search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rice Horned Elephant"

    • பூப்பாறையில் அரிசிக்கொம்பன் பிரண்ட்ஸ் என்ற பெயரில் தேனீர் கடையும் தொடங்கப்பட்டுள்ளது.
    • யானை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டபோது மனம் உருகி கண்கலங்கினார்.

    மேலச்சொக்கநாதபுரம்:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சாந்தம்பாறை, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 8 வருடங்களாக தனிக்காட்டு ராஜாவாக சுற்றிவந்த அரிசிக்கொம்பன் யானை தாக்கி 10 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்த யானையை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என போராட்டம் நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து கேரளவனத்துறையினர் அரிசிக்கொம்பன் யானை கழுத்தில் சிக்னல் காலர் ஐடி பொருத்தி தேக்கடி வனப்பகுதியில் விட்டனர். அங்கிருந்து லோயர்கேம்ப் வழியாக படிப்படியாக முன்னேறிய அரிசிக்கொம்பன் கடந்த மாதம் 27-ந்தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சுமார் ஒரு வார போராட்டத்திற்கு பின்பு கும்கி யானைகள் உதவியுடன் அரிசிக்கொம்பன் பிடிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டவனப்பகுதியில் விடப்பட்டது.

    ஆனால் மூணாறு பகுதி மக்கள் அரிசிக்கொம்பன் யானையை மீண்டும் தங்கள் பகுதிக்கே கொண்டு வந்து விடவேண்டும் என தொடர் போராட்டம் நடத்தினர். மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்ததாக அரிசிக்கொம்பன் யானையை மீண்டும் இதேபகுதிக்கு கொண்டுவராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தெரிவித்தனர். அவர்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அரிசிக்கொம்பன் யானைக்கு ரசிகர் மன்றமும் தொடங்கப்பட்டது. மேலும் பூப்பாறையில் அரிசிக்கொம்பன் பிரண்ட்ஸ் என்ற பெயரில் தேனீர் கடையும் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மூணாறு அருகே கஞ்சிக்குழி ஊராட்சிக்குட்பட்ட தல்லக்காணம் பகுதியை சேர்ந்த வியாபாரி பாபு என்பவர் அரிசிக்கொம்பன் யானைக்கு 8 அடி உயரத்தில் சிலை அமைத்துள்ளார். சிறுவயது முதலே யானை மற்றும் வனவிலங்குகள் மீது ஆர்வம் கொண்ட இவர் அரிசிக்கொம்பன் யானைமீது மிகுந்த பாசம் கொண்டவராக இருந்து வந்தார். தற்போது அந்த யானை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டபோது மனம் உருகி கண்கலங்கினார். அரிசிக்கொம்பன் யானை வடிவில் ரூ.2 லட்சம் செலவில் அமைத்துள்ள சிலை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பொதுமக்கள் அதனை பாதுகாக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    • மிரண்டு ஓடி வந்த அரிசி கொம்பன் யானை ஒரு பகுதியில் சிறிது நேரம் நின்றது.
    • மூதாட்டி ஒருவர் சாலை ஓரத்தில் நின்றிருந்தார்.

    அரிசி கொம்பன் யானை கம்பம் நகரில் புகுந்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    இது குறித்த காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மிரண்டு ஓடி வந்த அரிசி கொம்பன் யானை ஒரு பகுதியில் சிறிது நேரம் நின்றது. பின்னர் மீண்டும் வந்த வழியே திரும்பி ஓடியது. அப்போது அங்கு மூதாட்டி ஒருவர் சாலை ஓரத்தில் நின்றிருந்தார். அரிசி கொம்பன் யானை அவரை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து சென்ற காட்சி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

    • சுருளி அருவி பகுதிக்கும் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
    • விரைவில் யானை வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என தெரிவித்தனர்.

    உத்தமபாளையம்:

    இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தம்பாறை, தேவிகுளம் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதிகளில் அரிசிக்கொம்பன் யானை சுற்றி வந்தது. 108 வீடுகள், 20 ரேசன் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளது. மேலும் 11க்கும் மேற்பட்டோரை உயிர் பலி வாங்கியதால் யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மயக்க ஊசி செலுத்தி அரிசி கொம்பனை வனத்துறையினர் பிடித்து குமுளி பகுதியில் கொண்டுவிட்டனர். ஆனால் அதன்பிறகு அரிசிக் கொம்பன் மாவடி, வட்ட தொட்டி வனப்பகுதிக்கு மேல் உள்ள மேகதானமெட்டு வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது.

    கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேகமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானை மீண்டும் பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்குள் வந்தது. அதன்பின் குமுளிரோசாப்பூ கண்டம் பகுதியில் புகுந்தது. ஜி.பி.எஸ்.சிக்னல் மூலம் அரிசிக்கொம்பன் யானை நடமாட்டத்தை கண்டறிந்த வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டும், வேட்டுகளை வெடிக்கச்செய்தும் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்பு தேக்கங்காடு வழியாக கம்பம் பகுதிக்குள் புகுந்தது.

    நேற்று காலை கம்பம் நகருக்குள் வந்த அரிசிக்கொம்பன் யானையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனியார் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து அங்கு எதுவும் கிடைக்காததால் அருகில் இருந்த டாஸ்மாக் கடையையும் நோட்டமிட்டு பின்னர் தெருவில் கோவில் யானை போல ஒய்யாரமாக நடந்து வந்தது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியது. யானை ஊருக்குள் புகுந்த விபரம் தெரிய வரவே வனத்துறையினர் விரைந்து வந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    இதனால் கம்பம் நகரில் பொதுமக்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். தொடர்ந்து யானை ஊருக்குள் ஆக்ரோசத்துடன் சென்றது. யானை தாக்கி பால்ராஜ் என்பவர் படுகாயமடைந்தார். உடனே வனத்துறையினர் அவரை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர் கண்காணித்து வந்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் கம்பம் பைபாசில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானை சுருளிப்பட்டி சாலையில் சென்றது. அங்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தோட்டத்தில் முகாமிட்டு பின்னர் சுருளி அருவி பகுதிக்கு சென்றது. தொடர்ந்து ரேடியோ காலர் மூலம் கண்காணித்த போது அரிசி கொம்பன் யானை மேகமலை ஹைவேவிஸ் பகுதி நோக்கி சென்றது தெரியவந்தது.

    அரிசி கொம்பன் யானையை மயக்க மருந்து செலுத்தி பிடித்திட கால்நடை டாக்டர்கள் மற்றும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். முதுமலையில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் முத்து என்ற மற்றொரு கும்கி யானையும் வர உள்ளது. யானையை பிடிக்க ஏதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கம்பம் நகரில் இன்று 2-வது நாளாக 144 தடை உத்தரவு தொடர்கிறது. மேலும் சுருளிப்பட்டி, சுருளி அருவி பகுதிக்கும் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. 6 கி.மீ தொலைவுக்கு முன்பே வனத்துறையினர் மற்றும் போலீசார் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

    பொதுமக்கள் அரிசி கொம்பன் யானைக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். படம் பிடிப்பது மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது குறித்து தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே கூறுகையில் வனத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் அடங்கிய குழுவினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.

    யானையை காட்டுக்குள் அனுப்பும் வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார். அரிசி கொம்பன் யானை நடமாட்டம் குறித்து அறிந்ததும் அமைச்சர்கள் இ.பெரியசாமி, ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் பொதுமக்கள் அச்சமின்றி இருக்க வேண்டும். விரைவில் யானை வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என தெரிவித்தனர். இருந்தபோதும் சுருளி அருவி பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ×