search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maintaining friendships are part of faith"

    • ஒவ்வொரு புதுமையும் இனிமையே என்பது அரபி பழமொழி ஆகும்.
    • புது நட்பை தேர்வு செய்வதில் தவறில்லை.

    மனிதன் புதுமைகளை அதிகம் விரும்புபவனாகவே இருக்கின்றான். அவனது மனமும் புதுமை விரும்பியாகவே மாறி வருகிறது. எங்கும் புதுமை, எதிலும் புதுமை எனும் அடுத்த கட்டத்திற்கு மனிதனின் வாழ்வு நகர்ந்து கொண்டே செல்கிறது.

    'ஒவ்வொரு புதுமையும் இனிமையே!' என்பது அரபி பழமொழி ஆகும். இதற்கேற்ப மனிதனின் தேடல்களும் புதிய கோணத்தில் நகர்ந்து செல்கிறது. மனிதன் புத்தம் புதுமைக்கு தமது மனதை நித்தமும் பறிகொடுத்து புதுமைப்பித்தனாக மாறிவிட்டான். இந்த வரிசையில் நட்பாக இருந்தாலும் புதுநட்பாக இருப்பதை தேர்வு செய்கின்றான்.

    புது நட்பை தேர்வு செய்வதில் தவறில்லை. ஆனாலும், பழைய நட்பை முறிக்கக்கூடாது; பழைய நட்பை புறந்தள்ளக் கூடாது; பழைய நட்பை 'அம்போ' என்று கை கழுவக்கூடாது; பழைய நட்பை அனாதையாக கைவிடக் கூடாது; பழைய நட்பை புறக்கணிக்கக்கூடாது.

    புது நட்புக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பழைய நட்புக்கும் கொடுக்க வேண்டும். புது நட்புக்குக் கொடுக்கும் அதீத வரவேற்பை பழைய நட்புக்கும் கொடுக்க வேண்டும்.

    பழைய நட்புகளைப் பேணுவதும் இறைநம்பிக்கையின் ஓர் அடையாளம்தான் ; இறைநம்பிக்கையின் ஓர் பகுதிதான்.

    ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்: 'என் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் இருந்த சமயம் ஒரு மூதாட்டி வந்தார். நபி (ஸல்) அவர்கள் 'நீர் யார்?' என்று கேட்க, 'நான் தான் ஜூஸாமா மதனிய்யா' என்று கூறினார். 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?, எங்களுக்குப் பிறகு (நாங்கள் மக்காவில் இருந்து மதீனாவிற்கு வந்த பிறகு) உங்கள் நிலைமை எப்படி இருந்தது?' என நபி (ஸல்) அவர்கள் வினவ, 'அல்லாஹ்வின் தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நாங்கள் யாவரும் நலமாக உள்ளோம்' என்று கூறிவிட்டு அந்த மூதாட்டி சென்றுவிட்டார்.

    'அல்லாஹ்வின் தூதரே! அந்த மூதாட்டிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, அவரின் பக்கம் இந்தளவு கவனம் செலுத்தினீர்களே' என நான் வியப்புடன் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இந்த மூதாட்டி, கதீஜா (ரலி) அவர்களின் வாழ்நாட்களில் நம்மிடம் வரப்போக இருப்பார். பழைய நட்பு களைப் பேணுவது இறைநம்பிக்கையின் அடையாள மாகும்' என நபி (ஸல்) கூறினார்கள்'. (நூல்: ஹாகிம்)

    நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவி அன்னை கதீஜா (ரலி) மரணித்த பிறகும், மனைவியின் நட்பாளர்களிடமும் நபி (ஸல்) அவர்கள் நலமாகவும், நளினமாகவும், நட்பாகவும் நடந்து கொண்டார்கள்.

    பழைய நட்புகளை பேணுவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியே. ஒருவரின் இறப்பிற்கு பிறகும் அவரின் நட்பாளர்களிடம் நாம் நமது நட்பை கைவிடக்கூடாது. பழைய நட்பையும் பசுமை மாறாமல் பாதுகாத்திட வேண்டும்.

    'அபூ உஸைத் மாலிக் பின் ரபீஆ ஸாதி (ரலி) அறிவிக்கிறார்: நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் அமர்ந்திருந்த சமயம், பனூஸலமா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் அங்கு வந்து, 'அல்லாஹ்வின் தூதரே, எனது பெற்றோரின் மரணத்திற்குப் பின் அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ள ஏதேனும் வழியுள்ளதா?' என்று கேட்டார்.

    'ஆம் அவர்களுக்காக பிரார்த்திப்பது, அவர்களுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவது, அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, அவர்களுக்கு யாருடன் உறவுமுறை உள்ளதோ அவர்களுடன் அழகிய முறையில் நடப்பது, அவர்களின் நண்பர்களைக் கண்ணியப் படுத்துவது ஆகியவை பெற்றோருடன் அழகிய முறையில் நடப்பதாகும்' என நபி (ஸல்) பதில் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)

    காலம் சென்ற வயதான பெற்றோரின் உறவினர்களும், அவர்களின் நண்பர்களும் வயதில் மூத்த பழைய காலத்தைச் சார்ந்த பழைய ஆட்களாக இருப்பார்கள். பெற்றோர் பேணிய பழைய உறவுகளையும், பழைய நட்புகளையும் அவர்களுக்குப் பின் நாம்தான் பசுமை மாறாமல் பேணி நடக்கவேண்டும்.

    'ஆயிஷா (ரலி) கூறுவதாவது: கதீஜா (ரலி) மீது நான் ரோஷம் கொண்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் வேறெவரின் மீதும் நான் ரோஷம் கொண்டதில்லை. ஏனெனில், கதீஜா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி நினைவு கூர்வதை நான் கேட்டு வந்தேன். என்னை மணப்பதற்கு மூன்றாண்டு களுக்கு முன்பே கதீஜா (ரலி) இறந்து விட்டார்.

    இன்றும் நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து கதீஜா (ரலி) அவர்களின் தோழிகளிடையே அன்பளிப்பாகப் பங்கிட்டுவிடுவார்கள்'. (நூல்: புகாரி)

    பழைய நட்புகளை பேணி நடப்பதும் இறை வணக்கம் தான், இறை நம்பிக்கையும்தான். எனவே நட்புகளை பேணுவோம். நலம் பெறுவோம்.

    ×