search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliament"

    • வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.
    • எனக்கு வழி காட்டியதற்கும், எப்போதும் என் பின்னால் இருப்பதற்கும் சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி.

    கேரளாவின் வயநாடு மற்றும் மகாராஷ்டிராவின் நாந்தெட் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த செவ்வாய்கிழமை அன்று இடைத்தேர்தல் நடந்தது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா களமிறங்கி உள்ளார்.

    இந்த நிலையில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் வயநாடு மக்களின் குரலாக இருப்பேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வயநாட்டின் என் அன்புச் சகோதரிகள் மற்றும் சகோதரர்களே,

    நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றியில் மூழ்கிவிட்டேன்.

    இந்த வெற்றி உங்கள் வெற்றியாக இருப்பதை நீங்கள் உண்மையிலேயே உணர்கிறீர்கள் என்பதையும், உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்துகொண்டு உங்களுக்காக போராடுவதையும் உறுதி செய்வேன். பாராளுமன்றத்தில் உங்கள் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!

    இந்த மரியாதையை எனக்கு வழங்கியதற்கு, மேலும் நீங்கள் எனக்கு அளித்த அபரிமிதமான அன்புக்கு நன்றி.

    ஐக்கிய ஜனநாயக முன்னணில் உள்ள எனது சகாக்கள், கேரளா முழுவதும் உள்ள தலைவர்கள், தொழிலாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் இந்த பிரச்சாரத்தில் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்த எனது அலுவலக சகாக்கள், ஒரு நாளைக்கு 12 மணிநேரம் (உணவு இல்லை, ஓய்வு இல்லை) கார் பயணம் நாம் அனைவரும் நம்பும் லட்சியங்களுக்காக உண்மையான வீரர்களைப் போல போராடியதற்காக உங்கள் ஆதரவிற்கு நன்றி.

    என் அம்மா, ராபர்ட் மற்றும் எனது இரண்டு தங்கங்கள்- ரைஹான் மற்றும் மிராயா ஆகியோருக்கு, நீங்கள் எனக்கு அளித்த அன்புக்கும் தைரியத்திற்கும் இந்த நன்றி போதாது. என் சகோதரன் ராகுலுக்கு, நீங்கள் அனைவரையும் விட துணிச்சலானவர். எனக்கு வழி காட்டியதற்கும், எப்போதும் என் பின்னால் இருப்பதற்கும் நன்றி!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இன்னும் ஏட்டளவில் தான் இருக்கிறதே தவிர முன்னேற்றம் எதையும் காணவில்லை.
    • திராவிட முன்னேற்றக் கழகம் 200 இடங்களுக்கு மிகாமல் நிச்சயமாக வெற்றி பெறும்.

    சென்னையில் திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நடைபெற இருக்கிற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப இருக்கிறோம். தமிழ்நாடு மாநிலம் தொடர்ந்து ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த காலங்களில் நிதிக்குழுவின் பரிந்துரைகளும் பாரபட்சமாக இருந்தாலும் கூட பரிந்துரைத்த அளவிற்கு கூட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    வரி பங்கீட்டு என்பதில் மாநில அரசுகளுக்கு எந்த அளவிற்கு பங்கீடு தர வேண்டுமோ அதில் குறிப்பாக மற்ற மாநிலங்களை விட கூட தமிழ்நாட்டிற்கு தரவில்லை. இப்போது இருக்கும் 41 என்பதை 50 விழுக்காடு தரப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்கனவே தமிழ்நாடு அரசின் சார்பில் நிதிக்குழுவிடம் சொல்லப்பட்டு விட்டது.

    எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இன்னும் ஏட்டளவில் தான் இருக்கிறதே தவிர முன்னேற்றம் எதையும் காணவில்லை. அதற்காக எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.

    இயற்கை பேரிடரின்போது கேட்கப்பட்ட 39 ஆயிரம் கோடிக்கு மாறாக வெறும் 287 கோடி தான் தரப்பட்டு இருக்கிறது.

    ஒன்றிய அரசும் மாநில அரசும் சேர்ந்து செய்ய வேண்டிய திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய பங்குகளை எதையும் தருவதே இல்லை.

    மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு நடந்து கொள்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

    குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களை இப்படி வஞ்சிப்பதன் மூலம் இந்த ஆட்சியின் செல்வாக்கை குறைக்கலாம் என்று அவர்கள் கருதலாம். ஆனால் அது இயலாது.

    அதே வேளையில் மாநில மக்களுக்கு எது தேவை என்று உணர்ந்து செயல்படுத்தக்கூடிய பொறுப்பும் கடமையும் மாநில அரசுக்கு தான் உண்டு.

    அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறபோது அதற்குரிய நியாயமான நிதி ஒன்றிய அரசு வழங்காமலேயே வருவதை இந்த முறை நாங்கள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் முக்கியத்துவம் கொடுத்து எழுப்புவோம்.

    அதானி பிரச்சனை உள்பட பல பிரச்சனைகள் உள்ளன. எல்லா பிரச்சனைகளும் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் எழுப்பப்படும்.

    நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் காரணத்தினால் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் உள்ள உறுப்பினர்கள் மாநில நலன் கருதி நாங்கள் கோரிக்கைகளாக எடுத்துரைப்போம்.

    மாநில தேவைகள், வஞ்சிக்கப்படுவது குறித்து முக்கியத்துவம் கொடுத்து பேசுவோம்.

    மாநில நலன்கள் குறித்தும், மாநில அரசு எப்படி ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படுகிறது என்பதை குறித்தும் இரு அவை உறுப்பனர்களும் எடுத்துரைப்போம்.

    திராவிட முன்னேற்றக் கழகம் 200 இடங்களுக்கு மிகாமல் நிச்சயமாக வெற்றி பெறும். மீண்டும் கழக ஆட்சி என்பதை விட 200 இடங்களுக்கு குறையாமல் பெற வேண்டும் என்பது எங்கள் இலக்கு என்று கூறினார்.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்குகிறது.
    • இந்தக் தொடர் டிசம்பர் 20 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி நாளை காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் பாராளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.

    வக்பு சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வரும்நிலையில், பல்வேறு முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    நவம்பர் 26-ம் தேதி பாராளுமன்ற மையம் மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் 75-ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    • 14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது.
    • இதற்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது.

    லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குழந்தைத் திருமணங்களை ஒழிக்கும் முகாந்திரத்தில் புதிய மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டுள்ளது. கொலம்பியாவில் இதுவரை பெற்றோர் சம்மதத்துடன் 14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது.

    இதற்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது. அவர்கள் சிறுமிகள்! மனைவிகள் அல்ல! என்ற முழக்கம் அந்நாட்டில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இந்த மசோதா மீது தற்போது கொலம்பிய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதிக வாக்குகளுடன் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

     

    இதனை பாராளுமன்றத்தில் வைத்தே அந்நாட்டு எம்.பிக்கள் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ இதில் கையெழுத்திட்ட பின்னர் மசோதா சட்டமாக்கப்பட்டும். இதன்மூலம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதை வரவேற்றுப் பேசிய காங்கிரசை சேர்ந்த கிளாரா ஒப்ரிகான், அவர்கள் பாலியல் பொருட்கள் அல்ல, அவர்கள் சிறுமிகள் என்று தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடான ஈராக் பெண் குழந்தைகளின் திருமண வயதை 9 ஆக குறைக்க தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது.
    • பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

    2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முதன்முறையாக இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுரா குமர திசநாயகா வெற்றி பெற்று அதிபர் ஆனார்.

    அப்போதைய பாராளுமன்றத்தில் அனுரா குமர திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வெறும் மூன்று இடங்கள் மட்டுமே இருந்தன. பெரும்பான்மை இல்லாததால், பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தான் இலங்கை பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது.

     


    225 இடங்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்கு சதவீத அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

    இந்த தேர்தலில், அதிபர் அனுரா குமார திசநாயகே, சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மஹிந்த ராஜபக்சே ஆகியோரின் கட்சிகள் களத்தில் உள்ளன. அதே போல் தமிழ் கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

    வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டவுடன் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்படும். அந்த வகையில் இன்று நள்ளிரவு தொடங்கி, முதற்கட்ட முன்னிலை நிலவரம் தெரியவரும். 

    • மசோதா காலாவதி ஆனபோதிலும், பெண்கள் திருமண வயது பற்றி விவாதிக்க தடையில்லை என்று குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
    • புதிய கல்வி கொள்கை பற்றியும் கூட்டத்தில் பேசப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும் உள்ளது. அதற்கு குறைவான வயதில் திருமணம் செய்து கொள்வது குழந்தை திருமணமாக கருதி, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதற்கிடையே, கடந்த 2006-ம் ஆண்டின் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, கடந்த 2021-ம் ஆண்டு குழந்தை திருமண தடுப்பு திருத்த மசோதா உருவாக்கப்பட்டது. திருமண வயதை ஆண், பெண் இருபாலாருக்கும் 21 ஆக ஒரேமாதிரி நிர்ணயிக்க அம்மசோதா வகை செய்கிறது.

    அது, 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிலைக்குழுவின் பதவிக்காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும், ஆய்வு முடியாத நிலையில், இந்த ஆண்டு 17-வது மக்களவை பதவிக்காலம் முடிவடைந்ததால், மசோதா காலாவதி ஆனது.

    இருப்பினும், பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது பற்றி கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், விளையாட்டு ஆகியவை தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்த உள்ளது. இக்குழு காங்கிரஸ் எம்.பி. திக்விஜய்சிங் தலைமையில் செயல்படுகிறது.

    வருகிற 22-ந் தேதி, பாராளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் நடக்கிறது. அதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர், இளைஞர் குரல் இயக்கத்தின் பிரதிநிதிகள்ஆகியோர் குழுவின் முன்பு ஆஜர் ஆகிறார்கள்.

    பெண்களின் திருமண வயதை உயர்த்துவது பற்றி ஆலோசிப்பதுடன், தேசிய பெண்கள் ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

    மசோதா காலாவதி ஆனபோதிலும், பெண்கள் திருமண வயது பற்றி விவாதிக்க தடையில்லை என்று குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

    புதிய கல்வி கொள்கை பற்றியும் கூட்டத்தில் பேசப்படுகிறது. பள்ளி கல்வித்துறை செயலாளர், பள்ளி ஆசிரியர் அமைப்புகள் ஆகியோர் பள்ளிக்கல்வியில் புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி தெரிவிக்கிறார்கள்.

    சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் பற்றியும், என்.சி.இ.ஆர்.டி., கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி ஆகிய அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

    • கூட்டுக்குழு அடிக்கடி கூடி வக்பு வாரிய திருத்த மசோதாவை பரிசீலித்து வருகிறது.
    • குழுவின் செயல்பாடுகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடக்கத்தில் இருந்தே அதிருப்தியில் உள்ளனர்.

    வக்பு வாரிய சொத்துகள் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் நோக்கில் ஏற்கனவே உள்ள வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்து மசோதா ஒன்றை கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

    இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    எனவே இந்த மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதற்காக பா.ஜனதா எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டது. அதில் ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த கூட்டுக்குழு அடிக்கடி கூடி வக்பு வாரிய திருத்த மசோதாவை பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளையும் கேட்டு வருகிறது.

