search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rafale Protest"

    பாராளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் - சோனியா, ராகுல், மன்மோகன் சிங் பங்கேற்பு Sonia Gandhi, Rahul Rafale Protest Outside Parliament
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள கட்சித்தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரசார் காகிதத்தில் செய்யப்பட்ட மாதிரி விமானங்களை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடனும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தற்போதைய ரபேல் ஒப்பந்தத்தை விட முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 126 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம்தான் சிறந்தது என, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட ராணுவ அமைச்சக அதிகாரிகள் குழுவில் இடம்பெற்று இருந்த 7 அதிகாரிகளில் 3 பேர் கூறியதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

    இதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக சாடியிருந்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி 2 வாதங்களை வைத்திருந்தார். அதாவது, சிறந்த விலை மற்றும் விரைவான வினியோகம் என அவர் கூறியிருந்தார். ஆனால் அந்த வாதங்கள் அனைத்தும் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியால் தவிடுபொடியாகி இருக்கிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதைப்போல காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஆங்கில நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி கூறுகையில், ‘திருடன் அகப்பட்டு விட்டார்’ என்று தெரிவித்து இருந்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் போடப்பட்டு இருந்த ஒப்பந்தத்தை விட தற்போதைய 36 விமானங்கள் 55 சதவீதம் விலை அதிகம் எனவும், யூரோபைட்டர் நிறுவனம் வழங்கிய 25 சதவீத தள்ளுபடியை கணக்கில் கொள்ளாததால் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். Sonia Gandhi, Rahul Rafale Protest Outside Parliament


    ×