search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Removed from House Note"

    • இந்துக்களின் உணர்வுகளை ராகுல் புண்படுத்துகிறார்.
    • அம்பானி, அதானி பேசிய பகுதிகளும் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் கடந்த 24-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 28-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

    ஆனால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அந்த விவாதத்தை தொடங்க முடியவில்லை. இந்தநிலையில் பாராளுமன்ற மக்களவையில் நேற்று இந்த விவாதம் தொடங்கியது.

    மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விவாதத்தில் பங்கேற்று சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மீதும், பா.ஜ.க. தலைவர்கள் மீதும் ஆவேசமாக சுமத்தினார்.

    அவரது ஆவேச பேச்சுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோர் உடனுக்குடன் பதிலடி கொடுத்தனர். இதன் காரணமாக பாராளுமன்றத்தில் நேற்று விவாதத்தில் அனல் பறந்தது.

    ராகுல்காந்தி பேசும் போது, "இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் எந்த நேரமும் பயம், வன்முறை, வெறுப்புணர்வு, பொய்கள் பற்றியே பேசுகிறார்கள். அவர்கள் இந்துக்கள் என்று சொல்ல முடியாது" என்றார். அவர் அப்படி பேசும்போது பா.ஜ.க. எம்.பி.க்களை பார்த்து கைநீட்டி குறிப்பிட்டு பேசினார்.

    இதற்கு பிரதமர் மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பதில் அளித்து பேசுகையில், "ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தை வன்முறையாளர்கள் என்று சொல்வது தீவிரமான விஷயம் ஆகும்" என்றார்.

    அதேபோல மத்திய மந்திரி அமித்ஷாவும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், "கோடிக் கணக்கான இந்துக்களின் உணர்வுகளை ராகுல் புண்படுத்துகிறார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.

    ராகுல் தனது பேச்சின் போது அக்னிவீர் திட்டம் பற்றியும் கடுமையாக குறைகூறி பேசினார். மேலும் தொழில் அதிபர்கள் அம்பானி, அதானி பற்றியும் குறிப்பிட்டார். இந்த பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ராகுல்காந்தியின் பேச்சு பற்றி சபாநாயகர் ஓம்பிர்லா ஆய்வு நடத்தினார். ராகுல் காந்தியின் பேச்சு சபை விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.

    இதையடுத்து ராகுல் காந்தி நேற்று விவாதத்தின் போது பேசிய பேச்சில் ஒரு பகுதியை நீக்குவதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா முடிவு செய்தார். அதன்படி ராகுல் காந்தி பேச்சின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. இன்று காலை அதுபற்றிய தகவல்கள் வெளியானது.

    இந்துக்களை தொடர்புபடுத்தி ராகுல்காந்தி பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் குறித்தும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். குறித்தும் அவர் முன்வைத்த விமர்சனங்கள் நீக்கப்பட்டன. அதுபோல அக்னிவீர் திட்டம் பற்றி அவர் குறைகூறி இருக்கும் பகுதியும் நீக்கப்பட்டது.

    ×