search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthi P. Chidambaram"

    • தி.மு.க.-காங்கிரஸ் வலிமையான அணியாக இருக்கிறது
    • சபை அறிந்து, காலம் அறிந்து கருத்துக்களை பேச வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் காங்கிரஸ், கூட்டணி காரணமாக மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுப்பதில்லை. தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி அமைக்கிறோம். மற்ற நேரங்களில் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தால் மட்டுமே கட்சி வளரும் என்று கார்த்தி ப. சிதம்பரம் எம்.பி. கூறினார். அவரது இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கட்சிக்குள் பலரும் கருத்துக்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர பிறந்த நாளை யொட்டி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளை கவுரவிப்பது மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தி.நகரில் நடந்தது.

    இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது சூசகமாக கார்த்தி ப.சிதம்பரம் பேச்சுக்கு பதில் அளித்து அவருக்கு அறிவுரை வழங்குவது போல் பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் காமராஜர் வழியில் செயல்பட்டு வருகிறது. நமக்கென்று சில சங்கடங்கள் இருந்தாலும் பணிகளில் சுணக்கம் காட்டுவது கிடையாது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை செய்து வருகிறோம்.

    இந்திய அளவில் வலிமையாக இருந்தது காங்கிரஸ். மாநில கட்சிகள் வளர்ந்த போது சில மாற்றங்கள் ஏற்பட்டது.

    2 எம்.பி.க்களை மட்டுமே வைத்திருந்த பா.ஜனதா ஏதோ ஒரு வகையில் பிரசாரத்தை வலிமையாக மேற்கொண்டு வலிமையாகி விட்டார்கள்.

    இப்போது ராகுலின் நடை பயணத்தால் வலிமை பெற்றுள்ளோம். எதை எதை எப்போது பேச வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. அப்போதுதான் பேச வேண்டும். அந்த பேச்சுக்குதான் மரியாதை இருக்கும். சபை அறிந்து, காலம் அறிந்து, கட்சி தலைமையோடு கலந்து பேசி கருத்துக்களை பேச வேண்டும்.

    பல மாநிலங்களில் கூட்டணி அமைய பல சுற்று பேச்சுக்கள் நடந்தது. அப்படியும் சில மாநிலங்களில் சிக்கல் ஏற்பட்டது.

    ஆனால் தமிழ்நாட்டில் இரண்டே சுற்றுக்கள் பேசி வலிமையான தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். நம்மை பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ். வலிமையான எதிரி. பா.ஜனதாவையும், ஆர்.எஸ்.எஸ்சையும் மேலும் பலவீனமாக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

    பிறர் பார்த்து ஏளனம் செய்யும்படி எதையும் பேசக் கூடாது. அப்படியானால் தான் மக்கள் திரும்பி பார்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×