search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padmasree Javed Akhtar"

    • பத்மஸ்ரீ ஜாவெத் 5 முறை தேசிய விருதுகளை வென்றவர்
    • ஆணாதிக்க காட்சியமைப்புகள் அதிகம் இருந்தும் அனிமல் வெற்றி பெற்றது

    இந்தி திரையுலகில் கதாசிரியராகவும், பாடலாசிரியராகவும் பல வெற்றி படங்களில் பணியாற்றியவர், ஜாவெத் அக்தர் (Javed Akhtar).

    5 முறை தேசிய விருதுகளை வென்ற ஜாவெத், 1999ல் பத்மஸ்ரீ பட்டம் பெற்றார்.

    தற்போது 78 வயதாகும் ஜாவெத், திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் போதெல்லாம், தனது கருத்துக்களை கூற தயங்காதவர்.

    மகாராஷ்டிரா மாநில அவுரங்கபாத் நகரில் அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஜாவெத்திடம் தற்கால திரைப்படங்களின் தரம் குறித்து கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

    படங்களின் வெற்றிக்கும் தரத்திற்கும் ரசிகர்கள்தான் பொறுப்பு. தற்காலத்தில் வெற்றி பெறும் படங்களின் தரம் குறித்து நான் கவலைப்படுகிறேன். ஒரு திரைப்படத்தில், பெண்ணை அறைவது தவறில்லை என ஒரு கதாநாயகன் கூறி அத்திரைப்படம் பெரும் வெற்றியும் பெற்றால், அது மிகவும் ஆபத்தானது.

    எந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் அதற்கு பொறுப்பேற்று கொள்ள வேண்டும்.

    அப்போதுதான் எந்த வகையான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என கலைஞர்கள் முயற்சி செய்வார்கள். படங்களில் வரும் தார்மீக எல்லைக்குட்பட்ட விஷயங்களை தீர்மானிக்கும் சக்தி உங்கள் கைகளில்தான் உள்ளது.

    இவ்வாறு ஜாவெத் கூறினார்.

    கடந்த டிசம்பர் மாதம் தெலுங்கு திரையுலக முன்னணி இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் உருவாகி இந்தியா மற்றும் உலகெங்கும் வெளியான, "அனிமல்" இந்தி படம் உலகெங்கும் வசூலை அள்ளி குவித்தது. ஆனால், வன்முறை காட்சிகளும், ஆணாதிக்க காட்சியமைப்புகளும் அதில் அதிகம் இடம் பெற்றிருந்தது.

    பல எதிர்மறை விமர்சனங்களையும் மீறி அனிமல் வெற்றி பெற்றது.

    இப்பின்னணியில், திரைப்பட ரசிகர்களை குறித்த ஜாவெத் அக்தரின் கருத்து பார்க்கப்படுகிறது.

    ×