search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pamban bridge works intensity"

    பலத்த காற்றில் நங்கூரம் அறுந்ததால் அலையில் அடித்துவரப்பட்ட விசைப்படகினால் பாம்பன் ரெயில் பாலத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த படகை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. #PambanBridge #Boat
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பாம்பன் ரெயில் பாலத்தில் உள்ள தூக்குப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அதன் வழியாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் அங்கு பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் ராமேசுவரத்துக்கு இன்னும் ஓரிரு நாட்களில் பாம்பன் பாலம் வழியாக பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து வந்த ஒரு படகு பாலத்தை கடக்கும்போது, பாலத்தின் தூணில் லேசாக மோதியது. ஆனால் இதில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

    இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாம்பனை சேர்ந்த ரைஜன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு வடக்கு கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது.

    திடீரென பலத்த காற்று மற்றும் கடல் அலையின் வேகத்தில் நங்கூரம் அறுந்ததால், அந்த படகு பாலத்தை நோக்கி அடித்து வரப்பட்டது. ஆனால் பாலத்தின் அருகில் உள்ள பாறையில் முட்டி நின்றது. பாலத்துக்கும், அந்த பாறைக்கும் மிகவும் குறைந்த இடைவெளி மட்டுமே உள்ளது. எனவே மீண்டும் பலத்த காற்று வீசினால் அந்த படகு அங்கிருந்து நகர்ந்து பாலத்தில் மோதும் அபாயம் உள்ளது.

    எனவே அந்த படகை நேற்று காலை 3 விசைப்படகுகளில் 30-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வந்து, பாறையில் இருந்து மீட்பதற்காக போராடி வருகின்றனர். பலத்த காற்று மற்றும் கடல் அலையின் வேகம் காரணமாக மதியம் வரை இந்த படகு மீட்கப்படவில்லை. தொடர்ந்து மீனவர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இந்த படகு ரெயில் பாலத்தில் மோதும் ஆபத்து உள்ளதால் உடனடியாக கடலோர காவல்படை மூலம் அந்த படகை அதிகாரிகள் மீட்க வேண்டும் என்று மீனவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். #PambanBridge #Boat
    பாம்பன் தூக்குபாலத்தில் விரிசலை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ராமேசுவரத்துக்கு ரெயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. #PambanBridge #Ramanathapuram

    ராமேசுவரம்:

    மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பனில் 3 கிலோ மீட்டருக்கு கடலில் ரெயில் பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பாலத்தில் ராமேசுவரத்துக்கு நாள் தோறும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இருபிரிவுகளாக உள்ள இந்த பாலத்தில் கப்பல்கள் செல்லும்போது திறக்கப்படும்.

    கஜா புயல் காரணமாக தூக்குப்பாலத்தை திறக்க பயன்படுத்தப்படும் சுழலும் பல்சக்கரங்களில் பழுது ஏற்பட்டது. அப்போது ரெயில்வே ஊழியர்கள் இதனை தற்காலிகமாக சரிசெய்தனர்.

    இந்த நிலையில் நேற்று பாம்பன் தூக்குப்பாலம் இணையும் இடத்தில் பாலம் ஒன்றுக்கொன்று சேராமல் சற்று விரிசல் ஏற்பட்டு தூக்கிக்கொண்டு இருந்தது. தண்டவாளங்கள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.


    இதுகுறித்து தகவலறிந்த ராமேசுவரம் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்களால் முடியவில்லை.இதையடுத்து மதுரை ரெயில்வே கோட்ட என்ஜினீயர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையில் மதுரை- ராமேசுவரம் வந்த பாசஞ்சர் ரெயில் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டது. இதேபோல் ராமேசுவரம்- திருச்சி பாசஞ்சர் ரெயில் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டது. இதன்காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்தனர். அவர்கள் மண்டபத்தில் இருந்து பஸ் மூலம் ராமேசுவரம் சென்றனர்.

    மதுரையில் இருந்து வந்த பொறியாளர்கள் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று மாலை முதல் பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை இந்த பணி நீடித்தது. ஆனால் பணி முடியவில்லை

    இதன் காரணமாக நேற்று மாலை முதல் இன்று காலை வரை அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்தே மற்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. இதனால் ராமேசுவரம் ரெயில் நிலையம் வெறிச் சோடியது.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் தூக்குப் பால விரிசலை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இன்று மதியத்துக்குள் சீரமைப்பு பணி முடிந்தால் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன்பின்னர் ரெயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  #PambanBridge #Ramanathapuram

    ×