search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "No Tourists"

    • சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    கூடலூர்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.

    இதேபோல் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு ரெட்அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அங்கு கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது. குறிப்பாக இன்று ஒரேநாளில் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று காலை 119.90 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 121.80 அடியாக உயர்ந்துள்ளது.

    நேற்று 3579 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 5389 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1133 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2984 மி.கனஅடியாக உள்ளது.

    கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு 102 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 48.29 அடியாக உள்ளது. வரத்து 695 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1778 மி.கனஅடி.

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது.

    கடந்த வாரம் ஆறு நீரின்றி முழுமையாக வறண்டு போனது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததன் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்றில் லேசான நீர்வரத்து ஏற்பட்டது. இந்த நீர்வரத்து வருசநாடு கிராமத்துடன் நின்று போனது.

    இந்நிலையில் வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்ததால் வைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டது. இந்த தண்ணீர் அய்யனார்புரம் கிராமத்தை கடந்து சென்றது. தொடர்ந்து வெள்ளிமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கனமழை காரணமாக சின்னசுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதியான மேகமலை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன்காரணமாக சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்வதால் சின்னசுருளி அருவியில் எந்த நேரத்திலும் வெள்ளம் ஏற்படலாம் என்ற நிலை உள்ளதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மழை குறைந்து அருவியில் சீரான நிலை ஏற்படும் வரையில் இந்த தடை உத்தரவு தொடரும் என்று மேகமலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னசுருளி அருவியில் வரும் நீர்வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ×