search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RCBvKXIP"

    பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 17 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பெங்களூரு அணி. #IPL2019 #RCBvKXIP

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொண்டது. பெங்களூரு அணியில் தோள்பட்டை வலியால் அவதிப்படும் ஸ்டெயினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு டிம் சவுதி சேர்க்கப்பட்டார். இதே போல் பவான் நெகி நீக்கப்பட்டு இந்த சீசனில் முதல்முறையாக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார்.

    ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான விராட் கோலி 3 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். ஆனாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய கோலி 13 ரன்களில், முகமது ஷமி வீசிய ஷாட்பிட்ச் பந்தில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் 43 ரன்களிலும் (24 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), அடுத்து வந்த மொயீன் அலி 4 ரன்னிலும், அக்‌ஷ்தீப் நாத் 3 ரன்னிலும் வெளியேறினர். அப்போது பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கு 81 ரன்களுடன் திண்டாடியது. சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வினும், முருகன் அஸ்வினும் ரன்வேகத்துக்கு அணை போட்டனர்.


     

    இதைத் தொடர்ந்து டிவில்லியர்சும், மார்கஸ் ஸ்டோனிசும் இணைந்து அவசரமின்றி விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 13.1 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. அதன் பிறகு ரன்ரேட்டை உயர்த்த அதிரடி வேட்டை நடத்தினர். இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. முகமது ஷமியின் ஓவரில் டிவில்லியர்ஸ் ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். வில்ஜோனின் இறுதி ஓவரில் இருவரும் இணைந்து 3 சிக்சர், 2 பவுண்டரி விரட்டியடித்தனர். இவர்களின் வாண வேடிக்கையால் ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது.

    20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. தனது 33-வது அரைசதத்தை எட்டிய டிவில்லியர்ஸ் 82 ரன்களுடனும் (44 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்), ஸ்டோனிஸ் 46 ரன்களுடனும் (34 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். கடைசி 3 ஓவர்களில் மட்டும் 64 ரன்கள் திரட்டினர். தனது பந்து வீச்சில் பவுண்டரி, சிக்சர் எதுவும் அடிக்க விடாத சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 ஓவரில் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். முருகன் அஸ்வின், முகமது ஷமி, வில்ஜோன் ஆகியோருக்கும் தலா ஒரு விக்கெட் கிடைத்தது.

    அடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியும் அதிரடியில் மிரட்டியது. கிறிஸ் கெய்ல் 23 ரன்களும் (10 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), மயங்க் அகர்வால் 35 ரன்களும், லோகேஷ் ராகுல் 42 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு நிகோலஸ் பூரனும், டேவிட் மில்லரும் சிறிது நேரம் அச்சுறுத்தினர். 17-வது ஓவர் வரை (3 விக்கெட்டுக்கு 167 ரன்) பஞ்சாப் அணிக்கு வெற்றி வாய்ப்பு தென்பட்டது.

    ஆனால் இறுதி கட்டத்தில் அபாரமாக பந்து வீசிய பெங்களூரு பவுலர்கள் மேலும் 4 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுக்கு 185 ரன்களே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மில்லர் 24 ரன்னிலும், பூரன் 46 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.

    அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கும் பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றியாகும். பஞ்சாப் அணிக்கு 6-வது தோல்வியாகும்.

    #IPL2019 #RCBvKXIP
    ×