search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meets Asian Games medal winners"

    தொழில்நுட்ப உதவியுடன் திறமையை மேம்படுத்த வேண்டும் என்று ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களின் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். #Modi #AsianGames #MedalWinner
    புதுடெல்லி:

    இந்தோனேஷியாவில் சமீபத்தில் நடந்த 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை குவித்து அசத்தியது. ஒரு ஆசிய விளையாட்டில் இந்தியா கைப்பற்றிய அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இது தான்.

    ஆசிய விளையாட்டில் மகுடம் சூடிய இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை வெகுவாக பாராட்டிய பிரதமர் மோடி பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார்.



    “உங்களின் விளையாட்டு சாதனையால், இந்தியாவின் புகழும், கவுரவமும் உயர்ந்துள்ளது. அதே சமயம் இந்த பாராட்டு, புகழால் உங்களின் கவனம் சிதறி விடக்கூடாது. தொடர்ந்து விளையாட்டில் முழு மனதுடன் கவனம் செலுத்த வேண்டும். வீரர், வீராங்கனைகள் தங்களது திறமையை மேம்படுத்திக் கொள்ள தொழில்நுட்பத்தின் உதவியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலகின் முன்னணி வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதையும் ஒப்பிட்டு அலசி ஆராய்ந்து நமது திறமையை வளர்த்துக் கொள்வது முக்கியமாகும்” என்று மோடி அவர்கள் மத்தியில் பேசினார் .

    “சிறு நகரங்கள், கிராமப்புறங்கள் மற்றும் ஏழ்மையான பின்னணியில் இருந்து விளையாட்டு களத்திற்குள் நுழைந்து தேசத்திற்காக பதக்கம் வென்று சாதித்துக்காட்டிய இளைஞர்களை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையான திறமை கிராமப்புறங்களில் தான் அதிகம் கொட்டி கிடக்கிறது. அத்தகைய திறமையான இளைஞர்களை அடையாளம் கண்டு, சிறந்த வீரர்களாக உருவாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

    “இந்த வெற்றியோடு திருப்தி அடைந்து ஓய்ந்து விடக்கூடாது. மேலும் பல சாதனைகளை நிகழ்த்த தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். பதக்கம் வென்றவர்களுக்கு இனி தான் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. ஒலிம்பிக்கில் பதக்கமேடையில் ஏற வேண்டும் என்ற லட்சியத்தை ஒரு போதும் விட்டு விடக்கூடாது” என்றும் மோடி ஆலோசனை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோரும் கலந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியில், ‘2024, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நோக்கி இப்போதே எங்களது பணிகள் தொடங்கி விட்டன. ஆசிய விளையாட்டு வெற்றியை கொண்டாடும் இந்த வேளையில் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் நெருங்கி வருவதையும் மறந்து விடக்கூடாது. எங்களது பிரதான இலக்கு 2024 மற்றும் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் தான் என்றாலும் டோக்கியோ ஒலிம்பிக்கையும் விட்டு விடக்கூடாது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவதற்கு, வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து கொடுப்போம். டோக்கியோ ஒலிம்பிக்குக்கு இன்னும் 600-க்கும் மேற்பட்ட நாட்கள் இருக்கிறது. அதற்குள் நிறைய சாதகமான மாற்றங்கள் உருவாகும்’ என்றார். 
    ×