search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Licensed shops"

    • விவசாயிகள், செடி முருங்கை, தக்காளி, மிளகாய், காய்கறி பயிர்கள், பப்பாளி நடவு செய்துவருகின்றனர்.
    • உரிமம் இல்லாதவர்களிடம் விதைகளை வாங்கி ஏமாந்துவிடுகின்றனர்.

    திருப்பூர் :

    விவசாயிகள் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே விதை வாங்கி நடவு செய்யவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் சுந்தரவடிவேலு கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, குடிமங்கலம், பல்லடம், பொங்கலுார், திருப்பூர், மடத்துக்குளம், உடுமலை பகுதி விவசாயிகள், செடி முருங்கை, தக்காளி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள், பழச் செடியான பப்பாளி நடவு செய்துவருகின்றனர்.இப்பயிர்களை சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள், விதை மற்றும் நாற்றுக்களை விதை விற்பனை உரிமம் பெற்ற கடைகள் மற்றும் நாற்றுப்பண்ணைகளில் மட்டுமே வாங்கவேண்டும்.விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக, விவசாயிகள் சிலர், உரிமம் இல்லாதவர்களிடம் விதைகளை வாங்கி ஏமாந்துவிடுகின்றனர்.

    தவறாமல் விதைக்கான ரசீது பெறவேண்டும். அந்த ரசீதில் விதை தொகுப்பு எண், காலாவதி தேதி கட்டாயம் இருக்கவேண்டும். இதன்மூலம் விதையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கமுடியும்.ரபி, காரீப் என அந்தந்த சீசனுக்கு ஏற்ற விதைகளை மட்டுமே வாங்கி பயன்படுத்தவேண்டும். காரீப் சீசனுக்கான விதையை, ரபி பருவத்திலும், ரபி பருவத்துக்கான ரகங்களை காரீப்பில் என சீசன் மாற்றி விதைக்க கூடாது. அதேபோல் சீரான இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.சில விவசாயிகள், செடி முருங்கை போன்ற காய்கறி பயிர்களை குறைந்த இடைவெளியில் நடவு செய்கின்றனர். சீசன் மாறி குறுகிய இடைவெளியில் நடவு செய்தால், அந்த பயிரின் தன்மை மாறிவிடும். இதனால் எதிர்பார்த்த பலனை பெறமுடியாமல் போய்விடும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது.
    • மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வினீத் வழங்கினார்.

    திருப்பூர் :

    உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின ஒருங்கிணைப்பு விழா திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வினீத் வழங்கினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:- ஒவ்வொரு பொருளையும் விலை கொடுத்து வாங்கும் ஒவ்வொருவரும் நுகர்வோரே. கடைக்காரர்கள், நமக்கு சேவையளிக்கும் அனைத்து விற்பனை மையங்கள் மூலமாகவும் இன்னமும் பலவற்றில் நமக்கு தேவையான பொருட்களை சரியானமுறையில் கவனித்து வாங்காமலும், பட்டியல்களை சரிபார்க்காமலும் வாங்க மறந்து விடுகிறோம். இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்கும் வகையில் நுகர்வோர்உரிமைகளை காத்திடவும், நுகர்வோர் உரிமைகளை நிலைநாட்ட 1962ம் ஆண்டு மார்ச் 15-ம் நாள் தோற்றுவிக்கப்பட்டதே உலக நுகர்வோர் தினமாகும்.பொருட்கள் வாங்குவதில் நுகர்வோர்களாகிய நமக்குரிய உரிமைகளையும், கடமைகளையும் நாம் முழுமையாக அறிந்து கொள்வதோடு இதனை மற்றவர்களும் அறிந்து கொண்டு பயன்பெறுகின்ற வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.

    நுகர்வோர் ஒருபொருளை வாங்கும் போது பதிவுச்சான்று- உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே பொருள்களை வாங்க வேண்டும். அதன் உண்மை தன்மையை அறிந்து, அப்பொருளின் தரம், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் முகவரி போன்றவை சரியாக உள்ளதா என்பதையும் பார்த்து வாங்க வேண்டும். வாங்குகின்ற பொருட்களுக்கான விலை பட்டியலை கட்டாயம் கேட்டுப்பெற வேண்டும். நுகர்வோர் பொருட்களை வாங்கும் போது ஏதேனும் குறைகள் இருந்தால் புகார் தெரிவிக்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகின்றது.

    இந்நீதிமன்றங்களில் நுகர்வோர் தங்களுக்கு கஷ்டமோ, நஷ்டமோ ஏற்பட்டிருந்தால் புகார் தெரிவிக்கலாம்.வாங்கும் பொருட்களில் தரமற்ற உணவு பொருள் இருந்தால் உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொருட்கள் வாங்குவதில் நுகர்வோர்களாகிய நமக்குரிய உரிமைகளையும், கடமைகளையும் முழுமையாக அறிந்து அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் ஏற்படுத்திட அனைவரும் முன்வர வேண்டும். இந்திய தர நிர்ணய அமைவனம் மூலம் நுகர்வோர் மேம்பாட்டிற்கான ஒரு கருவி BIS CARE APP-மூலம் முத்திரையுள்ள தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்கலாம். ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கநகைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்கலாம். தயரிப்பின் தரம் அல்லது ஐ.எஸ்.ஐ., முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் மீது புகார்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    விழாவில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மகாராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் முன்னிலை வகித்தார். விழாவில் நுகர்வோர் தன்னார்வ அமைப்புகள் பள்ளி மற்றும் கல்லூரிகளிடையே இவ்விழாக்களின் தலைப்பின் அடிப்படையில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்பேட்டிகள் நடத்தப்பட்டுஅப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.1,500, இரண்டாம் பரிசு ரூ. 1,000, மூன்றாம் பரிசு ரூ.500 ஐ கலெக்டர் வினீத் வழங்கினார்.

    விழாவில் கூட்டுறவுத்துறை, இந்திய தேசிய தர நிர்ணயம் , மருத்துவ நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபகழகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் ஆகியவற்றின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்திய தேசிய தர நிலை கட்டுப்பாட்டு அலுவலரால் பொருட்களில் உள்ள ஐ.எஸ்.ஐ ., முத்திரையினை எவ்வாறு சரிபார்க்கப்பட வேண்டும் என விளக்கவுரையும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சக்திவேல், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மகாராஜ் , உணவுபாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை, மாவட்ட வழங்கல் அலுவலரின்நேர்முக உதவியாளர் கிருஷ்ணவேணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    ×