search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallakurichi Student Death"

    • நான்கு முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்கவில்லை என காவல்துறை தகவல்
    • ஆதாரம் இருந்தும் அதை மறைத்தால் அது சட்டப்படி குற்றம் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

    சென்னை:

    கள்ளகுறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், மாணவி பயன்படுத்திய சொல்போனை விசாரணைக்காக ஒப்படைக்கும்படி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை மூடி முத்திரயிடப்பட்ட உறைகள் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. நான்கு முறை இந்த வழக்கு சம்பந்தமாக சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும், இன்னும் இரண்டு மாதங்களில் இந்த விசாரணையானது முடிவடையும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட ராமலிங்கம் தரப்பு வழக்கறிஞர், பள்ளி தாளாளர் உள்ளிட்டோரின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும், பிரேத பரிசோதனை வீடியோ பதிவு மற்றும் ஜிப்மர் மருத்துவமனையின் அறிக்கை தங்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், மாணவி ஸ்ரீமதி செல்போன் வைத்திருக்கவில்லை என்றும் விடுதி வார்டன் செல்போனில் இருந்துதான் பேசியதாகவும் ராமலிங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, செல்போனை ஒப்படைப்பத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது கேட்டதுடன், செல்போனை ஒப்படைக்காவிட்டால் விசாரணை எப்படி நிறைவடையும்? என்று கேள்வி எழுப்பனார். மேலும் மாணவி பயன்படுத்திய செல்போன் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வியையும் நீதிபதி எழுப்பினார்.

    இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக மாணவியின் தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆதாரம் இருந்தும் அதை மறைத்தால் அது சட்டப்படி குற்றம் என்றும், அதற்காக விசாரணை நடத்தும்படி உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து செல்போன் இருந்தால் அதை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.

    • சமூக ஊடகங்கள், பத்திரிக்கை, காட்சி ஊடகங்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களை வெளியிடுகின்றன.
    • ஏதேனும் தனிநபரோ அல்லது நிறுவனமோ புலன்விசாரணையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் 17 வயது பள்ளி மாணவி இறந்தது தொடர்பான வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு புலன்விசாரணையில் உள்ளது. விழுப்புரம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையினர் மேற்படி வழக்கில் புலன்விசாரணை மேற்கொண்டு, மேற்படி இறப்பு சம்பந்தமாக அனைத்து கோணங்களிலும் புலன் விசாரணை செய்து வருகின்றனர். இவ்வழக்கில் நியாயமான மற்றும் விரிவான புலன்விசாரணை நடைபெற்று வருகின்றது. இவ்வழக்கின் புலன்விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகின்றது.

    சமூக ஊடகங்கள், பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்கள் இது சம்பந்தமாக அவர்களது சொந்தக் கருத்துக்களையும், அறிக்கைகளையும் காணொளி காட்சிகள் வாயிலாக வெளியிட்டும், மேலும் இது சம்பந்தமாக இணையான புலன்விசாரணை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் புலன்விசாரணையை பாதிக்கும் வகையில் அமைகின்றது.

    இத்தகைய சூழ்நிலையில், புலன்விசாரணையின் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையில் எந்தவிதமான பதிவு மற்றும் காணொளி காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாமென்று அனைவரும் வேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

    மேலும், இது தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கும், நியாயமான புலன்விசாரணை மேற்கொள்ளவும் அனைவரும் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி வேண்டிக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

    ஏதேனும் தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான இணையான புலன்விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களுடைய வலைதள கணக்குகள் மற்றும் யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வழக்கு தொடர்பாக யாருக்கேனும் உரிய தகவல் கிடைத்தால் அதனை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் உயர் அதிகாரியின் அலைப்பேசி எண்.9003848126 க்கு நேரடியாக பகிரும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு.
    • இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள், உள்ளூர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், இன்று காலை 6 முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்று கொள்ள வேண்டும், இன்று மாலை 6 மணிக்குள் இறுதிச் சடங்குகள் நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

    மாணவியின் இரு உடற்கூராய்வு அறிக்கைகளையும் ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி இந்த வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார். நேற்றைய விசாரணையின்போது மாணவியின் உடலை பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவு கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத், பெற்றோர்கள் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு கொண்டு செல்ல பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி மாணவியின் உடலுக்கு அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. மாணவியின் இறுதி ஊர்வலத்தில் உறவினர்களும் உள்ளூர் மக்களும் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும், காவல்துறை தெரிவித்துள்ளது. வெளி ஆட்களோ, பிற அமைப்புகளோ இதில் பங்கேற்கக் கூடாது என்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் ஒலிபெருக்கி மூலமாக போலீசார் அறிவுறுத்தினர்.

    • மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுங்பதாக அரசு வழக்கறிஞர் முறையீடு
    • 3 பேர் கொண்ட ஜிப்மர் மருத்துவக் குழு பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ய உத்தரவு

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் பிரேத பரிசோதனையின்போது, தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என தெரிவித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

    அதன்பின்னர் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முறையீடு செய்தார் . அப்போது மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாணவியின் உடல் பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கைகள், மற்றும் பிரேத பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஆகியவற்றை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும் என்றும், 3 பேர் கொண்ட ஜிப்மர் மருத்துவக் குழு, இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும என்றும் உத்தரவிட்டார்.

    மேலும், மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றுக்கொண்டு கண்ணியமாக உடலை அடக்கம் செய்யும்படி பெற்றோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். உடலை பெற்றுக்கொள்வது தொடர்பாக இன்று மதியம் 12 மணிக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும் பெற்றோர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். நாளை 11 மணிக்குள் உடலை பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

    ×