search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishnagiri dam New Shutter"

    கிருஷ்ணகிரி அணையில் புதிய ஷட்டரில் இரும்பு தளவாடங்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. #Krishnagiridam
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அணையில் பிரதான முதல் மதகில் உள்ள ஷட்டர் கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி உடைந்தது. இதையடுத்து ரூ.30 லட்சம் மதிப்பில், 12அடி உயரத்திற்கு தற்காலிக ஷட்டர் அமைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து புதிய ஷட்டர் அமைக்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்காலிக ஷட்டரை அகற்றும் பணிகள் கடந்த மாதம் 8-ந் தேதி தொடங்கி, 10-ந் தேதி நிறைவடைந்தது.

    தொடர்ந்து 40 அடி அகலத்திற்கு 20 அடி உயரத்திற்கு ரூ.3 கோடி மதிப்பில் புதிய ஷட்டர் அமைக்கும் பணிகள் தொடங்கியது. கடந்த 23-ந் தேதி வரை 6.5 அடி உயரத்திற்கு ஷட்டர் பொருத்தப்பட்டு, கியாஸ் வெல்டிங் மூலம் இணைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் பணியாளர்கள் விடுமுறை காரணமாக பணிகள் சில நாட்கள் நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 5-ந் தேதி மீண்டும் மதகு அமைக்கும் பணிகள் தொடங்கியது.

    நேற்று மாலை நிலவரப்படி, 40 அடி அகலத்திற்கு 20 அடி உயரத்திற்கு தளவாடங்கள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்தன. பொருத்தப்பட்டுள்ள இரும்பு தகடுகளை கியாஸ் வெல்டிங் மூலம் இணைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    புதிய ஷட்டரில் 20 அடி உயரத்திற்கு இரும்பு தளவாடங்கள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து தளவாடங்களை கியாஸ் வெல்டிங் மூலம் இணைக்கும் பணிகள் நடைபெறும். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், எதிர் திசையில் கியாஸ் வெல்டிங் வைக்கும் போது, தீப்பொறிகள் தொழிலாளர்கள் மீது தெறிக்கும் என்பதால், இப்பணிகள் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதனை தொடர்ந்து புதிய ஷட்டரில் 3 கட்டங்களாக வர்ணம் பூசும் பணிகள் நடைபெறும். புதிய ஷட்டர் அமைக்கும் பணிகள் முழுமையாக அதிகபட்சம் 15 முதல் 20 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த பணிகள் தொய்வின்றி விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் அணை முழு கொள்ளளவான 52 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    ×