search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pasuram-23"

    • காயாம்பூ நிறத்தை உடைய கண்ணனே!
    • உதய காலத்து வெளிச்சம் தோன்றியது.

    திருப்பாவை

    பாடல்

    மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

    சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,

    வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,

    மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

    போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்

    கோயில் நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

    சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த

    காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்

    விளக்கம்:

    வீரமுடைய ஒரு சிங்கம் மழைக்காலத்தில் வெளியே வர முடியாமல் மலையில் உள்ள குகையில் நீண்ட காலம் படுத்து தூங்குகிறது. மழைக்காலம் முடிந்த பின் திடீரென விழித்தது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்க பிடரி சிலிர்த்து நான்கு புறமும் திரும்பிப்பார்த்து கர்ஜனை செய்து குகையில் இருந்து வெளியே புறப்படுகிறது. அந்த சிங்கத்தைப் போல் காயாம்பூ நிறத்தை உடைய கண்ணனே! நீயும் உன் திருக்கோவிலில் இருந்து நாங்கள் இருக்கும் இடத்துக்கு வந்து அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து எங்கள் குறைகளைக்கேட்டு அருள் செய்ய வேண்டும். எங்கள் வாழ்விற்கு வேண்டிய நல்லவை. கெட்டவை அறிந்து அருள்புரிவாயாக!

    திருவெம்பாவை

    பாடல்

    கூவின பூங்குயில் கூவின கோழி

    குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

    ஓவின தாரகை யொளிஒளி உதயத்

    தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்

    தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்

    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

    யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்

    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

    விளக்கம்

    அழகிய குயில்கள் கூவின. கோழிகள் கூவின. மற்ற பறவைகளும் ஒலி எழுப்பின. சங்குகள் முழங்கின. வானத்தில் ஒளி வீசிக் கொண்டிருந்த நட்சத்திரங்களின் ஒளி மறைந்தது. உதய காலத்து வெளிச்சம் தோன்றியது. தேவாதி தேவனே! திருப்பெருந்துறையில் வாழும் சிவபெருமானே! எமக்கு அன்புடன் உன் வீரக்கழல் அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டி அருள வேண்டும். யாராலும் அறிய முடியாத தன்மை உடையவனே! எளிமையானவனே! எம்முடைய தலைவனே! துயில் நீங்கி எழுவாயாக!

    ×