ளது. அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் களங்கரை விளக்கமாக உள்ளது.  

    பேரிடர் காலத்தில் கருணையுடனும், போர்க்காலத்தில் ஆக்ரோஷத்துடனும் நமது ராணுவ வீரர்கள் உள்ளனர். எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் பக்கபலமாக இருக்கிறார்கள்.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் நீலகிரி மலையில் பூத்துள்ளன. அந்த நீல நிற குறிஞ்சிப்பூக்கள் மூவர்ண கொடியில் உள்ள அசோக சக்கரத்தை நியாபகபடுத்துகின்றன. எல்லோரும் அமரநிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகுக்கு அளிக்கும் எனும் மகாகவி பாரதியின் கவிதையை தமிழில் வாசித்து மேற்கோள் காட்டி மோடி உரை. #IndependenceDayIndia
    நாடு முழுவதும் நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    விழுப்புரம்:

    நாடு முழுவதும் நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறை, தீயணைப்பு, என்.சி.சி. சாரணர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.

    இதனைதொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்க உள்ளார். பின்னர் பல்வேறு துறைகள் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பஸ், ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையங்களில் பயணிகள் பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் கூட்டுரோட்டில் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ரெயில்வே இருப்புபாதை மற்றும் பாதுகாப்பு படை போலீசார் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளை கொண்டு பயணிகள் உடமைகளை சோதனை செய்தனர்.

    அதேபோல் பஸ் நிலையங்களிலும் போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மாவட்ட எல்லைப்பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் லாட்ஜிகளிலும் சோதனை நடத்தும் போலீசார் சந்தேகப்படும்படி யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சுதந்திர தினவிழாவையொட்டி விழுப்புரம் மாவட்டம் போலீஸ் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் விழிப்போடு இருக்கவும், வாகன சோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது உளம் கனிந்த சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #IndependenceDay
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    நம் பாரத நாட்டிற்கு வணிகம் செய்வதற்காக வந்து, படிப்படியாக நம்மை அடிமையாக்கி ஆட்டிப் படைத்த ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து, நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிமையான நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தினத்திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரைத் துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்ததோடு, வன்முறைகளுக்கு இடம் கொடாமல், அஹிம்சை மூலமே அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்த தியாகச் செம்மல்கள் நிறைந்த மாநிலம் நம் தமிழ்நாடு.

    நாட்டின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தங்களின் சொந்த நலன்களை பற்றி சிந்திக்காமல், நாட்டு விடுதலைக்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து போற்றும் பொன்னாள் சுதந்திர திருநாளான இன்னாள் ஆகும்.

    தாய் மண்ணை மீட்கப் போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளின் சிறப்பினை போற்றிடும் வகையில், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, விடுதலை போராட்டத் தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 12,000 ரூபாயிலிருந்து 13,000 ரூபாயாகவும், அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை 6,000 ரூபாயிலிருந்து 6,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது; வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனார் ஆகியோரது வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர சிறப்பு ஓய்வூதியத்தை 6,000 ரூபாயிலிருந்து 6,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது.

    சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பறிய தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்து போற்றிடும் வகையில், தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம், தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னம், தியாகி வாஞ்சிநாதன் நினைவு மண்டபம், வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம், வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம், வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம்.

    தியாகி சுந்தரலிங்கனார் மணி மண்டபம், திண்டுக்கல் மாவட்டத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் நினைவு மண்டபம், என பல்வேறு சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவகங்களை நிறுவி சிறப்பித்து வருவதுடன், விடுதலைப் போராட்ட தியாகிகளின் நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள், மணிமண்டபங்கள் ஆகியவற்றை புனரமைத்தும் வருகிறது.

    மேலும், விடுதலைப் போராட்ட தியாகிகளை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த நன்னாளில், பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கவும், இந்தியத் திருநாட்டை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை வளம் மிக்க முன்னோடி மாநிலமாக உருவாக்கிடவும், நாம் அனைவரும் சாதி, மத, பேதங்களை கடந்து, இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன், அயராது உழைத்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #IndependenceDay #TNCM #EdappadiPalanisamy
    சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறு நாள் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மது கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.
    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறு நாள் (புதன்கிழமை) சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மது கூடங்கள் மூடப்படுகிறது. எனவே, சேலத்தில் உள்ள அரசு உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுக்கடைகள், மது பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

    மேலும், அன்றைய நாளில் மது விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறினார்.
    ×