    அதேநேரம் இந்த குழுவின் செயல்பாடுகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடக்கத்தில் இருந்தே அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக குழுத்தலைவர் ஜெகதாம்பிகா பால் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அத்துடன் பல்வேறு காரணங்களுக்காக இந்த குழுவின் கூட்டங்களில் இருந்து பலமுறை எதிர்க்கட்சியினர் வெளியேறி உள்ளனர். ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளை ஜெகதாம்பிகா பால் மறுத்து உள்ளார். மேலும் குழுவின் பா.ஜனதா எம்.பி.க்களும் எதிர்க்கட்சியினரை குறைகூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கான பாராளுமன்றக்குழுவில் இருந்து முழுமையாக வெளியேறுவது குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பரிசீலித்து வருவதாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளனர்.

    அந்த கடிதத்தில் ஜெகதாம்பிகா பால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். குறிப்பாக அவர் தன்னிச்சையாக செயல்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    அந்தவகையில் குழு கூட்டத்துக்கான தேதி, சாட்சிகளை அழைப்பது போன்றவை தொடர்பாக குழு உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுக்கப்படுவதாகவும், சில நேரங்களில் 3 நாட்கள் தொடர்ந்து கூட்டங்களை நடத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தகுந்த தயாரிப்பு செய்ய கால அவகாசம் கிடைப்பதில்லை என்றும், தயாரிப்பு இல்லாமல் கலந்துரையாடுவது நடைமுறை சாத்தியமில்லை என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பரிசீலிக்கும் பாராளுமன்றக்குழுவும் ஒரு சிறிய பாராளுமன்றம் போலவே செயல்பட வேண்டும் என கூறியுள்ள எம்.பி.க்கள், மாறாக உரிய செயல்முறையை பின்பற்றாமல் அரசு விரும்பியவாறு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வெறும் ஒரு அறையாக கருதக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.

    பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவரின் இத்தகைய செயல்பாடுகளால் இந்த குழுவில் இருந்து நாங்கள் வெளியேறலாம் என்றும் அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த குழுவில் அங்கம் வகித்து வரும் எதிர்க்கட்சி எம்.பி.க்களான ஆ.ராசா (தி.மு.க.), முகமது ஜாவேத், இம்ரான் மசூத் (காங்கிரஸ்), அசாதுதீன் ஓவைசி (மஜ்லிஸ் கட்சி), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி), கல்யாண் பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்) உள்ளிட்டோர் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

    மேலும் இந்த விவகாரத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சந்தித்து பேசவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    • அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு இந்த ஆண்டுடன் 75 ஆண்டு நிறைவடைகிறது.
    • இந்த சிறப்பு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

    புதுடெல்லி:

    இந்திய அரசியல் சாசனம் கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் அது 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி அமலுக்கு வந்தது. அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட நவம்பர் 26-ந் தேதியை கடந்த 2015-ம் ஆண்டு முதல் அரசியல் சாசன தினமாக மத்திய அரசு அனுசரித்து வருகிறது. முன்னதாக அது தேசிய சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வந்தது.

    அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு இந்த ஆண்டுடன் 75 ஆண்டு நிறைவடைகிறது. இதை கொண்டாடும் வகையில் வருகிற நவம்பர் 26-ந்தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த இடத்தில்தான் அரசியல் நிர்ணய சபையால் அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

    • ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
    • ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த முடியும் என நம்புகிறேன்.

    ரெயில்வே துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஜய் வசந்த் தனது தொகுதியில் கிடப்பில் உள்ள ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "இரயில்வே துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது."

