search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mukti Morcha Party"

    • ஜார்கண்ட் என்ற அடையாளத்தின் இருப்புக்காக நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம்.
    • எனது வாழ்க்கையில் ஒரு புதிய சவாலை ஏற்க தயாராக இருப்பதாக உணர்கிறேன்.

    ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து கட்சி நடவடிக்கைகளை ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் கவனித்து வருகிறார்.அவர் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் கல்பனா சோரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கேள்வி:-கடந்த 2 மாதங்களாக உங்கள் அரசியல் பயணம் எப்படி இருந்தது?

    பதில்:-எனது கணவர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 31-ந்தேதி கைது செய்த பிறகு எனது வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.ஏனென்றால் இது திடீரென்று நடந்தது. எனக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது.ஆனால் அனைத்து தடைகளையும் கடந்து தற்போது தேர்தல் பரபரப்பில் இருந்து வருகிறோம். ஜார்கண்ட் என்ற அடையாளத்தின் இருப்புக்காக நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம்.

    கேள்வி:-உங்களது கணவரின் அண்ணன் மனைவி சீதா சோரன் ஜே.எம்.எம். கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர எடுத்த முடிவை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:-அவர் எடுத்த முடிவு ஊடகங்கள் மூலம் எங்களுக்கு தெரிந்தது. இது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனது கணவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் நான் ஏற்கனவே உடைந்து போயிருந்தேன். அதிலிருந்து வெளியே வர சிறிது நேரம் பிடித்தது. அந்த முடிவு அவருடைய தனிப்பட்டது என்று நம்புகிறேன். அதை நான் மதிக்கிறேன்.

    கேள்வி:-ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால், என்ன செய்வது என்று அவருடன் விவாதித்தீர்களா?

    பதில்:-ஹேமந்த் பற்றி மிகவும் கவலைப்பட்டேன். நான் சட்ட நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தேன். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் சொந்தப் பொறுப்பில் ஈடுபட்டிருந்தனர். எனவே ஒரு மனைவியாகவும், ஒரு மனிதனாகவும் குடும்பம், கட்சி, தொண்டர்களுக்காக துணை நிற்பது எனது தனிப்பட்ட கடமை என்று நான் நினைத்தேன். எனது பிறந்த நாளான மார்ச் 3-ந்தேதி அன்று ஏற்பட்ட சூழ்நிலை மற்றும் பொறுப்பின் காரணமாக மாமனார், மாமியார் ஆசியுடன் தீவிர அரசியலில் இறங்கினேன்.

    கேள்வி:-உங்கள் கணவர் கைது செய்யப்பட்டதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:-ஹேமந்த் கைது தொடர்பான நிலம் அவரது பெயரில் உள்ளதா என அதிகாரிகள் சோதித்திருக்க வேண்டும். அவரது பெயரில் ஒரு பேப்பர் கூட இல்லை.இந்தக் கேள்வி ஏன் ஹேமந்த்திடம் கேட்கப்படுகிறது என்று கேட்க விரும்புகிறேன். நிலம் தங்களுக்கே சொந்தம் என்று தற்போதும் கூறும் நில உரிமையாளர்களிடம் ஏன் கேள்வியை கேட்கவில்லை. நில உரிமையாளரும் குற்றம் சாட்டப்பட்டுஉள்ளாரா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.

    கேள்வி:-ஹேமந்த் சோரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் பார்க்கும் போது, ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:-எங்களது உரிமையை பெற்று தருமாறு மத்திய அரசிடம் கேட்கிறோம். மத்திய அமைச்சகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட சர்னா மதக் குறியீட்டை நாங்கள் கேட்கிறோம்.ஆனால் அது மறுக்கப்படுகிறது. அதுவும் ஊழல்தான். நான் ஊழலுக்கு முற்றிலும் எதிரானவள். ஆனால் மத்திய அரசு ஜார்கண்ட்டை வளர்ப்பு மகன் போல நடத்துகிறது. அதுவும் ஊழல்தான். நாங்கள் ஏமாற்றப் பட்டதாக உணர்கிறோம். இதனால்தான் மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்குக்கு எதிராக முதல்வராக இருந்து ஹேமந்த் குரல் எழுப்பினார்.

    கேள்வி:-ஜார்கண்ட்டின் வருங்கால முதல்-மந்திரியிடம் பேசுகிறோம் என்று கூறலாமா?

    பதில்:-இப்போதே இல்லை.எனது மாமனார் சிபு சோரன், கணவர் ஹேமந்த், கட்சித் தொண்டர்களின் எண்ணங்கள், லட்சியங்களில் இருந்து நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். தொண்டர்கள் என்னைப் பார்க்கும்போது அவர்கள் மிகவும் உற்சாகமாக உணர்கிறார்கள்.

    கேள்வி:-கட்சியினர் உங்கள் பெயரை முன்மொழிந்தால் முதல்-மந்திரி பொறுப்பை ஏற்க தயாரா?

    பதில்:-மக்கள் என்னை ஒரு போர்வீராங்கனையாக ஆக்கியுள்ளனர். நான் ஒரு போராட்ட குணம் படைந்தவள் என்பதால் அந்த வார்த்தையை விரும்புகிறேன். எனது வாழ்க்கையில் ஒரு புதிய சவாலை ஏற்க தயாராக இருப்பதாக உணர்கிறேன். நான் அதை செய்ய விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×