search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramakrishna Math"

    • ராமேசுவரம் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இரவில் இந்த மடத்தில் ஓய்வெடுக்கிறார்.
    • பிரதமர் தங்குவதையொட்டி அந்த ராமகிருஷ்ண மடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் வாழும் ராம பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ராமரின் புகழை பஜனைகள் பாடியும், கீர்த்தனைகளாக ஒலித்தும், வழிபாடுகள் நடத்தியும் வருகிறார்கள்.

    அந்த வகையில் சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி, கடவுளை வழிபடுவதற்கு நமக்குள் உள்ள தெய்வீக உணர்வை எழுப்பும் விதமாக விதிகளின் படியும், வேதங்களின் படியும் கடந்த 12-ந்தேதி முதல் 11 நாட்கள் விரதத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.

    இதையடுத்து ராமாயணம் மற்றும் ராமருடன் தொடர்புடைய ஸ்தலங்களுக்கு பிரதமர் மோடி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் லெபாக்ஷியில் உள்ள வீர பத்திரர் கோவிலில் தொடங்கிய இந்த பயணம் தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமேசுவரம் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் நிறைவு செய்கிறார்.

    இதற்காக இரண்டு நாள் பயணமாக ராமேசுரத்திற்கு இன்று மாலை வருகை தரும் பிரதமர் மோடி பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். பின்னர் இரவு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அருகில் மேற்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடம் எனப்படும் ராம கிருஷ்ண தபோவனத்தில் தங்குகிறார்.

    இந்த மடத்தில் வழக்கமான வழிபாடுகள், பஜனைகள், 15 நாட்களுக்கு ஒரு முறை ராம்நாம சங்கீர்த்தனம், சமய சொற்பொழிவுகள், கலாச்சாரம் தொடர்பான போட்டிகள் நடத்தப்படுகிறது. எளிமையுடன் கூடிய ஆன்மீகத்தை நாடுவோர் இங்கு தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    அதன்படி ராமேசுவரம் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இரவில் இந்த மடத்தில் ஓய்வெடுக்கிறார். அப்போது தரையில் படுத்து உறங்குகிறார். முன்னதாக அந்த மடத்தில் தங்கியிருக்கும் துறவிகளையும், சன்னியாசிகளையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பிரதமர் தங்குவதையொட்டி அந்த ராமகிருஷ்ண மடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×