search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samosa shop"

    • டீக்கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் இந்த சமோசா விற்கப்பட்டு வருகிறது.
    • உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் கெட்டுப் போன நிலையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பேகம்பூர், அரண்மனைக்குளம் ரோடு, தெற்கு ரத வீதி, பாறைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சமோசா தயாரிக்கும் கடைகள் செயல்பட்டு வருகிறது.

    இங்கிருந்து திண்டுக்கல் மற்றும் இதனை சுற்றியுள்ள 20 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராம பகுதிகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதிகாலை முதல் இருசக்கர வாகனத்தில் கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். டீக்கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் இந்த சமோசா விற்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் விற்கப்பட்டு வருகிறது. இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சுகாதாரமற்ற முறையில் சமோசாக்கள் தயாரிக்கப்படுவதாக பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்படி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் நகர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இன்று காலை 27 வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு ரதவீதி, நாராயணபிள்ளை தெருவில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். தங்கவேல், பரமசிவம் என்ற 2 நபர்களின் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் சமோசா தயாரித்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    மேலும் உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் கெட்டுப் போன நிலையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி சாக்கடையின் அருகே காய்கறிகள் வைத்து சுகாதாரமற்ற முறையில் பயன்படுத்தி வந்தனர். இதனை அடுத்து 2 கடைகளுக்கும் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு திண்பண்டங்களை சுகாதார மற்ற முறையில் தயாரித்து வினியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    ×