    "இதில் நானும் ஒரு உறுப்பினராக தமிழகத்திற்கு, குறிப்பாக குமரி மாவட்டத்தில் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கும் இரயில்வே திட்டங்களை செயல்படுத்த முடியும் என நம்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    • பாராளுமன்ற வளாகத்தில் வாசலின் முன் இருந்த காந்தி சிலை பின்னால் உள்ள பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
    • எம்.பி சு.வெங்கடேசன் மீண்டும் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி இன்று [அக்டோபர் 2] கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காந்தியின் திரு உருவச் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறனர். ஆனால் பாராளுமன்ற வளாகத்தில் வாசலின் முன் இருந்த காந்தி சிலை உட்பட வெவ்வேறு இடங்களுக்கு இருந்த தலைவரின் சிலைகள் கட்டடத்தின் பின்னே உள்ள பூங்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    பாஜக அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. அந்த வகையில் தற்போது காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதை ஒட்டி மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மீண்டும் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    நாடாளுமன்றத்தின் முன்புற வாசலின் முன்னே இருந்த உனது திருவுருவச் சிலை இப்பொழுது பின்புற வாசலுக்கும் பின்னே வைக்கப்பட்டுள்ளது. பாசிஸ்டுகள் அவைக்குள் வருகிற பொழுது உன் முகத்தில் முழிக்கக்கூடாதென நினைக்கிறார்கள். நீ அல்லவோ எம் தேசத்தின் தந்தை. வாழ்க நீ எம்மான்.

    என்றென்றும் வணங்குகிறோம் உன்னை.

    என்று தெரிவித்துள்ளார் 

    • தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கமிட்டியின் தலைவராக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்த குழுவின் உறுப்பினராக நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டள்ளார்.

    பாராளுமன்றத்தின் பல்வேறு துறைகளுக்கான நிலைக்குழு மாற்றியமைக்கப்பட்டன. குறிப்பாக முக்கியமான 24 கமிட்டிகள் மாற்றியமைக்கப்பட்டன. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பாதுகாப்பு விவகார கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கமிட்டியின் தலைவர் பா.ஜ.க. உறுப்பினர் ராதா மோகன் சிங் ஆவார்.

    தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கமிட்டியின் தலைவராக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவின் உறுப்பினராக நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டள்ளார்.

    பெண்கள், கல்வி, இளைஞர்கள் மற்றும் விளயைாட்டு விவகாரங்களுக்கான கமிட்டியின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ் சுகாதார விவகார கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெளியுறவு விவகார கமிட்டியின் தலைவராக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நியமிக்கப்பட்டுள்ளார். நிலகக்கரி, சுருங்கம் மற்றும் ஸ்டீல் விவகார கமிட்டியின் தலைவராக அனுராக் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சோனியா காந்தி எந்த கமிட்டியின் தலைவராகவும், உறுப்பினராகவும் நியமிக்கப்படவில்லை.

    பா.ஜ.க.-வின் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்கள் முக்கியமான கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • பாலமுருகன் கோவிலில் புதிதாக பாலமுருகன் அடிமை சாமிகளுக்கு திருவுரு சிலை நிறுவப்பட்டுள்ளது.
    • பெண்களுக்கு மன அழுத்ததை போக்க கல்வி நிறுவனங்களே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாடாளுமன்றத்தில் செங்கோலை பார்க்கும் போதெல்லாம் ஒரு தமிழராக பூரித்து போவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

    சென்னை அடுத்த தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவக் கல்லூரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் புதிதாக பாலமுருகன் அடிமை சாமிகளுக்கு திருவுரு சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா சவிதா பல்கலைக்கழக வேந்தர் எம்.வீரையன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பாலமுருகனடிமை சிலையை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் குன்னகுடி திருவண்ணாமலை ஆதினம் பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பேருர் ஆதினம்

    சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மன அழுத்ததை போக்க கல்வி நிறுவனங்களே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆன்மீகம் மற்றும் தெய்வீகத்தை சொல்லி தருவதன் மூலமே மாணவர்களின் மன அழுத்ததை குறைக்க வேண்டும் . தமிழகத்தில் உள்ள ஆதினங்களின் ஒத்துழைப்புடன் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார்.

    நாடாளுமன்றத்தில் செங்கோலை காணும் போதெல்லாம் ஒரு தமிழராக தான் மகிழ்ச்சியில் பூரிப்படைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×