search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanduri Festival"

    • இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் நாகூர் தர்காவுக்கு வருவதால் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
    • கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 3-ம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது.

    இந்த தர்காவுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் இந்த தர்காவுக்கு வருவதால் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 466-ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி தர்காவின் ஐந்து மினாராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள், நாகை மீரா பள்ளிவாசலுக்கு எடுத்து வரப்பட்டு, "துவா' ஓதப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட பெரிய ரதம், சின்ன ரதம், செட்டிப்பல்லக்கு மற்றும் கப்பல் ரதம், சிங்கப்பூரில் இருந்து வர வழைக்கப்பட்ட கொடி உள்ளிட்ட அலங்கார வாகனங்களில், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக நாகை, நாகூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.

    ஆண்டவரின் பாடலை தாஹிரா இசையுடன் இசைத்து வந்த இஸ்லாமியர்கள் கொடியினை வரவேற்றனர். அதனை தொடர்ந்து கொடிக்கு தூவா ஓதப்பட்டு வண்ணமிகு வாணவேடிக்கை முழங்க நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள 5 மினாராக்களிலும் கொடியேற்றப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு நாகூர் ஆண்டவரை பிரார்த்தனை செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வருகிற 2-ம் தேதி இரவு தாபூத்து என்னும் சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலத்தின் முடிவில் பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி 3-ந் தேதி அதிகாலை வரை நடைபெறும்.

    கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 3-ம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அல்ஹாஜ் டாக்டர் செய்யது காமில் சாகிப் காதிரி-நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×