search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry politics"

    • பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் முதலமைச்சர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார்.
    • புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது.

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரசிடம் ஆளுங்கட்சியான பா.ஜனதா தோற்றதையடுத்து கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் பா.ஜனதா அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜனதா மற்றும் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    அதில் பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் முதலமைச்சர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார். ஆளும் அரசில் ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், புரோக்கர்கள் மூலம் அரசு செயல்படுவதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

    தொடர்ந்து 7 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி சென்று தேசிய தலைவர் நட்டா, மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால், கட்சி அமைப்பு செயலர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து முதலமைச்சர் ரங்கசாமி மீது புகார் கூறினர். அதோடு ரங்கசாமி அரசிற்கான ஆதரவை விலக்கி வெளியில் இருந்து ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே பாஜக மாநிலதலைவர் செல்வ கணபதி எம்.பி.யின் செயல்பாட்டை முன்னாள் தலைவர் சாமிநாதன் விமர்சித்தார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சிக்குள் போர்குரல் எழுந்துள்ளது. இதனால் புதுவை தேசிய ஜனநாயக கூட்டணியிலும், பா.ஜனதா கட்சிக்குள்ளும் மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி பாஜக கட்சியின் பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் சுரானா மீண்டும் நியமிக்கப்பட்டார்.

    அவர் எம்.எல்.ஏ.க்கள் புகார், கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    இதற்காக புதுச்சேரிக்கு நாளை (திங்கட்கிழமை) வரும் நிர்மல் குமார் சுரானா காலை 10.30 மணிக்கு கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனையும் செய்கிறார்.

    பின்னர் அவர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்திப்பார் என கூறப்படுகிறது. கூட்டணி மோதல் மற்றும் உட்கட்சி பிரச்சனையில் சமரசம் காணுமாறு பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவுக்கு பா.ஜனதா தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை நாளைய ஆலோசனை கூட்டத்தில் சமரசம் ஏற்படாத பட்சத்தில் பா.ஜனதா மேலிட பார்வையாளர்கள் அடுத்த கட்டமாக புதுவைக்கு வருவார்கள் என கூறப்படுகிறது.

    ×