search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mettupalayam vanabadrakaliamman temple"

    • அக்னி அபிஷேகம் நடைபெற்றது.
    • 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 30-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. ஏக தின அன்னை தமிழ் அர்ச்சனை, கிராம சாந்தி, முனியப்பன் பகாசுரன் வழிபாடு, கொடியேற்றம், பொங்கல் வைத்தல், 36 அடி நீளம் 2 அடி அகலம் கொண்ட குண்டம் திறத்தல், பூ வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருவிழாவுக்கு சிகரம் வைத்தாற் போல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு பவானி ஆற்றங்கரையில் இருந்து அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பூ பல்லக்கில் எழுந்தருளினார். பின்னர் நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க சுவாமி ஊர்வலம் ஆற்றங்கரையில் இருந்து புறப்பட்டது. அங்கிருந்து புறப்பட்ட சுவாமி ஊர்வலம் அதிகாலை 5 மணிக்கு பீமன் பகாசூரன் சந்நிதி அருகே குண்டம் இறங்கும் இடத்தை வந்தடைந்தது.

    குண்டம் இறங்குவதற்காக நேற்று காலை முதலே கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். குண்டம் இறங்குவதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. கோவில் தலைமை பூசாரி ரகுபதி கையில் வேலெடுத்து குண்டத்தை வலம் வந்து பூஜை செய்து. மல்லிகை மலர்ச்செண்டு, எலுமிச்சை கனியை குண்டத்தில் வீசி அருளுடன் குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார்.

    தொடர்ந்து உதவி பூசாரிகள் மணிகண்டன் கோலமுடி, சேகர் சக்தி கரகம், ரமேஷ் சிவன் கரகம் எடுத்தும் குண்டம் இறங்கினார்கள். பின்னர் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்கினர். காலை 6 மணிக்கு தொடங்கிய குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி மதியம் 12 மணிக்கு நிறைவடைந்தது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மதியம் 12 மணிக்கு அக்னி அபிஷேகம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தமிழ் புலவர் மு.சவுந்தரராஜன் வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். திருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ், மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மாணிக்கவேல் துரைசாமி, தேக்கம்பட்டி ஊராட்சி தலைவி நித்யா நந்தகுமார் மற்றும் துரை நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் நாடார் இளைஞர் குழுவினர் குண்டம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் குண்டம் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உட்பட 3 துணை சூப்பிரண்டுகள், 12 இன்ஸ்பெக்டர்கள், 50 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 550-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • பல பக்தர்கள் கரகம் எடுத்தும், அலகு குத்தியும் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்
    • கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடந்தது.

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் இந்த கோவிலில் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜைகளும் நடந்து வந்தது. நேற்று முன்தினம் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும், மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து, திருக்குண்டம் திறத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடந்தது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து 6 மணிக்கு தலைமை பூசாரி ரகுபதி அம்மனின் சூலத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் எலுமிச்சை மற்றும் பூக்கட்டுகளை குண்டத்தில் உருட்டி விட்டு அதன் பின்னர் குண்டம் இறங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கினர். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டத்தில் இறங்கி வழிபட்டனர். பல பக்தர்கள் கரகம் எடுத்தும், அலகு குத்தியும் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடந்தது. முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    விழா ஏற்பாடுகளை திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத், செயல் அலுவலரும், திருக்கோவில் உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டி.எஸ்.பி.க்கள் தென்னரசு, பாலாஜி, வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் 12 இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் என சுமார் 550 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவிலின் பல்வேறு பகுதிகள் குறிப்பாக குண்டம் இறங்குமிடம், பவானி ஆற்றில் பக்தர்கள் குளிக்கும் இடங்கள், காணிக்கை செலுத்தும் இடங்கள், நேர்த்திக்கடன் செலுத்தும் இடங்கள் என பல்வேறு பகுதிகளில் சிசிடிவி காமிராக்களும் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்தனர். 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் கோபுரங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.

    பக்தர்கள் வசதிக்காக கோவை, மேட்டுப்பா ளையம், அன்னூர் போன்ற இடங்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    • நாளை அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு நடக்கிறது.
    • நாளை காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் நடக்கிறது.

    மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 30-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா, கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள், ஏகதின அன்னைத்தமிழ் லட்சார்ச்சனை, கிராம சாந்தி, முனியப்பன், பகாசூரன் வழிபாடு ஆகியன நடைபெற்றது.

    இந்த நிலையில் 6-வது நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு யாகசாலை அமைத்து யாகம் வளர்த்தல், காலை 7 மணிக்கு தேக்கம்பட்டி தேசிய கவுடர் கிராம மக்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. கோவில் தலைமை பூசாரி ரகுபதி சிறப்பு பூஜைகளை செய்திருந்தார்.

    தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தேக்கம்பட்டி ஊர் கவுடர் திருநாவுக்கரசு தலைமையில் வரதராஜ் முன்னிலையில் சிம்ம வாகனம் பொறிக்கப்பட்ட கொடி தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. அங்கு கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி ஆகியோர் சிம்ம வாகன கொடி ஊர்வலத்திற்கு வரவேற்பு அளித்தனர். அம்மன் சன்னதியில் சிம்ம வாகன கொடிக்கு சிறப்பு பூஜை செய்த பிறகு கொடி மரம் முன்பு எடுத்துவரப்பட்டது.

    அங்கு சிறப்பு பூஜைக்கு பிறகு கொடி மரத்தில் நாதஸ்வர இசை, மேள-தாளம் முழங்க கொடி ஏற்றபட்டது. மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை, தீபாராதனை, இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் ஆகியவை நடைபெற உள்ளன.

    • ஓதுவார்கள் ஒரு லட்சம் முறை அம்மன் திருநாமத்தை கூறினர்.
    • குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி 25-ந் தி நடக்கிறது.

    மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை நாட்கள், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த கோவிலுக்கு கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தன்று ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த வருடத்திற்கான 30-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது. குண்டம் திருவிழாவினை முன்னிட்டு நேற்று கோவில் வளாகத்தில் தமிழ்முறைப்படி லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம் நடைபெற்றது.

    இதனை கோவில் அறங்காவலர் வசந்தா சம்பத், தாரணி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். லட்சார்ச்சனை நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வனபத்ரகாளியம்மனுக்கு பல வண்ண மலர்களால் தமிழ் முறையில் ஓதுவார்கள் ஒரு லட்சம் முறை அம்மன் திருநாமத்தை வணங்கினர். அன்னைத்தமிழ் லட்சார்ச்சனையை முலத்துறை சக்திவேல், குழந்தைவேல் ஆகியோர் நடத்தி வைத்தனர்.

    உபயதாரர்கள் பாக்கியலட்சுமி குடும்பத்தார்கள், கர்த்திக், கனகாச்சலம், நந்தினி, ஜெகதா, பிரபு, பூர்ணிமா உள்ளிட்டோர் லட்சார்ச்சனைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் கோவில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.
    • 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

    மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபுரம் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் கோவில் நிதியில் இருந்து 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக திருப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆய்வு செய்து ராஜகோபுரம் அமைக்கும் பணி யை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து கோவில் சார்பில் ராஜகோபுர பணிக்காக உபயதாரர்களின் உதவியை நாடினர். கோவை, திருப்பூர், ஈரோடு பகுதி உபயதாரர்கள் ராஜகோபுரம் அமைப்பதற்காக ரூ.5 கோடியே 30 லட்சம் நன்கொடை வழங்கினர்.

    இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின், 7 நிலை ராஜகோபுர திருப்பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.முரளிதரன் வழிகாட்டுதலின் பேரில், செயற்பொறியாளர் மதிவாணன், கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் மண்டல ஸ்தபதி ராமகிருஷ்ணன் தலைமையில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ராஜகோபுர ்பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கற்கள் கொண்டு வரப்பட்டு 2-வது பகுதி பாத வர்க்கம் அமைப்பதற்காக கற்களில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வரி நேர்த்தியாக அமைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 6 ஆண்டுகளுக்கு பின்னர் ராஜகோபுர திருப்பணிகள் தொடங்க உள்ளது.
    • 2017-ம் ஆண்டு கோவில் நிதியில் இருந்து ரூ.2½ கோடியில் ஏழுநிலை ராஜகோபுர திருப்பணிகள் தொடங்கியது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவிகோட்டத்தில் பழமைவாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அம்மன் திருத்தலங்களில் பிரசித்திபெற்று விளங்கும் இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு கோவில் நிதியில் இருந்து ரூ.2½ கோடியில் ஏழுநிலை ராஜகோபுர திருப்பணிகள் தொடங்கியது. தொடர்ந்து கட்டுமான பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திடீரென இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி ஆகியோர் நன்கொடையாளர்களை சந்தித்து திருப்பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் திருப்பூரைச் சேர்ந்த நன்கொடையாளர்கள் திருப்பணிக்கு நன்கொடையாக ரூ.6 கோடி நிதியை வழங்கிட முன்வந்தனர்.

    இதுகுறித்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து ராஜகோபுர திருப்பணிகள் தொடங்க இந்து சமய அறநிலையத்துறையும் ஒப்புதல் அளித்து விட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா கூறுகையில், வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுர திருப்பணிக்கு நன்கொடை அளிக்க உபயதாரர்கள் முன்வந்ததால், 6 ஆண்டுகளுக்கு பின்னர் ராஜகோபுர திருப்பணிகள் தொடங்க உள்ளது. ரூ.6 கோடியில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இந்த பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.

