search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MNM Party Song"

    கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூம்-2 படத்தின் தொடக்கத்தில் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரசார பாடல் இடம்பெற்றது குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். #KamalHaasan #Vishwaroopam2 #MNMPartySong
    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு பக்கம் அரசியலிலும் இன்னொரு பக்கம் சினிமா, பிக்பாஸ் நிகழ்ச்சி என்றும் வலம் வருகிறார்.

    கமல்ஹாசன் இயக்கி நடித்து இருக்கும் விஸ்வரூபம்-2 படம் நேற்று வெளியானது.

    5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சி இது. ஏற்கனவே தயாராகி 3 ஆண்டுகளாக வெளியீட்டுக்கு காத்திருந்த படம் வெளியானதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

    தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், தெலுங்கில் மட்டும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

    கருணாநிதி மறைவு காரணமாக படத்தின் இறுதிகட்ட விளம்பர வேலைகள் பாதித்தன. இதனால் நேற்று வெளியான படத்துக்கு பெரிய வரவேற்பு இல்லை. படமும் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை என்று சமூக வலைதளங்களில் கருத்து பரவியது.

    படம் தொடங்குவதற்கு முன்னர் கமல் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் பிரசார பாடல் அனைத்து தியேட்டர்களிலும் ஒளிபரப்பப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.



    கடந்த வாரம் கமல் அளித்த பேட்டியில், படத்தில் தனது கட்சி தொடர்பான வசனங்களையோ காட்சியையோ சேர்க்க மாட்டேன் என்று கூறி இருந்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் கட்சியை வளர்க்க சரியான ஊடகங்கள் இல்லை. அதனால் சினிமாவை பயன்படுத்தினார். ஆனால் தான் அப்படி பயன்படுத்த மாட்டேன் என்று விளக்கி இருந்தார். ஆனால் படத்தில் பிரசார பாடல் இடம்பெற்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    நேற்று சென்னை திரும்பிய கமல்ஹாசன் இரவு ராயப்பேட்டையில் உள்ள வணிக அரங்கில் படத்தை ரசிகர்களோடு பார்த்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது, ‘படம் ஆரம்பிக்கும் முன் ‘மக்கள் நீதி மய்யம்‘ கட்சியின் பாடல்கள் திரையிடப்படுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதை எப்படி பார்க்கிறீர்கள்?’ என கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த கமல், “படத்திற்கு இடைவேளையில் முதல்வர் பத்தின வீடியோவை திரையிடுறாங்க. அது விமர்சனத்திற்கு உள்ளாகவில்லை. நான் இப்போ கட்சி ஆரம்பிச்சிருக்கேன். கிடைக்கிற மேடைகள் எல்லாத்துலையும் அரசியல் பேசுவேன். எங்களுடைய முன்னேற்றத்தை நான் எடுத்து வைப்பேன். அதுக்கான மேடை கிடைச்சது பேசிட்டு இருக்கேன். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அதைத் தான் பண்ணிட்டு இருக்கேன்” என்றார்.

    கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்கள். அதை நீங்கள் வலியுறுத்துவீர்களா? என்றதற்கு, “அவர்களாக மனம் உவந்து கொடுக்கட்டும். அப்போதுதான் தமிழனுக்கு பெருமை. வலியுறுத்தி கொடுக்கிறது தமிழனுக்கு பெருமை இல்லை” என்று கூறியுள்ளார். #KamalHaasan #Vishwaroopam2 #MNMPartySong

    ×