search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karnataka poll"

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரண்டால்தான் மதவாத சக்திகளை முறியடிக்க முடியும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #thirumavalavan

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு மதசார்பற்ற கட்சிகள் பிரிந்து நின்றதால்தான் குளறுபடி ஏற்பட்டது. தேர்தலுக்கு பின்னர் காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். கூட்டணிக்கு முன்பே சேர்ந்திருந்தால் மதவாத சக்திகள் வலுபெறுவதற்கு வாய்ப்பில்லை. இந்திய அளவிலான மதவாத சக்திகளுக்கு இது ஒரு படிப்பினையாகும்.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரண்டால்தான் மதவாத சக்திகளை முறியடிக்கமுடியும் என்பதை கர்நாடக தேர்தல் உணர்த்தியுள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் பா.ஜ.க ஆட்சி அதிகாரத்திற்கு வர இடம் கொடுத்துவிடக்கூடாது. மிகவும் விழிப்பாக இருந்து மதவாத சக்திகளிடம் இருந்து தேசத்தை காக்க வேண்டும்.

    நாளை (22-ந் தேதி) ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கட்சி சார்பற்ற முறையில் மக்கள் திரள் ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்கள். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்பார்கள்.

    தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திட்டக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் நடுவர் நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பாகும். ஆனால் மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக ஆணையத்தை அமைக்க சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்காது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியதாகவே அமையும். கடந்த மாதம் 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு கர்நாடக அரசும் ஒப்புதல் அளித்தது. ஆனால் 2 நாட்களுக்கு பிறகு மத்திய அரசு சில நிலைப்பாட்டை மாற்றியது, ஏன் என்று புரியவில்லை.

    சென்னை அறிவாலயத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில், காவிரி பிரச்சினை குறித்தும், அதில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

    காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. தலைமையில் 9 கட்சிகள் கூடி பேசி செயல்பட்டு வருகிறோம். இந்நிலையில் கமல்ஹாசன் கூட்டிய கூட்டத்திற்கு அழைப்பு வந்தது. ஆனால் அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததற்காக கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார். #tamilnews #thirumavalavan

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் 20 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. #Petrol #Diesel #Chidambaram
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் நிலவும் எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் விலையை தினசரி அடிப்படையில் உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்த நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்தது.

    ஆனாலும் கர்நாடக சட்டசபை தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 20 நாட்களாக உயர்த்தவில்லை. கடந்த மாதம் 24-ந்தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.



    கடந்த 12-ந்தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்த சூட்டோடு சூடாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மீண்டும் கடுமையாக உயர்த்தின. நகரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் விலை 17 மற்றும் 18 காசுகள் விலை உயர்த்தப்பட்டது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்று ரூ.74.80 ஆக இருந்தது. 20 நாட்களுக்கு முந்தை விலை ரூ.74.63 ஆகும்.

    சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.61க்கு விற்பனை செய்யப்பட்டது. இது முன்பு ரூ.77.43 ஆக இருந்தது. அதாவது சென்னையில் லிட்டருக்கு 18 காசுகள் அதிகரித்தது.

    கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.50 ஆகவும்(முந்தைய விலை ரூ.77.32), மும்பையில் ரூ.82.65 ஆகவும் (முந்தைய விலை ரூ.82.48) இருந்தது.

    இதேபோல் டீசல் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டது. டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.66.14 ஆகும். இது ஏப்ரல் 24-ந்தேதி ரூ.65.93 ஆக இருந்தது. அதாவது 21 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.69.79 ஆகும். முந்தைய விலை ரூ.69.56. சென்னையில் லிட்டருக்கு 23 காசுகள் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    மும்பையில் நேற்று டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.43 ஆகவும்(முந்தைய விலை ரூ.70.20), கொல்கத்தாவில் ரூ.68.68 ஆகவும்(முந்தைய விலை ரூ.68.63) இருந்தது.

    டெல்லியில் பெட்ரோல் விலை 56 மாதங்களில் இல்லாத அளவிற்கும், டீசல் விலை இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை தினசரி விலை மாற்றம் கொண்டு வரப்பட்ட கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி, ஒரு லிட்டர் பெட்ரோல் 65 ரூபாய் 46 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் 56 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி பார்த்தால், அன்றிலிருந்து நேற்று வரை ஒரு லிட்டர் பெட்ரோல் 12 ரூபாய் 15 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் 13 ரூபாய் 66 காசுகளும் அதிகரித்துள்ளது. தினசரி விலை மாற்றும் செய்து இன்னும் ஓர் ஆண்டு நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இதுபற்றி முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில், “நாம் பழைய நிலைக்கு மீண்டும் செல்கிறோம். தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டதால் டீசல், பெட்ரோல் மீது அதிக வரி விதிக்கப்பட்டு உள்ளது. நுகர்வோர் மீது சுமை ஏற்றப்பட்டு இருக்கிறது. கர்நாடக தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இடைவேளை விடப்பட்டு இருந்தது” என்று கிண்டலாக குறிப்பிட்டார்.  #Petrol #Diesel #Chidambaram 
    ×