search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs. 200 crore club"

    • இத்திரைப்படத்தில் வில்லனோ, சண்டை காட்சிகளோ கிடையாது
    • பெரும்பாலான பாடல்களை எஸ்பிபி மற்றும் லதா மங்கேஷ்கர் பாடியிருந்தனர்

    கடந்த வருடம் வெளியான திரைப்படங்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மிகப்பெரும் வெற்றி பெற்றவைகளில் பெரும்பாலானவை "ஆக்ஷன் திரில்லர்" ரகத்தை சேர்ந்தவை.

    பெரிய ஹீரோ, மிரட்டும் வில்லன் கதாபாத்திரம் மற்றும் அதிர வைக்கும் பிரமாண்ட சண்டை காட்சிகள் இடம் பெற்றால்தான் திரைப்படங்களை காண இளைஞர்கள் திரையரங்குகளுக்கு வருவதாகவும், வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் பல ஊடகங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இவை இல்லாத திரைப்படங்கள் ஓரளவு வசூலை செய்தாலும் பெரும் வெற்றியை பெற முடிவதில்லை.

    முதல்முதலாக ரூ.200 கோடி வசூல் செய்த இந்திய திரைப்படத்தில் சண்டை, வன்முறை, இரட்டை அர்த்த நகைச்சுவை, ஆணாதிக்க காட்சிகள் எதுவும் இன்றி மென்மையான குடும்ப கதையை களமாக கொண்டது.


    1994ல் வெளிவந்த, ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் (Rajshri Productions) தயாரிப்பில் சூரஜ் பர்ஜாத்யா எழுதி, இயக்கிய இந்தி திரைப்படமான, "ஹம் ஆப்கே ஹை கோன்" (Hum Aapke Hain Koun), இந்தியாவில் ரூ.200 கோடிக்கும் மேல் (ரூ.210 கோடி) வசூல் செய்த முதல் திரைப்படமாகும்.

    1994 ஆகஸ்ட 4 அன்று தெற்கு மும்பை பகுதியின் லிபர்டி திரையரங்கில் வெளியாகி அங்கு மட்டுமே 100 வாரங்களுக்கும் மேலாக ஓடியது.

    குறைந்த அளவு திரையரங்குகளில் வெளியானாலும், வாய்மொழி விளம்பரத்திலும், குடும்பம் குடும்பமாகவே பார்க்க சென்ற மக்களின் அமோக வரவேற்பிலும், பிற திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டது.


    தமிழில் "நான் உங்களுக்கு யாராம்?" எனும் பொருள்படும் தலைப்பில் வெளியான இத்திரைப்படத்தின் தயாரிப்பு செலவு ரூ.6 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    "ஹம் ஆப்கே ஹை கோன்" திரைப்படத்தில் சல்மான் கான் கதாநாயகனாகவும், மாதுரி தீட்சித் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.

    பிரேம் எனும் இளைஞரும் அவரது அண்ணியின் தங்கையான நிஷாவும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். அவர்கள் எண்ணம் நிறைவேறியதா என்பதை குடும்ப கொண்டாட்டங்களின் பின்னணியில் கூறும் ஒரு நேர்த்தியான கதையமைப்பே இப்பட வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

    ராம்லட்சுமண் இசையில் 14 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. பெரும்பாலான பாடல்களை எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் லதா மங்கேஷ்கர் பாடியிருந்தனர்.


    இனிமையான பாடல்கள் இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

    தற்போது இந்தியாவின் முன்னணி பாலிவுட் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் சல்மான் கான் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் ஒரு சண்டை காட்சி கூட கிடையாது என்பது மற்றுமொரு ஆச்சரியம் அளிக்கும் தகவல்.

    இதில் பிரேம் வேடத்தில் நடிக்க முதலில் தயாரிப்பாளர்கள் தேர்வு செய்த நடிகர், அமீர் கான். ஆனால், இக்கதை தன்னை பெரிதாக ஈர்க்கவில்லை என அவர் கூறியதால், வாய்ப்பு சல்மான் கானுக்கு சென்றது.

    "ஹம் ஆப்கே ஹை கோன்" பட வசூல் சாதனையை, சுமார் 15 வருடங்கள் கடந்து அமீர் கான் கதாநாயகனாக நடித்து வெளியான "த்ரீ இடியட்ஸ்" ரூ.300 கோடி வசூல் செய்து முறியடித்தது.

    ×