என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "k.balakrishnan"
- தமிழகத்தில் 20 மசோதாக்கள் ஒப்புதல் தரப்படாமால் இழுத்தடிக்கப்படுகின்றன.
- ஆளுநரின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாடு முழுமையும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் நிழல் அரசாங்கங்களை நடத்த மத்திய அரசு முனைந்து வருகிறது. தமிழகத்தில் ஆர்.என்.ரவி, கேரளாவில் ஆரிப் முகமதுகான், தெலுங்கானாவில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட ஆளுநர்கள் கடைப்பிடிக்கும் போக்குகள் அரசியல் சாசனத்தை அத்து மீறுபவை.
சர்ச்சைக்குரிய பேச்சுக்கள், அரசியல் சாசனம் மீறிய நடவடிக்கைகள், சட்டமன்றங்களை அவமதிக்கும் வகையில் மசோதாக்களை கிடப்பில் போடுவது என ஆளுநர்களின் அத்துமீறல்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்கள் ஒப்புதல் தரப்படாமால் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியே தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் தருவதில் தாமதம். தற்போது அவசர சட்டமும் காலாவதியாகி விட்டது. இது உயிர் குடிக்கும் பிரச்சினை. கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் 30 உயிர்கள் வரை பலியாகி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
தாமதமாகிற ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் உயிர்களோடு விளையாடுகிற விபரீதமாக உள்ளது. ஆனால் ஆளுநர் ரவி இதை உணர்ந்தும் மத்திய அரசின் கைப்பாவையாக மட்டும் செயல்படுகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சட்டமன்றம் துவங்கிய முதல் நாளான அக்டோபர் 17, 2022 அன்றே ஆன்லைன் சூதாட்ட தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கும் அனுப்பப்பட்டது. நவம்பர் 10 வரை பதில் இல்லை, ஆளுநர் தரப்பில் இருந்து விளக்கமும் கேட்கப்படவில்லை என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். அதற்கு பிறகும் இரண்டு வாரம் ஆளுநர் தரப்பில் அசைவில்லை. ஆளுநரை நேரில் சந்திப்பதற்கும் வாய்ப்பு தரப்படவில்லை.
கடைசியில் நவம்பர் 24 அன்று ஆளுநர் விளக்கம் கேட்கிறார். முழுமையான தடை என்பது சென்னை உயர்நீதி மன்ற ஆணைக்கு முரணானது என்பது ஆளுநர் கேட்ட விளக்கம். தமிழக அரசு 24 மணி நேரத்திற்குள்ளாக பதில் தந்து விட்டது.
இது பகுதி தடை தான்; தேவையான அளவிற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது; அரசியலமைப்பு சட்டத்தின் 7 வது அட்டவணை பட்டியல் 2ல் உள்ள பிரிவுகளின்படியே இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதற்கு பிறகும் ஆளுநர் செய்த தாமதத்தால் அவசர சட்டமும் காலாவதியாகிவிட்டது.
மக்களின் உயிரோடு விளையாடாமல் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநரை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் பள்ளியைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- சிபிசிஐடி போலீசார் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான அமைக்கப்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை துரிதமாக நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டுகிறோம்.
முதலமைச்சர் இப்பிரச்சனையில் தலையிட்டு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். கனியாமூர், சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்காவது தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும்.
இவ்வாறு செய்வதே பள்ளி மாணவ, மாணவிகள் மனஉளைச்சலின்றி கல்வியில் கவனம் செலுத்திட இயலும். மாணவர்களின் கல்வி நலனை கவனத்தில் கொண்டு சிபிசிஐடி விசாரணையை விரைவாக முடித்து அதன் பின்னர் பள்ளி புனரமைப்பு பணிகளை அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் பள்ளியைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி நிர்வாகமே புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள அனுமதியை திரும்ப பெற வேண்டும். ஸ்ரீமதி மரணம் குறித்து அமைக்கப்பட்ட சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரணை நடத்தி விரைவில் குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்ய வேண்டும்.
அப்பாவிகளை கைது செய்வது, குண்டர்சட்டத்தில் வழக்கு தொடுப்பது, சிறையில் அடைப்பது போன்ற போலீசாரின் நடவடிக்கைகளை முற்றிலும் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துவது ஏழை மக்களின் வாழ்வை மோசமாக்கும்.
- மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறையை அமல்படுத்த வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் இன்று முதல் மின்சார கட்டணம் ரூ.55 முதல் ரூ.1130 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 6 சதவிகிதம் என்ற அளவில் மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை ஏழை, எளிய, நடுத்தர மக்களது வாழ்வையும், சிறு-குறு தொழில்கள், சிறிய நடுத்தர வியாபாரிகள் வாழ்வினையும் மோசமாக்கி விடும் என்பதை தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை இதுவரை இல்லாதது என்பதையும் கவனப்படுத்துகிறோம். அரிசி, கோதுமை உள்ளிட்டு அனைத்து உணவுப் பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வரலாறு காணாத அளவில் விலைகள் உயர்ந்துள்ளன.
மேலும், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு ஆகியவை சங்கிலித் தொடர் போன்று அனைத்து பொருட்களின் விலை உயர்வையும் வேகப்படுத்திவிட்டது. மோடி அரசின் பொருளாதாரக் கொள்கையை கண்டிக்கும் தமிழ்நாடு அரசு, தன் பங்கிற்கு மின் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்ற செயலாகும்.
உத்தேசித்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக்களும், சிறு-குறு தொழில் முனைவோர்களும் கருத்து கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்டும், பல்லாயிரக்கணக்கான மனுக்கள் அளித்தும் வலியுறுத்தினர்.
ஆனால் அவைகளை புறந்தள்ளி ஏற்கனவே உத்தேசித்த மின் கட்டண விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி படி, மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையும் நடைமுறைப்படுத்தாமல் மீண்டும் பழைய முறையிலேயே 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் கட்டணம் கணக்கிடப்படும் என்ற அறிவிப்பும் செய்துள்ளது.
மின்வாரிய நெருக்கடியை சமாளிக்க அரசியல் கட்சிகள், துறைசார்ந்த நிபுணர்கள், செயல்பாட்டாளர்கள் முன்வைத்துள்ள ஆக்கப்பூர்வமான மாற்று ஆலோசனைகளை செயல்படுத்துவதற்கு மாறாக மக்கள் தலையில் சுமையை ஏற்றுவது அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும் என சுட்டிக்காட்டுகிறோம்.
எனவே, ஏழை, எளிய உழைக்கும் மக்களையும், நடுத்தர மக்களையும், சிறுகுறு தொழில்களையும் கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்துவதோடு, மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறையை அமல்படுத்த வேண்டுமென்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அனைவருக்கும் நியாயமான கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் கடமையை மாநில அரசுகள் ஏற்றுள்ளன.
- மத்திய அரசு மின்சார கொள்கையை மாற்றியமைக்க முயற்சிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தனியார் பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்கு ஆதரவாக, மாநிலங்களின் மின் நுகர்வினை கட்டுப்படுத்தும் கொள்கையை மத்திய அரசு நிர்ப்பந்திக்கிறது. இதனால் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மோடி அரசு தனது கொள்கையை உடனடியாக திரும்பப் பெற்று, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்திட வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மின்சாரம், மக்களின் இன்றியமையாத அடிப்படைத் தேவையாக உள்ளது. அன்றாட வாழ்க்கைக்கும், வேலைவாய்ப்பிற்கும் மின்சாரமே அடிப்படையாகும். அனைவருக்கும் தடையற்ற மின்சாரத்தை, நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் கடமையை மாநில அரசுகளே ஏற்றுள்ளன. அதே சமயத்தில் மத்திய அரசாங்கம், தனியார் பெருமுதலாளிகளின் லாபத்தை மனதில் கொண்டு, மின்சார கொள்கையை மாற்றியமைக்க முயற்சிக்கிறது.
தனது போக்கிற்கு மாநில அரசுகளையும், மின்வாரியத்தையும் நிர்ப்பந்திக்கிறது. இதனால் ஏற்படும் சுமை அனைத்தும் சாமானிய மக்களின் தலையிலேயே விடிகிறது. ஏற்கனவே, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும், தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தமிழ்நாட்டின் மீது மத்திய அரசாங்கம் கொடுத்து வருகிறது. அதன் காரணமாக நுகர்வோருக்கு கடுமையான கட்டணச் சுமை அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மின் விநியோகத்திலும் லாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட விதிகள் புகுத்தப்படுகின்றன. மோடி அரசின் இந்த போக்கை முன் உணர்ந்துதான் மின்சார திருத்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகு நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாக்கி வைத்திருப்பதாக சொல்லப்படும் ரூ. 926 கோடியோ, ஒட்டுமொத்தமாக மாநிலங்கள் பாக்கி வைத்திருக்கும் ரூ. 5085 கோடிகள் என்பதோ மத்திய அரசால் அனுமதிக்க முடியாத தொகை அல்ல. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களை நடத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய பெருமுதலாளிகள் ரூ.2 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் கட்டணம் பாக்கி வைத்துள்ளார்கள்.