    • அம்மன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை பயபக்தியுடன் நினைத்து வழிபட்டனர்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் பழமை வாய்ந்த வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு 16 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளுக்கு பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்மன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    ஆற்றில் கரையோரப் பகுதியிலுள்ள முத்தமிழ் விநாயகர் சன்னதி, நாகர் சன்னதி, பீமன் பகாசுரன் சன்னதி, ஆகிய சன்னதிகளில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. பெண்கள் கொடி மரத்தின் முன்பு எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை பயபக்தியுடன் நினைத்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவில் உதவி ஆணையரும் செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    பங்களா மேடு ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் நகரில் உள்ள அம்மன் கோவில்களில் அமாவாசையொட்டி சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

    • அம்மன் வெள்ளி கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • கொடி மரம் முன்பு பெண்கள் எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

    மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பிரசித்தி பெற்றவனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    அம்மனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைக்கு பிறகு காலை 6 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அம்மன் வெள்ளி கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    முத்தமிழ் விநாயகர் சன்னதி, நாகர் சன்னதி, பகாசுரன் சன்னதியில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. கோவில் கொடி மரம் முன்பு பெண்கள் எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தனர்.

    • கோவில் தலைமை பூசாரி முதன்முதலாக குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார்.
    • நாளை மாவிளக்கு பூஜை, பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற வன பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை.

    2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையான கடந்த 19-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் குண்டம் விழா தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து லட்சார்ச்சனை, கிராமசாந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 24-ந் தேதி காலை திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று காலை நடந்தது.

    முன்னதாக நேற்று மாலை பொங்கல் வைத்து திருக்குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. 36 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட குண்டத்தில் விறகுகள் போடப்பட்டு அக்னி வளர்க்கப்பட்டது.

    இன்று காலை பவானி ஆற்றங்கரையில் இருந்து கோவிலுக்கு அம்மன் அழைப்பு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகன தேரில் அழைத்து வரப்பட்ட அம்மன் கத்திரிப்பூ நிற பட்டுத்தி காட்சி அளித்தார். திருக்குண்டத்தின் முன்பு அம்மன் எழுந்தருளி பக்தர்கள் முன் அருள்பாலித்தார்.

    இதையடுத்து கோவில் தலைமை பூசாரி ரகுபதி பூ குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து எலுமிச்சைப்பழம், பூ பந்துகளை குண்டத்தில் உருட்டினார். பின்னர் அவர் முதன்முதலாக குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார், அவரை தொடர்ந்து பூக்கூடை மற்றும் அம்மன் கரகத்தை சுமந்து வந்தவர்கள் குண்டம் இறங்கினர்.

    ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். ஒரு சிலர் கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். இதற்காக நேற்று இரவு முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். அதிகாலையே நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் அந்த கிராமம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது.

    போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் 300-க்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பவானி ஆற்றில் பக்தர்கள் குளிப்பதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் 4 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. மருத்துவத்துறை சார்பாக தனியார் மற்றும் அரசு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.

    அரசு போக்குவரத்து கழகம் சார்பாக கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர், திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் மேட்டுப்பா ளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ கே.செல்வராஜ், முன்னாள் கோவை மேயர் செ.ம. வேலுச்சாமி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி ஆணையர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    குண்டம் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மாவிளக்கு பூஜை, பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது.

    • 26-ந்தேதி காலை 6 மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 28-ந்தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கின்றன.

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ர காளியம்மன் கோவில்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்குவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை.

    இந்தநிலையில் இந்த ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை குண்டம் இறங்கும் இடத்தில் கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இன்று 19-ந்தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுடன் குண்டம் விழா தொடங்குகிறது. 22-ந்தேதி காலை 10 மணிக்கு லட்சார்ச்சனையும், 23-ந்தேதி இரவு 10 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    24-ந்தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம், சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 25-ந்தேதி மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தல் நடக்கிறது. தொடர்ந்து 26-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 27-ந்தேதி காலை 10 மணிக்கு முதல் மாவிளக்கு பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    28-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஆடி அமாவாசை பூஜைகள், இரவு 7 மணிக்கு பரிவேட்டை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    29-ந்தேதி பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராடுதல், ஆகஸ்டு 1-ந்தேதி காலை 10 மணிக்கு 108 குத்துவிளக்கு பூஜை, 2-ந்தேதி மறுபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி ஆணையர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது.
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பழமை வாய்ந்த வன பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. மாவட்டத்தில் அம்மன் திருத்தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா வருகிற 17-ந் தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

    20-ந் தேதி காலை 10 மணிக்கு லட்சார்ச்சனை, 21-ந் தேதி இரவு 10 மணிக்கு கிராமசாந்தி, 22-ந் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம், மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    23-ந் தேதி மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து குண்டம் திறத்தல், 24-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இதில் மேட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்குகின்றனர். 25-ந் தேதி காலை 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, மாலை 6 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    26-ந் தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 27-ந்தேதி மதியம் 12 மணிக்கு மகாஅபிஷேகம், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 30-ந் தேதி காலை 10 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடக்கிறது. 31-ந் தேதி காலை 8 மணிக்கு மறு பூஜையுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, உதவி ஆணையரும், செயல் அலுவலருமான க.ராமு ஆகியோர் செய்து வருகின்றனர். 
    ×