search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadayam Leopard"

    கடையம் அருகே சிறுத்தை நடமாட்டம் தொடர்வதால், கிராம மக்கள் இரவில் வெளியே நடமாட அச்சப்பட்டு வருகின்றனர். #Leopard

    கடையம்:

    நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமம், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுப்பன்றி, மிளா, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இங்கு பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பியுள்ளனர்.

    வனப்பகுதியில் இருந்து அவ்வபோது ஊருக்குள் புகும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவற்றை வேட்டையாடிச் செல்கின்றன. பெத்தான்பிள்ளை குடியிருப்பு, அழகப்பபுரம், கோவிந்தபேரி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் புகுந்து ஆடுகள், நாய்களை கடித்து குதறி வருகிற‌து. சிறுத்தை நடமாட்டம் தொடர்வதால், கிராம மக்கள் இரவில் வெளியே நடமாட அச்சப்பட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாகவே வன விலங்குகள் அதிகளவில் இப்பகுதியில் நடமாடுகின்றன. இதுவரை பெத்தான் பிள்ளை குடியிருப்பு உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 8-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் பிடிபட்டுள்ளன. அந்த சிறுத்தைகளை வனத்துறையினர் பிடித்து காரையாறு வனப்பகுதியில் கொண்டு விட்டனர். அதன் பின்னரும் தொடர்ந்து இப்பகுதியில் உள்ள தோட்டங்களில் காவலுக்கு இருக்கும் நாய்களை சிறுத்தை கொன்று தின்பது வழக்கமாக நடந்து வருகிற‌து.

    இந்தப் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டது. இதை வனத்துறையினர் மறுத்தனர். தொடர்ந்து சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என அந்தக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து, அந்த கிராம மக்கள் கூறுகையில்,‘‘ பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு கிராமப் பகுதியில் உள்ள மலையடிவாரப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகழிகள் தூர்ந்து விட்டன. மின்வேலியும் செயலற்றுக்கிடக்கிறது. எனவே, வனவிலங்குகள் எளிதில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து விடுகின்றன. வனவிலங்குகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கத் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர். #Leopard

    ×