அவர்கள் அந்த தொகையை செலுத்திட ஆண்டுக்கணக்கில் அவகாசம் கொடுக்கும் மோடி அரசுதான் – 12 மாநிலங்களில் வாழும் 64 கோடி மக்களின் வாழ்க்கையை இருளில் தள்ளுவோம் என்று மிரட்டுகிறது. தனியார் பெருமுதலாளிகள் வங்கியில் கடனாகப் பெற்ற சுமார் 11 லட்சம் கோடிகளை வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்களின் பட்டியலைக் கூட வெளியிட அரசு தயங்குகிறது. இதனோடு ஒப்பிட்டால் மாநிலங்களின் பாக்கித் தொகை ஒன்றுமே இல்லை. ஆனாலும் கூட அதனை காரணமாக்கி, பட்டியல் வெளியிட்டு, தனது கொள்கைகளை அமலாக்க நிர்ப்பந்திப்பதன் நோக்கம் என்ன?. பெருமுதலாளிகளுக்கு வெண்ணையும், சாமானிய மக்களுக்கு சுண்ணாம்பும் தடவுவதுதான் மோடி அரசின் கொள்கை என்பதை மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்துகிறது.
சாமானிய மக்களின் மீதும், சிறு குறுந் தொழில்களின் மீது மின்வெட்டை சுமத்தும் கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கண்டிக்கிறது. உடனடியாக தனது கொள்கையை திரும்பப் பெற்று அனைத்து மக்களுக்கும் தடையில்லாத மின்சாரத்தை நியாயமான கட்டணத்தில் உறுதி செய்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு பேசிய அரசியலின் மர்மம் என்ன? என சிபிஎம் கேள்வி
- அண்ணாமலை ஆளுநருக்கு வக்காலத்து வாங்குவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக ஆளுநரை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேச உரிமையுள்ளது. அத்தகைய சந்திப்பை சிபிஐ (எம்) கேள்வியெழுப்பவில்லை. அதேசமயம், "நாங்கள் அரசியல் பேசினோம்; ஆனால் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது" என ரஜினிகாந்த் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். "பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியாத" அளவுக்கு பேசிய அரசியலின் மர்மம் என்ன? ஆளுநர் அரசியல்வாதியாகவும், ஆளுநர் மாளிகையை அரசியல் கட்சி அலுவலகமாகவும் மாற்றுவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதையே சிபிஐ (எம்) கேள்விக்குள்ளாக்கியது.
இக்கேள்விக்கு ஆளுநரோ, ஆளுநர் அலுவலகமோ பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, முந்திரிக்கொட்டையைப் போல் முந்திக்கொண்டு அண்ணாமலை பேட்டியளிக்க எந்த அவசியமுமில்லை. அண்ணாமலை ஒன்றும் ஆளுநரின் செயலாளரோ, செய்தி தொடர்பாளரோ அல்ல; அப்படியிருக்கும் போது வரிந்துகட்டிக் கொண்டு அண்ணாமலை ஆளுநருக்கு வக்காலத்து வாங்குவது "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல் உள்ளது.
மாநில அரசின் உரிமைகளை பறிப்பது, மத்திய அரசின் கொள்கைகளை நேரடியாக தமிழ்நாட்டில் நுழைப்பது, மாநில அரசுக்கு தெரியாமலேயே பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடத்துவது, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து தமிழ்நாட்டிற்கு ஏற்ற ஒரு கல்விக்கொள்கையை உருவாக்க தமிழக அரசு ஆலோசனைக்குழு அமைத்திருக்கிற நிலையில், புதிய கல்விக்கொள்கையை நிறைவேற்றுவதற்கு பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் கூட்டத்தை நடத்துவது போன்ற காரியங்களை தமிழக ஆளுநர் செய்து வருகிறார்.
ஆளுநர் என்ற எல்லையைத் தாண்டி ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மேடைகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரின் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கனவே கடும் விமர்சனத்தை தமிழகத்திலேயே உருவாக்கியுள்ளன. இந்த சூழலில் ஆளுநர், ரஜினிகாந்திடம் பகிர்ந்து கொள்ள முடியாத அரசியல் பேசியது அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்பது சாதாரண குடிமகனுக்கும் தெரிந்ததாகும். ஆனால், ஐ.பி.எஸ். அண்ணாமலைக்கு இந்த அடிப்படை விசயம் புரியாமல் போனது ஏன்? .
