search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palaverkadu Lake"

    • முகத்துவாரம் பகுதியில் மணல் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கரையின் இருபுறமும் தூண்டில் வளைவுடன் கூடிய கான்கிரீட் தடுப்புகள் அமைத்து தரவேண்டும்.
    • ஏரியில் மீன்பிடித்து தொழில் செய்யும் ஒரு தரப்பு மீனவர்கள் மீன்பிடி துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரியில் ஒரு தரப்பு மீனவர்கள் அங்குள்ள உப்பங்கழி ஏரியிலும், மற்றொரு தரப்பினர் கடலிலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    சுனாமிக்கு பின்னர் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தின் மாற்றம் காரணமாக ஏரியும் கடலும் சந்திக்கும் முகத்துவாரம் பகுதியில் ஏற்பட்டு வரும் மணல் திட்டு குன்றுகளால் அவ்வழியாக படகுகள் கடலுக்குச் செல்லும் பொழுது தரை தட்டி பழுது ஏற்படுகிறது. இதனால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

    இதையடுத்து முகத்துவாரம் பகுதியில் மணல் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கரையின் இருபுறமும் தூண்டில் வளைவுடன் கூடிய கான்கிரீட் தடுப்புகள் அமைத்து தரவேண்டும், கடலுக்கு எளிதாக செல்லவும் விசைப்படகு மூலம் மீன்பிடித் தொழில் செய்வதற்கு ஏற்ப மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என்றும் மீனவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை ஏற்று பழவேற்காட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை தமிழக அரசு கோரி இருந்தது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் நிதி பங்களிப்போடு செயல்படுத்தப்பட உள்ள மீன்பிடி துறைமுகம் அமைக்கும் திட்டம் தொடர்பாக மத்திய கடல் வளம், கடல் சார் பொறியியல் நிறுவன இயக்குனர் வெங்கட் பிரசாத் தலைமையிலான, தமிழக மீன்வளத்துறை தலைமை பொறியாளர் ராஜ் உள்ளிட்டோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட திட்ட மதிப்பீட்டு குழுவினர் பழவேற்காடுக்கு ஆய்வு செய்யவந்தனர்.

    அவர்கள் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக அப்பகுதியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஏரியில் மீன்பிடித்து தொழில் செய்யும் ஒரு தரப்பு மீனவர்கள் மீன்பிடி துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறும்போது, மீன்பிடி துறைமுகத்தை அமைத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் மண்ணால் ஏரி அடைப்படும் என்றும் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து அதிகாரிகள் தரப்பில் கலெக்டர் தலைமையில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் உங்களது கருத்தை பதிவு செய்யுங்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான இடங்களை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது கடலில் மீன்பிடித்து தொழில் செய்யும் ஒரு தரப்பு மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் மேம்பட மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என மத்திய குழுவினரிடம் வலியுறுத்தினர்.

    இது குறித்து மத்திய குழு அதிகாரிகள் கூறும்போது, மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்காக முதற்கட்ட திட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுற்றுச் சூழலுக்கும் மீனவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன்பின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற்று இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

    பழவேற்காடு ஏரியில் தடையை மீறி சவாரி சென்றபோது 2 படகுகள் மோதிக்கொண்டன. இதில் நிலைதடுமாறி நீரில் மூழ்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 9 பேர் உயிர்தப்பினர்.
    செங்குன்றம்:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ளது பழவேற்காடு ஏரி. இந்த ஏரியில் படகு சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி தினந்தோறும் படகு சவாரி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் பழவேற்காட்டில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த மேரி, மைக்கேல், சகாயமேரி, பெரியநாயகி உள்பட 10 பேர் பழவேற்காட்டுக்கு வந்தனர்.

    பின்னர் பழவேற்காடு ஏரியும் - கடலும் கலக்கும் இடமான முகத்துவார பகுதிக்கு படகில் சென்றனர். ஏரியின் நடுவே சென்றபோது சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த மற்றொரு படகு, இந்த படகு மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறி சென்னை சுற்றுலா பயணிகள் 10 பேரும் தண்ணீரில் மூழ்கினர். உடனே ஏரியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்கள் விரைந்து வந்து 10 பேரையும் மீட்டு பழவேற்காட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் காசிமேட்டை சேர்ந்த ஜான் என்பவரது மனைவி மேரி (வயது 40) என்பவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருடன் மீட்கப்பட்ட மற்ற 9 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் போலீசார், மேரியின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தடையை மீறி படகு சவாரி சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×