search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kollam-Chennai rail"

    • சக்கரங்களுக்கு மேலே பெட்டியை தாங்கும் பகுதியான அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
    • எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயிலாக கொல்லம்-சென்னை ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் வழக்கம் போல் நேற்று மதியம் 12.15 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டது. செங்கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது. ரெயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பாக தண்டவாளத்தின் இருபுறமும் ரெயில்வே ஊழியர்கள் அமர்ந்து வண்டியின் சக்கரங்கள் சரியாக ஓடுகிறதா? என்பதை நாள்தோறும் கண்காணித்து வருவது வழக்கம்.

    நேற்றும் அவர்கள் செங்கோட்டைக்கு வந்த கொல்லம் ரெயிலை கண்காணித்தனர். அப்போது அந்த ரெயிலின் எஸ்-3 என்ற 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் சக்கரங்களுக்கு மேலே பெட்டியை தாங்கும் பகுதியான அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து மேற்கொண்டு அந்த ரெயில் இயக்கப்படாமல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அங்கு வந்து அடிச்சட்டத்தில் விரிசல் இருப்பதை பார்வையிட்டனர். பின்னர் அந்த ஒரு பெட்டி மட்டும் செங்கோட்டையில் கழற்றப்பட்டது.

    எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு மதுரை ரெயில் நிலையத்தில் வைத்து மாற்றுப்பெட்டி இணைத்து அதில் பயணம் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து சுமார் 1½ மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் புனலூர்-செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும். அப்போது இந்த ரெயிலின் அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எனினும் அதிர்ஷ்டவசமாக ரெயில்வே ஊழியர்கள் கண்காணித்து கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் நடந்த கோர ரெயில் விபத்து அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீளாத நிலையில் அதற்குள் தற்போது செங்கோட்டையில் நடந்த இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடிச்சட்டம் விரிசலை துரிதமாக கண்டுபிடித்த ஊழியர்களை பயணிகள் வெகுவாக பாராட்டினர்.

    ×