தேர்தல் பத்திரங்கள் வழியாகவும், கார்ப்பரேட் கம்பெனிகளில் சுரண்டல்களில் பங்குபெற்றதன் வழியாகவும் பல்லாயிரம் கோடிகளை சுருட்டி அதைவைத்து தமிழ்நாட்டில் பாஜகவுக்கு உயிரூட்ட அண்ணாமலை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் படுதோல்வியடைந்துள்ளன. இந்நிலையில் ஆளுநர் அலுவலகத்தை தங்கள் கட்சி அலுவலகமாக மாற்றுகிற முயற்சியும் பகிரங்கமானதன் விளைவே அண்ணாமலையின் ஆதங்கத்திற்கு காரணமாகும்.
பாஜகவைப் போல மன்னிப்பு கடிதம் சுமந்த பாரம்பரியத்தில் வந்தவர்கள் அல்ல கம்யூனிஸ்ட்டுகள், சுதந்திரப்போராட்டத்திற்கு துரோகமிழைத்த பாஜகவின் தலைவராக இருந்து கொண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் பேசுவதற்கு விசயமில்லாத சூழ்நிலையில், ஆளுநருக்கு வக்காலத்து வாங்கி கம்யூனிஸ்ட்டுகள் மீது அண்ணாமலை தாக்குதல் தொடுத்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த காலத்திலும் யாருக்கும் 'பி' டீம் ஆக இருந்ததில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ். தோன்றிய காலம் முதல் ஆங்கிலேயர்களுக்கு 'பீ' டீம் ஆகவும், ஆட்சிக்கு வந்த பிறகு கார்ப்பரேட்டுகளின் 'பீ' டீம் ஆகவும் செயல்படுவதற்காக மட்டுமே அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. அதன் தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு கம்யூனிஸ்ட்டுகளை விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை. மக்கள் செல்வாக்கை பெற முடியாமல் புறக்கடை வழியாக ஆளுநர் மூலம் அரசியல் செய்ய முயற்சிக்கும் பாஜகவின் எண்ணம் பகல் கனவாகவே முடியும்.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.
- வன நிலங்களில் கால்நடைகள் மேய்க்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
- விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் எல். சுந்தரராஜன், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன் ஆகியோர் சந்தித்தனர்.
இது குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தொகை எதுவும் பெறாமல் விவசாயிகளிடம் திருப்பி கொடுக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு, நன்றி தெரிவித்துக் கொண்டோம்.
திட்டம் செயல்படாத நிலையில் நிலத்தை திரும்பக் கொடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் பல்லாண்டு காலமாக போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.
மாநிலம் முழுவதும் நீர்நிலை புறம்போக்குகளில் வாழ்ந்து வரும் மக்களை அங்கிருந்து அகற்றிட நீதிமன்றங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.கடந்த காலத்தில் அதிமுக அரசு உரிய ஆவணங்களுடன் வழக்குகள் நடத்தாதன் விளைவாகவே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும், மக்களை பாதிக்காத வகையிலும் உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடுத்து இம்மக்களை பாதுகாக்க வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல பரப்பளவை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு விஸ்தரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே பொதுமக்களுக்கு விலக்கு கேட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேனி மாவட்டம், மேகமலை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் எட்டு ஊராட்சிகளில் வசிக்கும் மக்களை வன நில ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.
இதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும்.
மேலும் வன நிலங்களில் கால்நடைகள் மேய்க்க நீதிமன்றம் விதித்துள்ள தடையை அகற்றும் வகையில் அரசின் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து கால்நடைகளையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ராமதாஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின பள்ளி மாணவன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை விபத்து என்று வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே இந்த வழக்கில் சிபிசிஐடி புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை ஆய்வு நிறுவனமாக மாற்றவும், அதில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல், கடல்சார், வரலாறு மற்றும் தொல்லியல் ஆகிய பாடங்களில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களை பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் தொல்லியல் பட்டத்திற்கான இணைச் சான்று வழங்கிட வேண்டும்.
அரசாணை எண் 354 அடிப்படையில் அரசு மருத்துவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கப்பட்ட இடத்தை ஒப்படை செய்ய நடவடிக்கை, திருமங்கலம் முதல் புளியரை வரை அமைக்கப்படும் நான்கு வழிச்சாலையை தென்காசி மாவட்டத்தில் முப்போகம் விளையும் விளை நிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று வழியில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் முதல் சித்தூர் வரை புதிதாக ஆறுவழிச்சாலை முப்போகம் விளையும் நிலங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விளை நிலங்களை பாதுகாக்கும் வகையில் மாற்று வழியில் சாலை அமைத்திட வேண்டும். விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தினோம்.
முதலமைச்சர் அனைத்துப் பிரச்சனைகளையும் கவனமுடன் கேட்டார். மக்களை பாதிக்கும் வகையில் அரசு எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடாது என்றும், நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்