என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Parthasarathy Temple"
- கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடி பரப்பில் 6 பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார்.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள், பொங்கல் கொடை, குடியிருப்புகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை போன்ற பல்வேறு முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களின் நலன் பேணப்பட்டு வருகிறது.
2021–2022-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பில், "சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் உபயதாரர் பங்களிப்போடு ரூபாய் 2 கோடி செலவில் பணியாளர் குடியிருப்புகளும், பக்தர்கள் தங்கும் விடுதியும் கட்டப்படும்" என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடி பரப்பில் 6 பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய குடியிருப்பினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார்.
சென்னை, சிந்தாதிரி பேட்டையில் 3.73 ஏக்கர் பரப்பளவு கொண்ட மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உடற்பயிற்சி மற்றும் பொழுது போக்கிற்காக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. சிந்தாதிரிபேட்டை மே தின பூங்கா அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் உள்ளூர் சமூகத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு, பல்வேறு நவீன விளையாட்டு வசதிகளை வழங்குகிறது.
இவ்விளையாட்டு மைதானத்தில் இரண்டு பூப்பந்து உள்விளையாட்டு அரங்கம், 100 பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளுடன் கூடிய சறுக்கு வளையம், 50 முதல் 75 வரை பார்வையாளர்கள் அமர்வதற்கு ஏற்ற குத்துச்சண்டை வளையம், பொழுதுபோக்கு மற்றும் இருக்கைகளுடன் கூடிய பசுமை பகுதிகள், 6 வலை பந்தாட்ட மைதானம், அனைத்து வயதினருக்கான நடைபயிற்சி மற்றும் ஓடுதள பாதைகள், கிரிக்கெட் மற்றும் கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கான மைதானம் மற்றும் பயிற்சி நோக்கத்திற்காக 3 பயிற்சி வலைகள் ஆகியவை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர், கழிப்பறைகள் மற்றும் இதர அத்தியாவசிய வசதிகளை கொண்ட மைதானமாக அமையவுள்ளது.
நிகழ்ச்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு , மத்திய சென்னை தயாநிதி மாறன் எம்.பி. மேயர் பிரியா, மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர் மதன் மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் வருகிற 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களுக்கு தனி வரிசை இந்தாண்டு புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (திங்கட்கிழமை), வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மின்சார வாரியம், சென்னை குடிநீர் வாரியம், தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் வருகிற 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சுவாமி தரிசனம் மேற்கொண்டார்கள். இந்தாண்டு கூடுதலாக 20 சதவீத பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு வைகுண்ட ஏகாதசிக்கு செய்ய வேண்டிய முன் ஏற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போன்றவற்றை செய்து தருவதற்காக ஆலோசனை செய்து இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டோம்.
வைகுண்ட ஏகாதசி அன்று கோவிலுக்கு கிழக்கு கோபுர வாசல் வழியாக பொது தரிசனமும், மேற்கு கோபுர வாசல் வழியாக சொர்க்க வாசல் சேவைக்கு வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களும் அனுமதிக்கப்படுவார்கள். டி.பி. கோவில் தெரு வழியாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களுக்கு தனி வரிசை இந்தாண்டு புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சொர்க்க வாசல் திறப்புக்கு அதிகாலை 2.30 மணிக்கு 1,500 பக்தர்கள் அனுமதிப்பது என்றும், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் 850 நபர்கள் அனுமதிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கின்றது. அதன் பிறகு காலை 6 மணி முதல் இரவு நடை மூடுகின்ற வரையில் பொது தரிசனம் தான் இந்த ஆண்டு கடைபிடிக்கப்பட இருக்கின்றது. அன்றைய தினம் சிறப்பு தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது.
கோவிலில் அன்றைய தினம் கூடுகின்ற பக்தர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்படும் நிலையில் உரிய சிகிச்சை அளிப்பதற்காக கோவிலுக்கு உள்ளேயும், வெளியிலும் 6 சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் தற்காலிக கழிவறைகள் 20 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றது.
காவல்துறையின் சார்பில் 2 துணை ஆணையர்கள் தலைமையில் 3 ஷிப்ட்களாக, 18 உதவி ஆணையர்கள், 54 காவல் ஆய்வாளர்கள், 400-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எந்நேரமும் தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசர கால ஊர்திகள் நிறுத்தப்பட இருக்கின்றன.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 2 கூடுதல் ஆணையர்கள், 6 இணை ஆணையர்கள், 4 துணை ஆணையர்கள், 6 உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் என 150 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
ஆகவே இந்த ஆண்டு, கடந்தாண்டை விட அதிகமான அளவிற்கு பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்வதற்கும், காலை 6 மணி முதல் இரவு நடை மூடுகின்ற வரை பொது தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் ஏற்கனவே தீட்சிதர்கள் ஐகோர்ட்டில் கனக சபை தரிசனத்திற்கு தடை கோரி மனு செய்திருந்தார்கள். ஐகோர்ட்டு நீதிபதிகள் அதற்கு தடை விதிக்கவில்லை, வழக்கு தான் நிலுவையில் இருக்கின்றது. ஆகவே விசேஷ நாட்களில் கனக சபையின் மீதேறுவதில் அசவுகரியம் இருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்து சமய அறநிலையத்துறைக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதையே காரணம் காட்டி கனகசபை மீதேறி தரிசனம் செய்வதற்கு தடை செய்வதை இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்காது.
கோவில்களில் படிப்படியாக சிறப்பு தரிசனக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணமும், இந்து சமய அறநிலையத்துறையின் எண்ணமும் ஆகும். கோவிலில் அனைவரும் சமமாக செல்வதற்காகவும், சிறப்பு தரிசனம் என்று வருகின்றபோது பொது வரிசையில் வருபவர்களுக்கு தரிசனத்திற்கு தாமதம் ஏற்படுவதாலும் விரைவாக தரிசனம் நடைபெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்திற்காகவும் இந்த சிறப்பு தரிசனக் கட்டணத்தை திருவிழா காலங்களில் ரத்து செய்வதென்று முடிவெடுத்தோம்.
திருவண்ணாமலையில் கூட பவுர்ணமி தினத்தன்று சிறப்பு தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டிருக் கின்றது. கடந்த நான்கு மாதங்களாக பவுர்ணமி தினங்களில் அனைவரும் பொது தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்ற சூழல் தவிர்க்கப்பட்டு விரைவாக சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக இருப்பதால் இதனை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இந்த ஆண்டு பார்த்தசாரதி கோவில் சிறப்பு தரிசனக் கட்டணத்தை ரத்து செய்கிறோம்.
மேலும், எங்கெல்லாம் இதுபோன்ற சாத்தியக் கூறுகள் இருக்கின்றதோ அந்தந்த கோவில்களில் விழா காலங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து சிறப்பு தரிசனத்தை படிப்படியாக ரத்து செய்வதற்கு துறை முயற்சிக்கும். பக்தர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது தான் இந்த அரசின் கடமையாகும். கடந்தாண்டை போலவே இந்தாண்டும் பார்த்தசாரதி கோவிலில் மார்கழி மாதத்தில் இசைக் கல்லூரி மாணவ, மாணவிகளின் திருப்பாவை பாசுரம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சேகர்பாபுவும் வந்தோமா.... சாமி கும்பிட்டோமா... என்று போயிருந்தால் பக்தர்கள் மனதில் இடம் பிடித்து இருக்க மாட்டார்.
- கடைசி பக்தரும் தரிசனம் செய்த பிறகு அமைச்சர் சேகர்பாபு சன்னதியில் சென்று சிறிது நேரம் தரிசித்தார்.
பகவானை தரிசித்து பரவசப்பட வந்த பக்தர்கள் அமைச்சரை பார்த்து பரவசப்பட்ட ருசிகர சம்பவம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடந்தது.
வைகுண்ட ஏகாதசி தினமான நேற்று பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பார்த்தசாரதி கோவிலிலும் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் வழியாக வந்து காட்சி தரும் பெருமாளை தரிசிக்கவும் அவரை பின் தொடர்ந்து அதே வாசல் வழியாக சென்று தரிசித்து பலன் அடையவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நள்ளிரவிலேயே குவிந்த பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் விடிய விடிய காத்து கிடந்தது. அறநிலையத்துறையின் கணக்குப்படி முற்பகல் வரை தரிசித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்று தெரியவந்துள்ளது.
சொர்க்க வாசல் திறக்கும் போது கூட்டம் முண்டியடிக்கும். எனவே மாலையில் போகலாம் என்று காத்திருந்தவர்கள் பிற்பகலில் கோவிலில் திரள தொடங்கினார்கள்.
நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் கரை புரண்டது. வரிசையும் நீண்டு கொண்டே சென்றது.
செல்வாக்கு மிக்கவர்கள் மட்டும் தனித்தனி வழிகளில் சென்று வந்தார்கள்.
ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறந்ததும் ரங்கநாதரை தரிசித்து திரும்பிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு...
பார்த்தசாரதியையும் பார்த்து தரிசித்து வர காரில் வந்து இறங்கினார்.
மாலை 6.... கூட்டத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடன் இருந்த அதிகாரிகளிடம் 'யோவ்.....என்னய்யா இப்பவும் லட்சக்கணக்கில் கூட்டம் நிற்கிறது... சொர்க்க வாசல் காலையிலேயே திறக்கப்பட்டிருக்கும் அல்லவா? என்றார்.
அதற்கு "ஆமா சார்.. தரிசனத்துக்காகத்தான் காத்திருக்கிறார்கள்." என்றனர்.
அமைச்சரை பொறுத்தவரை எந்த இடையூறும் இல்லாமல் பத்திரமாக அதிகாரிகள் சாமி சன்னதி வரை அழைத்து சென்று விடுவார்கள். நிம்மதியாக சாமி தரிசனம் செய்து விட முடியும்.
சேகர்பாபுவும் வந்தோமா.... சாமி கும்பிட்டோமா.. என்று போயிருந்தால் பக்தர்கள் மனதில் இடம் பிடித்து இருக்க மாட்டார்.
ஆனால் அவரோ கோவில் பிரதான வாசல் முன்பிருந்து 'கியூ' எதுவரை நிற்கிறது என்று பார்ப்பதற்காக விறுவிறு என்று நடக்க தொடங்கினார். 4 வீதிகளையும் சுற்றி பார்த்து மலைத்து போனார். கூட்டம்.. கூட்டம்... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கூட்டம்.
கியூ இப்படியே ஆமை வேகத்தில் நகர்ந்தால் ஒரு நாள் கூட ஆகலாம் என்று கருதியவர் மீண்டும் முன் வாசலுக்கு விறுவிறு என்று நடக்க தொடங்கினார்.
வரிசையில் காத்து நின்ற பக்தர்கள் "சார்... 2 மணி நேரமாக நிற்கிறோம்.... 3 மணி நேரமாக நிற்கிறோம் என்று பரிதாபமாக கூறினார்கள். கை குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருந்தார்கள்.
கோவில் முன்பு வந்த சேகர்பாபு வி.ஐ.பி. தரிசனம், பரிந்துரைகளுடன் தரிசனத்துக்கு வந்தவர்கள் தனித்தனியாக அனுமதிக்கப்பட்டதை பார்த்தார். உடனடியாக அவற்றை தடை செய்ய சொன்னார்.
அடுத்ததாக மீண்டும் வரிசையாக நின்ற பகுதிக்கு சென்று பக்தர்களை அவரே ஒழுங்குபடுத்தினார். அந்த கூட்டத்தில் முதியோர்கள், கைக்குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகளை பார்த்து விரைவாக செல்ல ஏற்பாடு செய்தார்.
அதன் பிறகு கூட்டம் கொஞ்சம் வேகமாக நகர தொடங்கியது. பின்னர் சன்னதி அருகே வந்து மாற்றுதிறனாளிகள், பெரியவர்கள், கைக்குழந்தையுடன் வந்த பெண்களை மட்டும் சுமார் 1 நிமிடம் வரை சுவாமி முன்பு நின்று தரிசித்து செல்ல ஏற்பாடு செய்தார்.
அதன் பிறகும் வேலை முடிந்தது கிளம்பலாம் என்று நினைக்கவில்லை. கோவிலை சுற்றி நடந்த படியே வரிசையாக நின்றவர்களை பார்த்து ம்ம்.. நகருங்க... நகருங்க.. என்று விரைவாக அனுப்பிக் கொண்டே இருந்தார்.
சரியாக மாலை 6 மணிக்கு நின்றவர் உட்காராமல் அந்த பகுதியில் சுற்றிக்கொண்டே இருந்தார். இரவில் பனி கொட்ட தொடங்கியபோது கொட்டிய பனியிலும் அசையாமல் பெருமாளை தரிசித்தே செல்ல வேண்டும் என்று பக்தர்கள் பிடிவாதமாக வரிசையில் நின்றது போல் கடைசி பக்தர் வரை பெருமாளை பார்த்த பிறகே தானும் இங்கிருந்து செல்வேன் என்று அங்கேயே நின்றார் அமைச்சரும்.
சுமார் 8 மணி நேரத்துக்கு பிறகு அதாவது அதிகாலை 2 மணிக்கு அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்து முடித்தனர். கடைசி பக்தரும் தரிசனம் செய்த பிறகு அமைச்சர் சேகர்பாபு சன்னதியில் சென்று சிறிது நேரம் தரிசித்தார். " உன் பக்தர்களை எல்லாம் விரைவாக உன்னைக்காண அனுப்பி வைத்து விட்டேன்" என்று சொல்லி இருப்பாரோ...?!
பின்னர் நடை சாத்தப்பட்டதும் ஊழியர்களிடம் விடைபெற்று புறப்பட்டார். பக்தர்கள் பலர் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
8 மணி நேரம் உட்காராமல் நின்று கொண்டிருக்க சிரமம் இல்லையா என்று கேட்டதற்கு "சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க முன்பெல்லாம் இதை விட கூடுதலான நேரம் காத்து நின்று இருக்கிறேன். எனவே பகவான் பாதபலத்தை தந்திருக்கிறார்" என்றார் சிரித்த படியே....
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்