search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala CM Pinarayi Vijayan"

    கேரள மந்திரிகளின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். #PinarayiVijayan #KeralaMinister
    திருவனந்தபுரம்:

    கேரளாவை சமீபத்தில் புரட்டிப்போட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் மாநிலம் முழுவதும் சீர்குலைந்தது. அங்கு மறுசீரமைப்பு பணிகளுக்காக வெளிநாடுகளில் வாழும் கேரளவாசிகளிடம் இருந்து நன்கொடை திரட்ட மாநில அரசு முடிவு செய்தது. இதற்காக முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளை வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது.

    ஆனால் முதல்-மந்திரி பினராயி விஜயனின் பயணத்தை தவிர, மந்திரிகளின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது. இதற்கு பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    நிவாரண நிதி திரட்டுவதற்காக தற்போது அமீரகம் சென்றுள்ள அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மந்திரிகளின் வெளிநாடு பயணம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் நேரடியாக அனுமதி கேட்டதாகவும், அப்போது வாய்மொழியாக உறுதி அளித்துவிட்டு தற்போது தடை விதித்து இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதன்மூலம் பிரதமர் வார்த்தை தவறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

    பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக இருந்த போது அங்கு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க வெளிநாட்டு உதவிகளை ஏற்றுக்கொண்டதாக கூறியுள்ள பினராயி விஜயன், ஆனால் கேரள வெள்ள விவகாரத்தில் தனது நிலையை அவர் மாற்றிக்கொண்டு இருப்பதாகவும் குறை கூறியுள்ளார்.  #PinarayiVijayan #KeralaMinister 
    சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #Sabarimala #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக ஐயப்பன் கோயிலுக்கு ஆபரணங்களை அளித்துவரும் பந்தளம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

    இந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. அதேவேளையில் சிலர் இந்த தீர்ப்பை ஆதரிக்கின்றனர்.



    இதற்கிடையில், நாளை (17-ந்தேதி) சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படவுள்ளதால் இதுதொடர்பான முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிப்பதற்காக கோயிலின் தலைமை நிர்வாகிகள், தந்திரிகள் எனப்படும் தலைமை பூசாரிகள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்தும், கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது பினராயி விஜயன் ‘‘சட்ட ஒழுங்கை யாரும் அவர்களது கையில் எடுக்க நாங்கள் விடமாட்டோம். சபரிமலைக்கு பக்தகர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனைத்து வகை நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.

    கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது. கோர்ட்டின் உத்தரவை நடைமுறைப்படுத்துவோம் என்று நாங்கள் கோர்ட்டில் கூறியுள்ளோம்’’ என்றார்.  #Sabarimala #PinarayiVijayan
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் வெற்றியை கேரள வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு அர்ப்பணித்த இந்திய அணி கேப்டனுக்கு பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார். #ViratKohli
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் வெற்றியை கேரள வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு அர்ப்பணித்த இந்திய அணி கேப்டனுக்கு பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார். #ViratKohli

    இங்கிலாந்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இந்திய அணி கேரள மக்களுக்கு சமர்ப்பிப்பதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார்.

    இதற்காக விராட் கோலிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். ‘‘கேரள மாநில மக்களுக்கு கிரிக்கெட் வெற்றியை சமர்ப்பித்ததற்கு நன்றி. இந்திய அணியின் வெற்றிக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்’’  என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



    நேற்றைய டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றதும், ‘‘இந்த டெஸ்ட் வெற்றியை கேரளா வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்கு தற்போது கடினமான நேரம்’’ என்று கூறினார்.

    இந்திய அணி வீரர்கள் 3-வது டெஸ்டில் கிடைக்கும் சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    கேரள மாநில பிரச்சினைகளுக்காக பிரதமர் மோடியை சந்தித்ததில் எந்த பலனும் இல்லை என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றச்சாட்டி உள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

    கேரள அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு உதவவும் மத்திய அரசின் திட்டங்களை கேரளாவில் செயல்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச பினராயி விஜயன் திட்டமிட்டார்.

    இதற்காக அனுமதி கேட்டு கேரள அரசு சார்பில் பலமுறை பிரதமர் அலுவலகத்திற்கு கடிதங்களும் அனுப்பப்பட்டது. ஆனால் பினராயி விஜயனை பிரதமர் சந்திக்க தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று பிரதமரை சந்திக்க பினராயி விஜயனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பினராயி விஜயன் தலைமையில் கேரள காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலா, கேரள பா.ஜனதா முன்னாள் தலைவர் கிருஷ்ணதாஸ், மற்றும் அனைத்து கட்சியினரும் நேற்று டெல்லி சென்றனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கேரளாவின் வளர்ச்சி திட்டங்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டனர்.

    பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்த சந்திப்பு அதிருப்தி அளித்திருப்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

    பிரதமரை சந்தித்த போது கேரள மாநிலத்தில் நிலவும் பல முக்கிய பிரச்சினைகள் பற்றி எடுத்து கூறினோம். கேரளாவுக்கு மத்திய அரசின் உணவு தானிய ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி வற்புறுத்தி னோம். அதற்கு பிரதமர் சம்மதம் தெரிவிக்வில்லை. பாலக்காட்டில் ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் என்று நம்பினோம், ஆனால் மத்திய அரசிடம் அதுபோல எந்த திட்டமும் இல்லை என்பது எங்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

    கோழிக்கோட்டில் உள்ள விமான நிலையத்திற்கு பெரிய விமானங்கள் வந்து செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் பிரதமரை கேட்டுக்கொண்டோம். ஆனால் அதற்கு சாதகமாக அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. கேரளாவில் கடும் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை பார்வையிட்டு உதவ மத்திய குழுவை அனுப்ப கேட்டுக்கொண்டோம். அதற்கு பிரதமர் சம்மதம் தெரிவித்துள்ளார். மாநில அரசு தேவையான நிலத்தை ஒதுக்கினால் அங்கமாலியில் இருந்து சபரிமலை வரை ரெயில் திட்டத்தை செயல்படுத்த பிரதமர் ஒப்புக்கொண்டார்.

    ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கேரள மாநில பிரச்சினைகள் தொடர்பாக பிரதமரை சந்தித்து பேசியதில் எந்த பலனும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறும் போது பிரதமர் மோடியுடனான சந்திப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றார்.

    பிரதமரை சந்தித்த இந்த குழுவில் கேரளாவை சேர்ந்த மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணந்தானம் இடம்பெறவில்லை. இதுதொடர்பாக பிரனராய் விஜயனிடம் பிரதமர் தனது அதிருப்தியை தெரிவித்தார்.
    கேரளாவில் நிபா வைரஸை விரைவில் கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை எடுத்ததற்காக அமெரிக்காவின் பால்டிமோர் வைராலஜி இன்ஸ்டிடியூட் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை கவுரவித்துள்ளது. #PinarayiVijayan #NipahVirus
    நியூயார்க்:

    கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த மே மாதம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதனால் சுமார் 18 பேர் மரணமடைந்தனர். பின்னர், கேரள மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் நிபா வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. 

    இந்நிலையில், சிறப்பாக நடவடிக்கை எடுத்து நிபா வைரஸை கட்டுப்படுத்திய முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை மந்திரி சைலஜா டீச்சர் ஆகியோருக்கு அமெரிக்காவின் பால்டிமோர் வைராலஜி இன்ஸ்டிடியூட் பாராட்டுவிழா நடத்தியது. இதில், பினராயி விஜயன் மற்றும் சைலஜா டீச்சர் கலந்து கொண்டனர்.

    அப்போது, கேரளாவில் நவீன வைராலஜி இன்ஸ்டிடியூட் அமைப்பது தொடர்பாக பினராயி விஜயன் மற்றும் பால்டிமர் இன்ஸ்டிடியூட் தலைமை விஞ்ஞானிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள விஜயன் 18-ம் தேதி நாடு திரும்புகிறார்.
    கேரள மாநிலத்தையும் மாநிலத்தின் கோரிக்கைகளையும் பிரதமர் மோடி தொடர்ந்து புறக்கணிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். #PinarayiVijayan #PMModi
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்திற்கான ரேஷன் ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்கக் கோரி முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேரள அரசு சார்பில் பிரதமர் அலுவலகத்தில் கேட்கப்பட்டிருந்தது.

    ஆனால், பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே திட்டமிட்ட பணிகள் இருப்பதால், அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்க முடியாது என்று பிரதமர் அலுவலகம் கூறிவிட்டது. அதற்குப் பதிலாக மத்திய உணவுத்துறை மந்திரி  ராம் விலாஸ் பாஸ்வானைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளது.

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த பினராயி விஜயன், பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார். கேரள மாநிலத்தையும் கேரளாவின் கோரிக்கைகளையும் மோடி தொடர்ந்து புறக்கணிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



    ‘நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு மரியாதை கொடுப்பதில்லை. கேரளாவின் கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணிப்பது, மாநிலத்தில் பல்வேறு தொழில்களில் சரிவு ஏற்பட வழிவகுத்துள்ளது. பிரதமரை பார்த்து எங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கச் சென்றால், அவரை பார்க்க அனுமதிக்கவில்லை.

    கூட்டாட்சி அமைப்பில் திருப்தியடைந்த மாநிலமும் வலுவான மத்திய அரசும் நமக்கு தேவை. மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பு அளிப்பதில் இப்போது இருப்பது போல் முந்தைய அரசுகள் மோசமாக இருந்தது இல்லை.’ என்று பினராயி விஜயன் குறிப்பிட்டார். #PinarayiVijayan #PMModi

    அரிசி ஒதுக்கீடு பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கேட்ட கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

    கம்யூனிஸ்டு ஆட்சி அங்கு அமைந்தபிறகு அரசியல் கட்சிகள் இடையே மோதல் போக்கும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பல இடங் களில் கொலையில் முடிந்து உள்ளது.

    மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக முதல்-மந்திரி பினராயி விஜயனும் அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் கேரளாவுக்கு மத்திய அரசு ஒதுக்கும் அரிசியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதை மீண்டும் அதிகரித்து வழங்க வேண்டும் என்று பினராயி விஜயன் மத்திய அரசை வற்புறுத்தி இருந்தார். மேலும் அரிசி ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கேட்டு பினராயி விஜயன் பிரதமர் அலுவலகத்திற்கு சமீபத்தில் கடிதமும் எழுதியிருந்தார்.

    தற்போது பினராயி விஜயன் பிரதமரை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டு உள்ள கடிதத்தில் பிரதமரை பினராயி விஜயன் சந்திக்க தற்போது நேரம் ஒதுக்க முடியாது என்றும், அரிசி ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக மத்திய உணவுத்துறை மந்திரியை சந்தித்து பேசுமாறும் கூறப்பட்டு உள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு முதல் இதுவரை 3 முறை கேரள மாநில பிரச்சினைகள் தொடர்பாக பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு கேரள அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இதுவரை பிரதமரை சந்திக்க பினராயி விஜயனுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ×