search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Disaster Response Team"

    • இடுக்கி மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    • தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது.

    பல இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் ஊருக்குள் தண்ணீர் புகுந்திருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இடுக்கி மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதேபோல் இடுக்கி, கோழிக்கோடு, பத்தனம் திட்டா, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை வனப்பகுதியில் கனமழை பெய்வதால் பம்பை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதே போல் மாநிலம் முழுவதும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

    மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் ஆயிரகணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது.

    கனமழை காரணமாக கேரளாவில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். ரூ.8 கோடிக்கும் மேல் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    கனமழைக்கு இதுவரை 150-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து உள்ளன. அவற்றை சீரமைக்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கு மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர் கோடு ஆகிய 5 மாவட்டங்களில் 6 முதல் 11 சென்டிமீட்டர் வரை இன்று மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பத்தனம்திட்டா, கோட்டையம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    ×