என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Principal of Financial Institutions"
- சோதனையில் வெவ்வேறு அறைகளில் 4 கட்டை பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் பல லட்ச ரூபாய் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
- தேர்தல் நேரத்தில் நிதி நிறுவனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகப்படும் இடங்களில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும் பணம், நகைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதன்படி வருமான வரித்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கி உள்ளனர். முறையாக வரி செலுத்தாதவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பவர்கள் பட்டியலை சேகரித்து அவர்களின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் புகார் தெரிவிக்கப்படும் இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி தேர்தல் பறக்கும் படையில் ரூ.10 லட்சத்திற்கு மேல் சிக்கினால் அது குறித்தும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் நாமக்கல் ஈ.பி.காலனியில் வசித்து வருபவர் செல்லப்பன் (வயது 60). தனியார் நிதி நிறுவன அதிபரான இவர், டேங்கர் லாரியும் வைத்துள்ளார். அதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இதனிடையே நேற்று வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான பணத்தை நிதிநிறுவன அதிபர் செல்லப்பன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கலைச்செல்வன், அயாஸ்கான் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசாரும் தொழில் அதிபர் செல்லப்பன் வீட்டிற்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வெவ்வேறு அறைகளில் 4 கட்டை பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் பல லட்ச ரூபாய் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த 7 பேர் கொண்ட நாமக்கல் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் 4 பைகளில் இருந்த ரூபாய் நோட்டுகளை எந்திரம் மூலம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.80 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளும் தங்களுடைய பங்களிப்பாக வீடு முழுவதும் தங்களுக்குரிய பாணியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். வீட்டின் குடிநீர் தொட்டி, பூஜை அறையை திறந்து பார்த்தனர். காலி சிலிண்டரை ஆய்வு செய்தனர். மேலும் வீட்டின் கீழ் தளம், மேல் தளத்தில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் பீரோ, கட்டில், மெத்தை, பாத்திரங்கள், சமையல் அறையில் உள்ள பொருட்கள், அரிசி பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றை திறந்து பார்த்தனர். இதில் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் ரூ.45 லட்சம் கட்டுகட்டாக இருந்தது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டனர். அதற்கு எந்த ஆவணங்களும் இல்லை என தெரிவிக்கவே அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சோதனையின்போது பீரோவில் நிறைய சொத்து ஆவணங்கள் இருந்தன. அவற்றை எடுத்து ஆய்வு செய்தபோது அவை ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் என தெரியவந்தது. இதற்கு உரிய வருமான வரி செலுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் கேட்டனர். இதையடுத்து அந்த சொத்து ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் செல்லப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இதைத்தவிர வேறு இடங்களில் சொத்து, நிறுவனங்கள், கடைகள் உள்ளதா? என வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டனர். அப்போது அவர்கள் கொடுத்த தகவல்களை பதிவு செய்து கொண்டு பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். உரிய ஆவணம் சமர்பிக்கப்பட்ட பிறகு பணம் திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனை இரவு முழுவதும் விடிய, விடிய நடைபெற்றது. இன்று அதிகாலையில் தான் அவர்கள் சோதனையை நிறைவு செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
தொடர்ந்து செல்லப்பன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயரில் உள்ள வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? பரிமாற்றம் எந்த அளவிற்கு மேற்கொள்ளப் பட்டுள்ளது? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தேர்தல் நேரத்தில் நிதி நிறுவனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்