search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palani Thandayuthapani Temple"

    • ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    சோபகிருது முடிந்து இன்று குரோதி வருடம் பிறந்ததைத் தொடர்ந்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    குரோதி வருட தமிழ்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மலைக்கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    அடிவாரம், ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரம் வரை ஆன போதிலும் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    இதே போல் திண்டுக்கல் அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரீஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவாமிக்கும், அம்பாளுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன.

    திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மூலவருக்கு சொர்ண அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட நாணயங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து நாணயங்களையும், பிரசாதங்களையும் பெற்றுச் சென்றனர்.

    • ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
    • பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தக் காவடி எடுத்து அபிஷேகம்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தக் காவடி எடுத்து அபிஷேகம் செய்து வழிபடுவது இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும்.

    இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் வருகிற 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினந்தோறும் காலை தந்தப்பல்லக்கில், முத்துக் குமாரசுவாமி வள்ளி-தெய்வானை வீதி உலா நடைபெறும். அதேபோல் இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாளான 23-ந்தேதி இரவு 7.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து அன்று இரவு வெள்ளிரதத்தில் சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பங்குனி உத்திர விழாவின் சிகர நிகழ்ச்சியானதேரோட்டம் 24-ந்தேதி மாலை 4 மணிக்கு கிரிவீதியில் நடைபெறுகிறது. 27-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், இன்று முதலே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்தும், அலகு குத்தியும் அரோகரா கோஷம் முழங்க பழனி கோவிலுக்கு வரத்தொடங்கியுள்ளனர். இதனால் பழனி கோவில் அடிவாரம், கிரி வீதி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    ×