search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pmk city secretary killed"

    கும்பகோணம் அருகே பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருபுவனம் பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் என்ற ஜீம் ராமலிங்கம் (வயது 42). முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர். இவர் திருபுவனம் பகுதியில், சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுவது மற்றும் கேட்டரீங் சர்வீஸ் தொழிலும் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு திருபுவனத்தில் உள்ள தனது கடையை பூட்டி விட்டு ராமலிங்கம் தனது மகனுடன் லோடு ஆட்டோவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    நள்ளிரவு 12.30 மணியளவில் திருபுவனம் புது முஸ்லீம் தெருவில் அவர்கள் சென்ற போது திடீரென அவரை 2 பேர் கும்பல் வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள், ராமலிங்கத்தை, சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்தார். அப்போது அவரது மகன் தடுத்து கூச்சல் போட்டுள்ளார். இதனால் கும்பல் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராமலிங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் இறந்தார்.

    இதற்கிடையே ராமலிங்கம் கொலையுண்ட தகவல் திருபுவனம் பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினரும் திரண்டனர்.

    பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலையுண்ட சம்பவம் பற்றி திருவிடை மருதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமலிங்கத்தின் உடல் பிரேத பரிசோத னைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

    பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருபுவனம் பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், அரியலூர் மாவட்ட சூப்பி ரண்டு சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எஸ்.பிக்கள் அன்பழகன், இளங்கோவன் தலைமையில் டி.எல்.பி.க்கள் கும்பகோணம் கமலக் கண்ணன், திருவிடைமருதூர் ராமச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் திருவிடை மருதூர் மற்றும் திருபுவனம் பகுதிகளில் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ராமலிங்கத்தின் உறவினர்கள் இன்று காலை திருவிடை மருதூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அங்கு கொலை குற்றவாளிகளை கண்டு பிடித்து கைது செய்ய வேண்டும் என்று ஆவேசத்துடன் போலீசாரிடம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ராமலிங்கத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த முஸ்லீம் வாலிபர்கள் சிலருக்கும் நேற்று காலை மதம் மாற்றப்படுவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ராமலிங்கம் அவர்களிடம் ஆவேசமாக பேசி தகராறு செய்ததாக தெரிகிறது.

    இந்த பிரச்சினை காரணமாக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் ராமலிங்கம் மீது திருவிடைமருதூர் போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் சில வழக்குகளும் உள்ளது. ரவுடி போல் திரிந்த ராமலிங்கத்தை வேறு யாராவது கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையுண்ட ராமலிங்கத்துக்கு சித்ரா என்ற மனைவியும், சாம்சந்தர், மலர் மன்னன், இளவரசன் என்ற 3 மகன்கள் உள்ளனர்.

    இதற்கிடையே பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் திருபுவனம் பகுதியில் இன்று காலையில் கடைகள் அடைக்கப்பட்டன. சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.

    முன்னாள் பா.ம.க. செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவிடைமருதூர், திரு புவனம் பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து அதே பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×