search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "materials burned"

    செங்குன்றம் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.
    செங்குன்றம்:

    செங்குன்றம் ஜி.எஸ்.டி சாலையில் தனியாருக்கு சொந்தமாக ஜவுளிக்கடை உள்ளது. 4 மாடிகளை கொண்ட இந்த கடையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு சென்றனர். நள்ளிரவு 2.30 மணியளவு கடையில் இருந்து புகை வருவதாக சிலர் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடை உரிமையாளர் டேவிட்ராஜ் கடைக்கு வந்தார். அப்போது கடையில் உள்ள துணிகள் தீப்பற்றி எரிவது தெரிய வந்தது. இதுகுறித்து தீ அணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் செங்குன்றம், மாதவரம், மணலி, அம்பத்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். சென்னை மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி பாஸ்கரன், மாதவரம் தீயணைப்பு நிலைய அதிகாரி சற்குணம் ஆகியோர் மேற்பார்வையில் 25 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    5 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. காலை 7.30 மணிக்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

    இந்தநிலையில் ஜவுளி கடையில் தரைபகுதி, முதல்மாடி, 2-வது மாடியில் உள்ள துணிகள் முழுமையாக எரிந்து நாசமாகின. 3-வது மாடியிலும் துணிகள் எரிந்து இருந்தன.

    இந்த பயங்கர தீவிபத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ×